தக்ஸிம் காஸி பூங்கா போராட்டம்:பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்:விசாரணையை துவக்கியது துருக்கி!
அங்காரா : துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள தக்ஸிம் காஸி பூங்காவில் கடந்த 3 வாரங்களாக நடந்துவரும் போராட்டத்தில் வெளிநாட்டு சக்திகளின் பங்கினைக் குறித்து அந்நாட்டு புலனாய்வு பிரிவு விசாரணையை துவக்கியுள்ளது.போராட்டம் குறித்து முழுமையாக புலனாய்வு செய்து ஒருவாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல துருக்கி பத்திரிகையான ஹுர்ரியத் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தக்ஸிம் சதுக்கத்தில் உள்ள காஸி பூங்காவை நவீனப்படுத்த அரசு மேற்கொண்ட திட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 31-ஆம் தேதி போராட்டம் துவங்கியது. பூங்காவில் மரங்களை வெட்ட அனுமதிக்கமாட்டோம் என்று நிலைப்பாட்டை எடுத்த போராட்டக்காரர்கள், பின்னர் ரஜப் தய்யிப் எர்துகான் ராஜினாமாச் செய்யக்கோரி போராட்டம் தொடருகின்றனர். திடீரென உருவான இப்போராட்டம் அரசு மற்றும் துருக்கிக்கு எதிரான சதித்திட்டம் என்று எர்துகான் உள்ளிட்ட தலைவர்கள் கருதுகின்றனர்.
இப்போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பது தெளிவானதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பொருளாதார-அரசியல் பலம் பெற்றுவரும் துருக்கியில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்கும் விதத்தில் இஸ்தான்புல்லில் கிளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசு ஆதரவு பத்திரிகையொன்று கடந்த பெப்ருவரியில் செய்தி வெளியிட்டது.காஸி பூங்கா கிளர்ச்சியை குறித்து சர்வதேச ஊடகங்கள் ஒரு தலை பட்சமாக செய்தி வெளியிட்டதாக அரசு வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன. இதுக்குறித்து இன்று நடக்கவிருக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விவாதிக்கும்.
செய்தி:தேஜஸ்
0 கருத்துரைகள்:
Post a Comment