Thursday, September 26, 2013

ஒரு மாதத்தில் 1,350 கோடி இந்தியாவின் முக்கிய தகவல்களை திருடிய அமெரிக்கா!


ரியோடி ஜெனீரா: ஒரு மாத காலத்திற்குள் இந்தியாவில் இருந்து சுமார் 1,350 கோடி தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் அரசியல் நிலவரம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி திட்டங்கள் குறித்த ரகசியங்களை அமெரிக்கா சேகரித்துள்ளது.
 
உலக நாடுகளை அமெரிக்கா பல ஆண்டுகளாக வேவு பார்த்து வருவதை அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்.எஸ்.ஏ.) முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்த ஊழியர் எட்வர்ட் ஸ்நோடென் சில மாதங்களுக்கு முன்பு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.
 
அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ப்ரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை என்.எஸ்.ஏ. அதிகமாக உளவு பார்த்துள்ளது.
 
அமெரிக்காவின் நட்பு நாடுகள் வட்டாரத்தில் இருந்தாலும் இந்தியாவின் நடவடிக்கைகளையும் என்.எஸ்.ஏ. உன்னிப்பாக உளவு பார்த்து வந்துள்ளது. இந்தியாவில் இருந்து பல்வேறு தரப்பினரின் இமெயில், வீடியோ பகிர்வு, ஆன்லைன் சேட்டிங், ஆன்லைன் உரையாடகள் ஆகியவற்றில் இருந்து பல கோடி தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது.
 
குறிப்பாக, இந்திய அரசியல் நிலவரம், விண்வெளி ஆராய்ச்சிகள், அணுசக்தி திட்டங்கள், பொருளாதார கொள்கை முடிவுகள் குறித்த விபரங்கள் களவாடப்பட்டுள்ளன. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே சில நாடுகளை உளவு பார்த்ததாக அமெரிக்கா கூறி வருகிறது.
 
ஆனால், இந்தியா தொடர்பாக அமெரிக்கா திருடிய தகவல்கள் தீவிரவாதத்துக்கு சற்றும் தொடர்பில்லாதவை. இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள், விஞ்ஞானிகளின் தொலைபேசி உரையாடல்கள், இமெயில் தகவல் பரிமாற்றங்கள் நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு என்.எஸ்.ஏ. ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் தகவல் பரிமாற்றங்களும் ஒட்டு கேட்கப்பட்டு தனி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒரு மாதத்துக்குள் இந்தியாவில் இருந்து 1,350 கோடி ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
 
ஸ்நோடன் வசமுள்ள ரகசிய ஆவணங்களில் இருந்தும் மத்திய அரசின் உளவு வட்டாரங்களில் இருந்தும் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Info : popularfronttn.org



0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza