Friday, June 14, 2013

“எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் துணிக்கோடியும், தெருக்கோடியும்தான்”

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் “போர்பஸ்’ என்ற வாரமிருமுறை செய்தி ஏடு 1917-இல் துவங்கப்பட்டது. அது பொருளாதார-வியாபார விவரங்களை வெளியிடும் பத்திரிகை. அமெரிக்க அளவில் மட்டுமல்ல, உலகின் முக்கிய நாடுகள் பற்றியும் ஆராய்வதில் அது ஈடுபட்டு வருகிறது. அதில் துவங்கி, ஒவ்வொரு பெரிய நிறுவனத்தின் ஆண்டு வருமானம், நிதி நிலைமை ஆகியவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து வெளியிடுகிறது.
1987 முதல் ஒவ்வோர் ஆண்டும் உலகின் பல நாடுகளில் உள்ள செல்வந்தர்களின் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் ஒருவர் சேர்க்கப்படுவதற்கு, அவருடைய நிர்வாகத்தில் உள்ள நிறுவனச் சொத்தின் அளவு அமெரிக்க டாலர் மதிப்பில் “ஒரு பில்லியன்’ அளவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

ஒரு பில்லியன் என்பது நமது கணக்கில் 100 கோடி என்பதாகும். ஒரு அமெரிக்கன் டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பீடு 2012-13 சராசரி அளவில் ரூபாய் 54 என்று இருந்ததால், 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது, இந்திய மதிப்பீட்டில் 5,400 கோடி ரூபாய் ஆகும்.

25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த முதல் பட்டியலில், உலகின் “போர்பஸ் பில்லியனர்கள்’ என்ற கணக்கில் மொத்தம் 140 பில்லியனர்கள் இருந்தனர். அந்தப் பட்டியலில் அமெரிக்காவில் 44 பேர்கள் இருந்தனர். இந்தியாவில் இருந்து எவரும் அந்தக் காலத்தில் “பில்லியனர்’ தகுதியைப் பெறவில்லை.1997-இல் ஆரம்பித்து ஜி.டி. பிர்லா குடும்பம் ஒன்று மட்டும் தொடர்ந்து அந்தப் பில்லியனர் பட்டியலில் ஆண்டுதோறும் இடம்பெற ஆரம்பித்தது.

2012-13 “போர்பஸ்’ பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் உலக அளவில் 1,226 பில்லியனர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் நாடுவாரியாக முதல் பத்து இடங்களில் தரப்பட்ட விவரங்களில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது!
பின்வரும் தொடர்ச்சியில் நாட்டின் பெயரும் அந்தந்த நாட்டின் பில்லியனர்கள் எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளன.அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (425), ரஷியா (96), சீனா (95), ஜெர்மனி (58), இந்தியா (57), துருக்கி (43), ஹாங்காங் (38), இங்கிலாந்து (37), பிரேசில் (36), கனடா (25).இங்கிலாந்து ஆளுகையின் கீழ் நீண்ட காலம் இருந்த ஹாங்காங், இங்கிலாந்து-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் 1997-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், சீனாவின் ஆதிக்கத்துக்குள் வந்துவிட்டது.
இருப்பினும் மேற்கொண்டு 50 ஆண்டுகள்வரை ஹாங்காங் அதுவரை கையாண்ட முதலாளித்துவப் பொருளாதார நடைமுறையில் நீடித்திருக்க சீனா ஒத்துக்கொண்டுள்ளது. ஹாங்காங் மூலம் சீனாவுக்குத் தேவையான “வெளிநாட்டு மூலதனம்’ கிடைக்கிறது. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியில் அடங்கியுள்ள ரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளிலும் கோடீஸ்வரர்கள் அதிக எண்ணிக்கையில் வளர்ச்சி அடைந்திருப்பது ஆச்சரியப்படத்தக்கதாகும்.
இந்தியாவின் 57 பில்லியனர்களில் முகேஷ் அம்பானிதான் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து தலைமை இடத்தில் இருக்கிறார்.2012-13-இல் அவருடைய நிர்வாகத்தில் உள்ள சொத்து விவரம் அமெரிக்க டாலர் மதிப்பில் 22.3 பில்லியன் ஆகும்.
ஒரு பில்லியன் டாலர் என்பது இந்திய நாணய மதிப்பில் 5,400 கோடி ரூபாய் என்பதால், முகேஷ் அம்பானி என்ற ஒருவரிடம் மட்டும் உள்ள சொத்தின் மதிப்பு 1,20,420 கோடி ரூபாய் (ஒரு லட்சத்து இருபதாயிரத்து நானூற்று இருபது கோடி ரூபாயாகும்).
இவர் இந்தியக் கோடீஸ்வரர்களில் முதலிடம் பெற்றிருப்பது மட்டுமல்ல, மேலும், உலகின் மொத்த 1,226 பில்லியனர்களில் 19-ஆவது இடத்தில் இருக்கிறார்.மேற்குறிப்பிட்ட 57 இந்திய பில்லியனர்களின் தலைமை அலுவலகம் இருக்கும் நகரங்களைப் பார்த்தால், மும்பையில் 20, தில்லியில் 14, பெங்களூரில் 7, ஆமதாபாதில் 3, சென்னையில் 2, ஹைதராபாதில் 2 என்று தெரிகிறது.
சென்னையில் இருப்பவர்கள் – கலாநிதி மாறன் (2.5 பில்லியன் – 13,500 கோடி) முருகப்பா குடும்பம் (1.02 பில்லியன் – 5,508 கோடி).இந்தியத் தொழில்துறை வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் ஒன்றுபட்ட சராசரி அளவில் பரவவில்லை என்பதைத்தான் மேற்கண்ட விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
சில இந்தியப் பில்லியனர்கள், இந்தியாவில் தங்கியிராமல் வெளிநாடுகளில் தங்கி, தாங்கள் சேர்த்த செல்வ பலத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள், உதாரணமாக லட்சுமி மிட்டல் (19.2 பில்லியன் டாலர் சொத்து – 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்டது) லண்டனில் முழுமையாகத் தங்கி தமது மூலதனங்களை அங்கு வளர்த்துக் கொள்கிறார். இந்தியாவின் அரசியல் தலைநகரம் தில்லி, நிதித்துறையின் தலை நகரம். மும்பை.
மேலே எடுத்துக் காட்டியபடி, இந்தியாவின் 57 பில்லியனர்களில் 34 பேர்கள் மும்பை, தில்லி ஆகிய இரு நகரங்களிலும் தமது நிறுவனங்களின் தலைமை இடங்களை வைத்துக் கொண்டுள்ளனர்.இதனால் தொழில்துறையின் செல்வச் சீமான்களும், அரசியல் ஆதிக்கத்தில் மத்திய அரசாங்கத்தின் “மா’மந்திரிகளும் ஒருங்கிணைந்து இந்தியாவை ஆண்டு வருகிறார்கள்.
அதனால்தான் முன்பெல்லாம் இந்திய அரசாங்கத்தின் ஊழல் என்று வெளிப்பட்டால். அது ஒரு லட்சம், பத்து லட்சம், அல்லது ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாய்கள் என இருந்தது. தற்பொழுது இந்தியப் பில்லியனர்களின் சொத்துகளைப் போல, தில்லி அமைச்சர்களின் ஊழல் விவரங்கள் 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி என்று, பல்லாயிரம் கோடிகளாக வளர்ந்துவிட்டது!
கடந்த காலங்களில் ஊரில் யாராவது ஒருவர் லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட சொத்து உடையவராக இருந்தால் “லட்சாதிபதி’ – அதாவது லட்சத்துக்கு அதிபதி என மதிக்கப்பட்டார். “அதிபதி’ என்றால் “அரசன்’ “தலைவன்’ என்று பொருள்படும்.
கோடி ரூபாய்க்கு சொந்தக்காரன் என்றால், அவனை “கோடீஸ்வரன்’ என – அதாவது ஒரு “ஈஸ்வரனாகவே’ – கடவுளாகவே ஆக்கிவிடுவார்கள்.இந்தியாவின் அரசாங்கத்திலும், தொழில் துறையிலும் கோடானு கோடி “ஈஸ்வரர்கள்’ உதயமாகிவிட்டார்கள்.
இந்தியாவில் உள்ள 57 பில்லியனர்கள் எல்லோருடைய சொத்துகளையும் சேர்த்துப் பார்த்தால் அதன் மொத்த அளவு, 2,13,030 பில்லியன் டாலர். அதன் இந்திய மதிப்பீட்டில் அளவு 11,50,363 கோடி ரூபாயாகும்.2013-14-ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் தரப்பட்ட விவரங்களின்படி, இந்திய அரசாங்கத்திடம் உள்ள சொத்துகளின் மொத்த மதிப்பீடு 8,99,516 கோடி ரூபாய் ஆகும்.
இந்திய அரசாங்கத்தைவிட 57 தனி முதலாளிகளிடம் முடங்கியுள்ள சொத்தின் அளவு 24 சதவிகிதம் – சற்றுக் குறைய நான்கில் ஒருபங்கு – அதிகமாக வளர்ச்சி அடைந்துவிட்டது.2011-ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை 102 கோடி 87 லட்சமாக இருந்தது. தற்பொழுது 2013-இல் இந்திய மக்கள் தொகை 127 கோடியைத் தாண்டிவிட்டது.
இனிமேல் பொதுத் தேர்தல் வந்தாலும் மக்களை நம்பாமல், இந்தியக் கோடீஸ்வரர்களை நம்பித்தான் – அவர்களுடைய தேவைகளை ஏற்று அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உடனடியாக உதவும் வகையில்தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசாங்கம் இருக்கும்!
அண்ணா ஒருமுறை சொன்னார், “”எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் துணிக்கோடியும், தெருக்கோடியும்தான்” என்று. அண்ணா உருவாக்கிய கட்சியில் இன்றையே தலைமையேகூட உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்றால், இந்திய ஜனநாயகம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதையும், எந்தத் திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
“”ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால், ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!”
என்று எழுதிய பாவேந்தர் பாரதிதாசனார் இன்று இருந்திருந்தால் என்ன எழுதியிருப்பார் என்று யோசித்துப் பார்த்தால், சிரிப்புத்தான் வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலை கண்டு “நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று ஆதங்கப்படக்கூட யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டதே!
இரா.செழியன்
- aanthaireporter

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza