ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 22 பேர் மீது மோக்கா-MCOCA(மஹராஷ்ட்ரா அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்
கடுமையான பிரிவுகளை பிரயோகித்தது கண்டனத்திற்குரியது என்று பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: 'மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை கிளப்பிய பொடா, தடா, யு.ஏ.பி.ஏ போலவே மோக்கா சட்டமும் ஜனநாயக விரோதமானதாகும். அமைப்பு ரீதியான குற்றங்களை தடுக்கவேண்டும் என்ற பெயரில் 1999-ஆம் ஆண்டு மஹராஷ்ட்ரா மாநில அரசால் கொண்டுவரப்பட்ட இச்சட்டம், பெரும்பாலும் நிரபராதிகளை கைது செய்யவே பயன்படுத்தப்பட்டது.
இச்சட்டம் அமலுக்கு வந்தபின்னரும் மஹராஷ்ட்ராவில் குற்றங்கள் குறையவில்லை. மாறாக அதிகரிக்கவேச் செய்தது. சந்தேகிக்கும் எவரையும் கைது செய்யும் வரம்பற்ற அதிகாரங்களை போலீசுக்கு அளிக்கும் சட்டமே மோக்கா. இச்சட்டத்தின் படி நிரபராதி என்று நிரூபணமாகும் வரை நீதிமன்றங்கள் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் அனுமதிப்பதில்லை. அமைப்பு ரீதியான குற்றங்களை தடுக்க ஏற்கனவே பல்வேறு சட்டங்கள் அமலில் இருக்கும் நிலையில் இத்தகைய கறுப்புச் சட்டங்கள் அமலில் இருப்பதும், பிரயோகிப்பதும் இந்தியா போன்றதொரு ஜனநாயக தேசத்திற்கு அவமானமாகும். ஆகையால்தான் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், இச்சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுக்கிறது.' இவ்வாறு ஒ.அப்துல் ஸலாம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-New India
0 கருத்துரைகள்:
Post a Comment