Wednesday, July 31, 2013

அத்வானி கூட்டத்திற்கு கட்டுப்பாடு - இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை!

 சேலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பங்கேற்கும் கூட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தில் படுகொலை செய்யப் பட்ட பா.ஜ.க. செயலர் ஆடிட்டர் ரமேஷ் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க அத்வானி சேலம் வருகிறார். இக்கூட்டம் வரும் ஆக-1 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக, கூடுதல் கட்டுப்பாடு விதித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை மனுவை, சேலம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத், நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திடம் மனு வழங்கியுள்ளனர்.

அந்த மனுவில் கூறப் பட்டிருப்பதாவது:
"மத நல்லிணக்கத்தின் அடையாளமாக, ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும், சேலம் நகரில், பா.ஜ., மாநிலச் செயலர், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இது, சேலம் மக்களிடையே பீதி, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படுகொலை சம்பவம், மனித நேயமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த பாதக செயலில் ஈடுபட்ட கயவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. படுகொலை சம்பவத்தை தொடர்ந்து செய்திகளை வெளியிடும் செய்தி ஊடகங்கள், யூகங்களின் அடிப்படையில், இந்திய மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம், முஸ்லிம் சமுதாயத்தை மையப்படுத்தி, முஸ்லிம்களை குற்றவாளிகள் என, தீர்மானித்து செய்தி வெளியிடுகின்றன. இதனால், முஸ்லிம்களின் கண்ணியத்தை குலைத்து, பொது நீரோட்டத்தில் தனிமைப்படுத்துவதாக உணர்கிறோம்.
டி.ஜி.பி., ராமானுஜம் அறிக்கையில் குறிப்பிட்டதில், "பா.ஜ., மற்றும் இந்துத்துவ அமைப்பினர் சிலர் பணம், கொடுக்கல் வாங்கல், நிலப் பிரச்னை, பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தான் இருந்தன' என்று சுட்டிக் காட்டியுள்ளார். நடுநிலை பேணக் கூடியவர்கள் கருத்து இவ்வாறு இருக்க, ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை முன் வைத்து, ஒரு தரப்பினர் மலிவான அரசியல் செய்து வருவது, மதச்சார்பின்மையை பேணக் கூடியவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. வரும் ஆக., 1ம் தேதி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, சேலம் வருகை புரிவதாக தகவல் அறிகிறோம். அத்வானி கடந்த காலங்களில் பேசிய பேச்சுக்கள், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், மத துவேஷங்களை தூண்டக்கூடிய வகையில் அமைந்து, அது பல விளைவுகளை ஏற்படுத்திய சம்பவங்களை, மக்கள் நன்கு அறிவர். எனவே, அத்வானி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கூடுதல் கட்டுப்பாடு விதித்து, சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்தி, சேலம் வாழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் எந்த வித குற்றம் செய்தாலும், அதை அந்த குற்றவாளியாக மட்டுமே பார்க்க வேண்டும். தவிர, மதச்சாயம் பூசி, உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு, மக்களை குழப்பத்தில் ஆழ்த்தாவண்ணம் செய்திகள் வெளிவர ஆவன செய்ய வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை துரிதமாக, தீர விசாரித்து, உண்மை குற்றவாளிகளை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்டத்தின் அனைத்து இஸ்லாமிய கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளின் கூட்டமைப்பான, சேலம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். "
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza