Saturday, October 26, 2013

கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐ,எஸ்,ஐ தொடர்பு! - ராகுலின் சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு கண்டனம்!



முஸாஃபர் நகரில் வகுப்புவாதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ தொடர்பு இருப்பதாக கூறிய ராகுல்காந்தியின் அறிக்கை  முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
முஸாஃபர் நகரில் வகுப்புவாதக் கலவரத்தால் சொந்தங்களையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் முஸ்லிம்களுக்கு ஐ.எஸ்.ஐ தொடர்பு இருப்பதாக கூறிய ராகுலின் அறிக்கைக்கு முஸ்லிம் அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கான் கூறும்போது; ‘ராகுலின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக முஸ்லிம் இளைஞர்களின் நேர்மையில் சந்தேகம் ஏற்படும். முசாஃபர்நகர் கலவரத்துக்கு பாஜகதான் காரணம் என்று ஒரு நாள் குற்றம்சாட்டுகிறார். மறுநாள் முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம்சாட்டுகிறார். அவரது பொறுப்பற்ற பேச்சுக்கு முஸ்லிம் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் கேட்கவில்லை என்றால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற பேச்சு ராகுலின் முதிர்ச்சியின்மையை காண்பிக்கிறது என்றார்.
முஸ்லிம் சமுதாயத்தினரை தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அதுல் அஞ்சன் கூறினார். இதன் மூலம் முஸ்லிம்கள் மீது ராகுல் வெறுப்பை ஏற்படுத்துகிறார். ராகுல் காந்தியின் பிரசார அறிக்கைகளை யார் தயாரிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதன் மூலம் மீண்டும் பதற்றத்தை அவர் தூண்டுகிறார் என்றார் அதுல் அஞ்சன்.
ராகுல் அறிக்கை முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது என்று உத்தரபிரதேச மாநிலத்தின் முக்கிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஷியா முஸ்லிம் மார்க்க அறிஞர் மவ்லானா ஸைஃப் அப்பாஸ் நக்வி கூறும்போது; ‘காங்கிரஸ் தலைவரின் அறிக்கை, முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது மட்டுமல்ல. வகுப்புவாத சக்திகளுக்கு கூடுதல் பலத்தை அளிக்கக் கூடியது. இது அமைதியை விரும்பும், தேசப் பற்றாளர்களான லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மீதான மோசாமான அறிகுறி. அகதிகளின் வேதனையை புரிந்துகொள்வதற்கு பதிலாக அதனை அரசியல் மயமாக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார்.’ என்றார்.
பிரபல முஸ்லிம் மார்க்க அறிஞர்களான ஷஹர் காஸி, மவ்லானா அபுல் இர்ஃபான், மியான், மியான் ஃபரன்கிமஹல்லி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘ராகுல் காந்தி நிபந்தனையின்றி உடனடியாக மன்னிப்புக் கோரவேண்டும். முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் வெளியிடப்படும் இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவது காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியின் தலைவருக்கு உகந்தது அல்ல.’ என தெரிவித்துள்ளனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் ஸயீத் கூறுகையில்; ‘முஸ்லிம்களின் தேசப்பற்றை கேள்வி எழுப்பும் வகையில் ராகுலின் அறிக்கை அமர்ந்துள்ளது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி, குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. இத்தகைய அறிக்கைகள் ஒடுக்கப்பட்ட மக்களை போலீஸ் வேட்டையாட காரணமாகும்.
முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை காலங்காலமாக உளவுத்துறை ஏஜன்சிகள் நடத்தி வருவது ராகுலுக்கு தெரியாதா? நாட்டை வளமான தேசமாக மாற்ற தன்னால் இயலாது என்பதை தனது அறிக்கையின் மூலம் ராகுல் தெரிவித்துள்ளார்.
2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சமூக நல்லிணக்கத்தை தகர்க்கவே காங்கிரசும், பா.ஜ.கவும் முயற்சிக்கிறது.’ என கூறியுள்ளார்.
பா.ஜ.கவின் ஷாநவாஸ் ஹுஸைனும் ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-Newindia.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza