Friday, June 14, 2013

ரியல் எஸ்டேட்: மத்திய அரசின் புதிய விதிமுறைகள்

re
பெருநகர் பகுதிகளில் மக்கள் குடியேற்றம் அதிகரிப்பு, சொந்த வீட்டு கனவு போன்ற காரணங்களால் வீட்டு மனையின் மதிப்பு வெகுவாக உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் மற்ற பகுதிகளை விட நகர்புறங்களையொட்டிய இடங்கள் அதிக அளவில் வீட்டு
மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த இடத்தை வாங்கி வீடாக மாற்றி கனவு இல்ல தேவையை நிவர்த்தி செய்ய பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ரியல் எஸ்டேட் தொழிலும் விளங்குகிறது.

இடத்தை ஒருவரிடம் இருந்து வாங்கி அதை மனைகளாக பிரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த இடத்தை மனையாக மாற்றுவதற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா? அதில் கட்டிடம் கட்டுவதற்கு சட்ட ரீதியாகசம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? அரசு வகுத்துள்ள விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு சில இடங்களில் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.
இதனால் இடத்தையோ, கட்டப்பட்ட வீடுகளையோ வாங்கும் பலர் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது. இதையடுத்து ரியல் எஸ்டேட் தொழிலை ஒழுங்குப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் ஒரே மாதிரியான ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க வகை செய்யும் நோக்கில் ரியல் எஸ்டேட் (கட்டுப்பாடு, மேம்பாட்டு) மசோதாவுக்கு சமீபத்தில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் சிறப்பம்சங்கள்:–
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் திட்டப்பணிகளைத் தொடங்கும் முன்பு சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் இருந்து சட்ட ரீதியான அனைத்து அனுமதிகளையும் பெற வேண்டும். அனுமதி பெறப்பட்ட அனைத்து விவரங்களையும் தங்கள் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். அதன் பிறகே கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.
கட்டுமான பணிகளைத் தொடங்குவதற்கு அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகு தான், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளை வாங்குபவர்களிடம் இருந்து பணம் வசூலிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கட்டுமானத் திட்டத்துக்கும் தனி, தனி வங்கி கணக்குகளை தொடங்கி பராமரிக்க வேண்டும்.
மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்கள் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களுடன் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளம்பரங்கள் வெளியிடக் கூடாது. இத்தகைய விதிமுறைகளை மீறும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது அதன் திட்டப்பணிகளில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் விதிமுறைகளை மீறி தவறு செய்யும் பட்சத்தில் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உரிமையாளர்கள்
சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

சட்டம் அமலுக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்படும். ஒரு மாநிலத்துக்கு அதிக பட்சம் 2 ஆணையங்கள் வரை அமைக்கப்படலாம். மத்திய அரசு அளவில் ரியல் எஸ்டேட் மேல்முறையீடு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபடும் பில்டர்கள் தவறு செய்தது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அதிக அளவிலான அபராதம் விதிக்கப்படும்.
source: sdpitamilnadu.org

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza