கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்காளின் என்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
நைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வெஸ்ட் கேட்’ என்ற வணிக வளாகத்திற்குள் 10 க்கும் மேற்ப்பட்ட தீவிரவாதிகள் நேற்று முன்தினம் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கென்ய ராணுவத்தினர் விரைந்து சென்று வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக் கைதிகளாக இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் இந்தியா, அமெரிக்கா, பிரான்சு, கனடா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பலியான இந்தியர் சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் ஆவார். இவர் கென்யாவில் உள்ள மருந்து கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இன்னொருவர் பரம்ஷு ஜெயின் (8) என்ற சிறுவன். இந்த சிறுவனின் தந்தை நைரோபியில் உள்ள ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்.
மேலும் இந்த தாக்குதலில் ஸ்ரீதர் நடராஜனின் மனைவி மஞ்சு என்ற மஞ்சுளா (36), பரம்ஷு ஜெயினின் தாயார் முக்தா ஜெயின், 12 வயது சிறுமி பூர்வி ஜெயின், நடராஜன் ராமச்சந்திரன் ஆகிய 4 இந்தியர்களும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு சோமாலியாவில் இயங்கும் அல்–ஷபாப் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2011 ம் ஆண்டில் சோமாலியாவுக்குள் கென்யா ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாக்குதல் நடந்ததாக அந்த இயக்கம் அறிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள கென்யா அதிபர் உகுரு கென்யட்டா, தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
Info : Newindia.tv
0 கருத்துரைகள்:
Post a Comment