குஜராத்தில் சட்டவிரோதமாக சுண்ணாம்புக் கல் வெட்டியெடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் மாநில அமைச்சர் பாபு பொக்கிரியா உள்ளிட்ட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குஜராத் நீர்வளத் துறை அமைச்சர் பாபு பொக்கிரியா, காங்கிரஸ் எம்.பி. பரத் ஓடேதாரா, நிழல் உலக தாதா பீமா துலா, அவரது மகன் லட்சுமண் துலா ஆகியோர் சட்டவிரோதமாக சுண்ணாம்புக் கல்லை வெட்டியெடுக்கும் செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இப்புகாரை 2006-ம் ஆண்டு செளராஷ்டிரா ரசாயன நிறுவனத்தின் மேலாளர் உமேஷ் பாவ்சார் போலீசாரிடம் அளித்திருந்தார். இந்நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கப் பகுதியில் பாபு பொக்கிரியா உள்ளிட்டோர் சட்டவிரோதமாக சுண்ணாம்புக் கல் வெட்டியெடுத்துள்ளனர். இதனால் தனது நிறுவனத்துக்கு ரூ.54 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக உமேஷ் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பாபு பொக்கிரியா உள்ளிட்ட 4 பேர் மீது போர்பந்தர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பொக்கிரியா ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இவ்வழக்கின் விசாரணை போர்பந்தரில் உள்ள முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே இவ்வழக்கில் நேற்று சனிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. அதில், பாபு பொக்கிரியா உள்ளிட்ட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி சி.வி.பாண்டியா தீர்ப்பளித்தார்.
பாபு பொக்கிரியா கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மாநில தலைவர் அர்ஜுன் மோத்வாடியாவுக்கு எதிராக போட்டியிட்டு வென்றார். அதைத் தொடர்ந்து நரேந்திர மோடி அமைச்சரவையில் அவர் நீர்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழும்போது பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் களேபரமாக்கும் பா.ஜ.கவின் ஊழல் குறித்த இரட்டைவேடம் அவ்வப்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது. அதில் பொக்கிரியாவின் கைது ஒரு பகுதியாகும்.
-New India
0 கருத்துரைகள்:
Post a Comment