Saturday, September 14, 2013

சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறல்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!



கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது மத்திய, மாநில, பிரதேச அரசுகள் நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அமர்வு பரிசீலித்து இந்த உத்தரவை வழங்கியது.

டெல்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் சுமா செபாஸ்டியன் தாக்கல் செய்த பொதுநல மனுவில்; ‘சிறை சீர்திருத்தம் தொடர்பாக 1983 ஆம் ஆண்டு முல்லா குழுவினர் அளித்த பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டும், நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
விசாரணைக் கைதிகளாக உள்ளவர்கள் அவர்கள் செய்த குற்றச்சாட்டுகளுக்கான உரிய தண்டனை காலத்தை பாதிக்கு மேல் கழித்துவிட்டால் அவர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
சிறையில் உள்ள கைதிகளுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதில்லை. கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதால் சிறைகளில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.
நாடு முழுவதும் சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளின் விவரங்கள் துல்லியமாக சேகரிக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- New india.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza