சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற தமிழக சட்டசபையின் தீர்மானம் வரவேற்கதக்கது என்று எஸ்.டி.பி.ஐ. கூறியுள்ளது. இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது, இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பது எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை தமிழக சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.
அதனடிப்படையில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தில், “இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் 15-ந் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இம்மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ள கூடாது. சிங்களருக்கு இணையாக தமிழர்களும் வாழ உரிய நடவடிக்கையை இலங்கை அரசு எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத நிலையில் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. இதற்காக தமிழக அரசிற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் நெல்லை முபாரக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- thoothuonline.com
0 கருத்துரைகள்:
Post a Comment