Wednesday, June 5, 2013

நிரபராதிகள் கைது: நிமேஷ் கமிஷனின் அறிக்கையை அங்கீகரித்தது உ.பி அரசு!

போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்த காலித் முஜாஹித் நிரபாரதி என்பதை நிரூபிக்கும் நிமேஷ் கமிஷனின் அறிக்கையை உ.பி மாநில அரசு அங்கீகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் காலித் முஜாஹித் உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நிமேஷ் கமிஷன் விசாரித்து வந்தது. இக்கமிஷனின் அறிக்கை உ.பியில் ஆளும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது இந்த அறிக்கையை அங்கீகரிப்பதாகவும், வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் இதுக் குறித்து விவாதிக்கப்படும் என்றும் முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

முஸ்லிம் இளைஞர்கள் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டது குறித்து முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட நிமேஷ் கமிஷன் ஆராய்ந்தது. போலீஸ், முஸ்லிம் இளைஞர்களை போலி வழக்கில் கைது செய்திருப்பதாகவும், போலீஸ் கூற்றுக்களில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாகவும் நிமேஷ் கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆட்சிக்கு வந்தால் அநியாயமாக சுமத்தப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவோம் என்று சமாஜ்வாதிக் கட்சி அறிவித்திருந்தது. காலித் முஜாஹித் தொடர்பான வழக்கை வாபஸ் பெற அணுகியபோது நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே கடந்த மாதம் காலித் முஜாஹித், ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு கொண்டு செல்லும் வேளையில் போலீஸ் வேனில் வைத்து மர்மமான முறையில் மரணமடைந்தார். காலிதின் மரணம் மாரடைப்பினால் என்று போலீஸ் கூறியபோதும், அவர் கொல்லப்பட்டார் என்று உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் முஜாஹிதின் மரணம் தொடர்பாக 42 போலீஸார் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அரசு அறிவித்துள்ளது. ஆனால், காலிதின் குடும்பம் இத்தொகையை வேண்டாம் என்று நிராகத்துள்ளது. இவ்வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
காலிதின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், நிமேஷ் கமிஷன் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பினர், உ.பி. மாநில சட்டப்பேரவைக்கு முன்பாக காலவரையற்ற தர்ணா போராட்டத்தை நடத்தி வரும் வேளையில் அகிலேஷ் யாதவ் அரசு நிமேஷ் கமிஷன் அறிக்கையை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது.
- New India.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza