Thursday, September 26, 2013

ஹைதராபாத் சமஸ்தானம் இணைப்பு: மிகப் பெரிய முஸ்லிம் இனப்படுகொலை குறித்து வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!


புதுடெல்லி: இந்தியா 1947ம் ஆண்டு பிரிக்கப்பட்டபோது, இடம் பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது.
 
ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு தெரியாமல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது.

 
இது நடந்தது 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில். அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தென் இந்தியப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். சிலர் இந்திய இராணுவத்தினரால் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
எனினும் அப்போது அரசால் அமைக்கப்பட்ட ஒரு விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்படவேயில்லை. தொடர்ச்சியாக வந்த இந்திய அரசுகள் அந்த அறிக்கையை மூடி மறைக்கவே முயன்றன என்று விமர்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
இந்த வன்முறைகள் அப்போது ஹைதராபாத் என்று அழைக்கப்பட்ட தனி ராஜ்ஜியத்தில் நடந்தன. பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற சுமார் 500 ராஜ்யங்களில் ஹைதராபாதும் ஒன்றாக இருந்தது.
 
ஆனால் விடுதலைக்கு பின்னர், பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கு இணங்கின. ஆனால் ஹைதராபாதின் முஸ்லிம் நிஜாமோ, தனி ராஜ்யமாக இருப்பதை வலியுறுத்தினார்.
இது புதுடெல்லியிலுள்ள பெரும்பாலும் இந்து தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இரு பகுதியிலும் உள்ள ஆட்சியாளர்களுக்கும் இடையே நீடித்த உரசல்களை அடுத்து, புதுடில்லி அரசு தனது பொறுமையை கடைசியில் இழந்தது.
 
மேலும் பெரும்பாலும் இந்து மக்கள் வசிக்கும் இந்தியாவின் மத்தியப் பகுதியில், சுதந்திரமான முஸ்லிம் நாடு வேரூன்றுவதைத் தடுக்க வேண்டும் எனும் கவலையும், அவாவும் ஆட்சியாளர்களுக்கு இருந்தது.
 
பல இந்து கிராமங்களை, ஹைதராபாதின் மிகவும் சக்தி வாய்ந்த முஸ்லிம் அரசியல் கட்சியின் பலம் வாய்ந்த முஸ்லிம் ஆயுதக் குழுவான ரஜாக்கர்கள் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது பிரதமர் நேருவுக்கு தேவையான முகாந்திரத்தை அளித்தது. அதன் விளைவாக 1948 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் ஹைதராபாத் மீது தாக்குதலை நடத்தியது.
 
ஆனால் இந்தத் தாக்குதல் ஒரு காவல்துறை நடவடிக்கை என்று தவறாக சித்தரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் நிஜாமின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
 
ஆனால் அங்கு வன்முறைகள், சூறையாடல், படுகொலைகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்று தகவல் டெல்லியை சென்றடைந்தது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த நேரு உண்மையை கண்டறிய பல மதத்தவர் கொண்ட ஒரு சிறிய குழுவை ஹைதராபாதுக்கு அனுப்பி விசாரிக்குமாறு பணித்தார்.
 
அந்தக் குழுவுக்கு தலைமை வகித்தவர் பண்டிட் சுந்தர்லால் எனும் இந்து காங்கிரஸ் தலைவர். ஆனால் அவர் தலைமையிலான குழு வழங்கிய அறிக்கை வெளியாகவே இல்லை. ஹைதராபாத் மாகாணத்தில் பல கிராமங்களை விஜயம் செய்து சுந்தர்லால் தலைமையிலான குழுவினர் தமது அறிக்கையை தயாரித்தனர்.
 
அந்தத் தாக்குதல்களின் போது தப்பிப் பிழைத்த முஸ்லிம் மக்கள் கூறிய கருத்துகளை அந்தக் குழுவினர் கவனமாக குறித்துக் கொண்டனர். பலர் அப்போது இடம்பெற்ற அட்டூழியங்களில் இந்திய இராணுவத்தினருடன் உள்ளூர் காவல்துறையினரும் பங்கு பெற்றனர் என்று கூறினர்.
 
பல கிராமங்களில் முஸ்லிம்களிடமிருந்து களையப்பட்ட ஆயுதங்கள் இந்துக்களின் கைகளுக்குச் சென்றன என்று அந்தக் குழு தெரிவித்திருந்தது. எனினும் பல இடங்களில் இந்திய இராணுவம் ஒழுங்காக நடந்து கொண்டு முஸ்லிம்களை காப்பாற்றினர் எனவும் அந்தக் குழுவினர் கூறினர்.
 
பல ஆண்டுகளாக இந்துக்களுக்கு எதிராக ரஜாக்கர்கள் நடத்திய வன்முறைகளுக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, ஐதராபாதில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பார்க்கப்பட்டது. சுந்தர்லால் தலைமையிலான அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் அப்போது நடந்த கலவரங்களில் 27,000 முதல் 40,000 வரையிலானவர்கள் உயிரிழந்திருக்காலம் என்று கணிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
 
எனினும் அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை நேரு வெளியாடமல் இருந்ததற்கு எந்த அதிகாரபூர்வமான காரணங்களும் சொல்லப்படவில்லை. விடுதலை பெற்றிருந்த சில மாதங்களிலேயே இப்படியான ஒரு அறிக்கை வெளியாவது, இந்துக்கள் மீது முஸ்லிம்கள் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் எனும் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
 
இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், பாடப் புத்தகங்களில் இது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த சுந்தர்லால் குழுவின் அறிக்கை குறித்து பலருக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இப்போது புதுடில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இந்த அறிக்கை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கை இனியாவது பரந்துபட்ட அளவில் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று ஊடகங்கள் குரல் கொடுத்து வருகின்றன.
-Popularfronttn.org


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza