Wednesday, July 24, 2013

இராமநாதபுரத்தில் மசூதிக்கு தீ வைப்பு; முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

 இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாசல் ஒன்று பள்ளி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த (22/07/2013) திங்கள் இரவு சமூக விரோதிகள் சிலர் உள்ளே புகுந்து சிறுநீர் கழித்து, இருந்த தொப்பி உள்ளிட்ட ஆவணங்களை எரித்து, வராண்டா பகுதியில் இருந்து மின்விசிறி மற்றும் ஒலி பெருக்கியை சேதப்படுத்தி தமது மத துவேசத்தை அரங்கேற்றிச் சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலைத் தொழுகை நடத்த சென்ற அப்பகுதி மக்கள் தங்கள் மசூதியில் தீ வைக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.சமூக விரோதிகளின் இந்தச் செயலை கண்டித்தும், பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ, த.மு.மு.க., ஐ.என்.டி.ஜே உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடத்தப்பட்டது. கேணிக்கரை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொது மக்கள் திரளாக பங்கேற்றனர்.
சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், ‘‘பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சுற்றுப் புறச் சுவர் உள்ளது. அத்துடன் இரவு நேர காவலாளியும் உள்ளார். அப்படி இருக்கும் போது,  இது போன்ற சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

மசூதியில் தீவைத்த மர்ம நபர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனவென்றும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்'' என்றும் மயில்வாகனன் மேலும் கூறினார்.




0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza