Sunday, October 6, 2013

வக்ஃப் சொத்துக்களை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும்!: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கோரிக்கை


all

புதுடெல்லி: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுக்குழு கூட்டம், டெல்லி ஜாமிஆ நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இதில் அடுத்த இரண்டு (2013-2014) வருடத்திற்கான தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய நிர்வாகிகள்
தலைவர்: மௌலானா உஸ்மான் பெய்க் ரஷாதி (கர்நாடகா)
துணைத் தலைவர்கள்: முஹம்மது ஈஸா மன்பயீ (கேரளா), காஸி ஹிஸ்புர் ரஹ்மான் சாஹிப் (மத்திய பிரதேசம்)
பொதுச் செயலாளர்கள்: ஷாகுல் ஹமீது பாக்கவி (தமிழ்நாடு), மௌலானா அஹமது முஹம்மது நத்வீ ( உத்திர பிரதேசம்)
செயலாளர்கள்: மௌலானா அமானுல்லாஹ் பாக்கவி (கேரளா), மௌலானா ஸுல்பிகர் அலீ காஸிமி (உத்திர பிரதேசம்), முப்தி ஹனீஃப் அக்ரார் காஸிமி (கோவா), மௌலானா மினாருல் இஸ்லாம்
பொருளாளர்: மௌலானா ஷாஹித் சித்தீக் கோத் (மஹாராஷ்ட்ரா)
தேசிய செயற்குழு உறுப்பினர்கள்: மௌலானா அஷ்ரஃப் காரமனா (கேரளா), மௌலானா அஸ்ரார் அஹமது ஃபலாஹி (ராஜஸ்தான்), மௌலானா அப்துல் கபூஃர் மன்பயீ (தமிழ்நாடு), மௌலானா அப்துர் ரஹ்மான் ஃபைஸி (கேரளா), மௌலானா யூசுஃப் (கர்நாடகா) ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தப் பொதுக்குழுவில் ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், பீஹார், டெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக முஸஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும் என்று கோரி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைமையில் ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த தர்ணாவில் முஸ்லிம் தலைவர்கள், இமாம்கள், கல்வியாளர்கள் உட்பட 14 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். இதில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களை இழந்தவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய துயரங்களை பகிர்ந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
தேசிய பொதுக்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. வக்ஃப் சொத்துக்கள்: வக்ஃப் சொத்துக்களை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும். வக்ஃப் மசோதாவின்படி சொத்துக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. முஸ்லிம் இடஒதுக்கீடு: முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டின் விஷயத்தில், அரசின்  செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. உடனடியாக சச்சார் கமிஷன் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
3. பாபரி மஸ்ஜித்: பாபரி மஸ்ஜித் 21 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நீதி. பாபரி மஸ்ஜித் பிரச்னை என்பது முஸ்லிம்களுக்கான பிரச்னை மட்டுமல்ல. அது, இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு ஏற்பட்ட சோதனையாகும். காங்கிரஸ் அரசு வாக்களித்தபடி பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டித் தர வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
4. அப்பாவி முஸ்லிம்கள் கைது: கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும். முஸ்லிம்கள் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டு, பின்னர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்படுகின்றனர். இதனால், அவர்களின் வாழ்க்கை பாழாகின்றது. முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 5லிருந்து 16 வருடங்களுக்குப் பிறகு அப்பாவிகள் என விடுதலை செய்யப்படுகின்றனர்.  மத்திய அரசு குற்றவாளிகள் இல்லை என விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்வதை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும் என்ற  உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் கருத்தை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வவேற்கின்றது. இது ஒரு நல்ல முயற்சியாகும். மேலும், இது விஷயத்தில் முயற்சி எடுக்க வேண்டும்.
6. முஸஃபர்நகர் கலவரம்: முஸஃபர்நகர் கலவரத்தை சுதந்திரமான நீதி விசாரணை செய்ய வேண்டும். உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இது போன்ற கலவரங்கள் நிகழாமல் இருக்க வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா இயற்றப்பட வேண்டும்.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேசிய அளவில் இமாம்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது.

- thoothuonline.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza