Wednesday, October 2, 2013

முஸாஃபர் நகரில் கலவரக்காரர்களுக்கு போலீஸ் உதவியது: வழக்குரைஞர் என்.டி.பஞ்சோலி விசாரணை அறிக்கை!



போலீஸ் ஒத்தாசையுடன் ஜாட் இனத்தவர்கள் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலே கடந்த மாதம் முஸஃபர் நகரில் நடந்த கலவரம் என்று பி.யு.சி.எல் என்ற மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி வழக்குரைஞர் என்.டி.பஞ்சோலி தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடக்கும் வேளையில் போலீஸை உதவிக்காக அழைத்தபோது யாரும் தயாராகவில்லை. ஆனால், அதற்கு பதிலாக ஜாட் இனத்தவர்களுடன் இணைந்து கொள்ளை, வன்முறைகளில் போலீஸ் பங்கேற்றது என்று பாதிக்கப்பட்டவர்கள் விவரித்ததாக முஸஃபர் நகரில் பொதுமக்கள் விசாரணைக்கு தலைமை வகித்த வழக்குரைஞர் என்.டி.பஞ்சோலி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். என்.சி.ஹெச்.ஆர்.ஓ அமைப்பின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை விபரங்களையும் செய்தியாளர்கள் சந்திப்பில் பஞ்சோலி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது; ‘கலவரம் தீவிரமாகுவதை முன்கூட்டியே அறிவதிலும், தடுப்பதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் போலீஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதனை முஸாஃபர் நகர் பொறுப்பு சீனியர் எஸ்.பி கல்பனா சக்ஸேனா உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான முஸாஃபர் நகரில் போலீஸ் படையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பெயரளவிலேயே உள்ளன. சுதந்திரத்திற்கு பிறகு பணியில் அமர்த்தப்பட்ட 66 எஸ்.பி.எஸ்.எஸ்.பிக்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர் ஆவார்.
கலவரத்தின் பயங்கரம் குறித்து உண்மை அறியும் குழுவின் விசாரணைக்குப் பிறகு முஸாஃபர் நகர் அகதிகள் முகாமில் ஏற்பாடுச் செய்த பொதுமக்கள் விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்தனர்.
எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்ய கூட போலீஸ் தயாராகவில்லை. கலவரம் முடிந்த பிறகு முகாம்களுக்கு சென்று யாருக்கேனும் புகார்கள் உண்டா? என்று விசாரணை நடத்தும் பாணியை போலீஸ் கையாண்டுள்ளது. ஒரு எஃப்.ஐ.ஆரில் பல்வேறு நபர்களின் புகார்களை ஒன்றிணைத்து போலீஸ் பதிவுச் செய்துள்ளது.
பாலியல் பலாத்காரமும், கொலைகளும் அரங்கேறிய பிறகும் வெறும் சாதாரண குற்றங்களைத்தான் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர். முகாம்களில் அதிகமானோர் பெண்களாக இருந்தபோதும் மகளிர் போலீஸ் ஒருவரைக் கூட அழைக்காமல் தான் போலீஸார் புகாரை கேட்க வந்துள்ளனர்.
குஜராத்தில் நடந்தது போலவே 10 வயதுள்ள குழந்தையை பெற்றோரின் முன்னால் வைத்து கொலைச் செய்த கொடூரமான சம்பவங்கள் முஸாஃபர்நகரில் அரங்கேறியுள்ளது.
ஜாட் இனத்தவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த சங்க்பரிவாரம் கருவியாக பயன்படுத்தியுள்ளது என்பதுதான் இக்கலவரத்தின் சிறப்பு.ஜாட்டுகள் ஒருபோதும் தங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்று நம்பவில்லை என்று முஸ்லிம்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றமாக சில ஜாட்டுகள் கொலை மிரட்டலையும் புறக்கணித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அபயம் அளித்த நிகழ்வுகளும் உண்டு.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை கண்டுபிடித்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவோம் என்று அரசு கூறுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் கடுமையான அநீதியாகும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு வகுப்புவாத கலவர தடுப்பு மசோதாவை நிறைவேற்றவேண்டும். இவ்வாறு பஞ்சோலி கூறினார்.
பொதுமக்கள் விசாரணைக்கு (Public Hearing) பேராசிரியர் நந்தினி சுந்தர் (டெல்லி பல்கலைக்கழகம்), வழக்குரைஞர் கே.பி.முஹம்மது ஷெரீஃப் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ தேசிய துணைத் தலைவர்), வழக்குரைஞர் விஜேந்திரகுமார் கஸானா (டெல்லி), வழக்குரைஞர் ஒய்.கே.ஷபானா (சி.பி.டி.ஆர். மும்பை), வழக்குரைஞர் ஷரஃபுத்தீன் (கான்பூர்), சுவாதி சின்ஹா (ஸ்டுடன்ஸ் ஆக்டிவிஸ்ட், டெல்லி), வழக்குரைஞர் அமித் (டெல்லி), முல்சந்த் (பத்திரிகையாளர், டெல்லி), டாக்டர் ராகுல்சிங் (பி.ஏ.எம்.சி.இ.எஃப், டெல்லி) ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்ட மாஜிஸ்ட்ரேட் கோசல்ராஜ் சர்மா, எஸ்.எஸ்.பி கல்பனா சக்ஸேனா, மருத்துவமனை சூப்பிரண்ட் டாக்டர் சுபாஷ் சிங் ஆகியோரை சந்தித்து என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் உண்மை அறியும் குழுவினர் விவரங்களை சேகரித்தனர்.
என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் உண்மை அறியும் குழுவில் அதன் செயலாளர் ரெனி ஐலின், வழக்குரைஞர் ஒய்.கே.ஷபானா, வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப்(தமிழ்நாடு), வழக்குரைஞர் விஜேந்திரகுமார் கஸானா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
Info : newindia.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza