Friday, May 24, 2013

மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் இப்போதும் விற்பனை!


பல ஆண்டுகளாக பல்வேறு மீடியாக்கள் சொல்லி வந்த தகவல்தான். ஆனாலும் உலகின் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை, இந்தியாவில் மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ற உண்மையை சமீபத்தில் பாராளுமன்றக் குழு ஒன்று வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் பெரியவர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் இத்தகைய மருந்துகள் இங்கு அளிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

இத்தனைக்கும் சுகாதாரத்துறையும், ஒழுங்குமுறை ஆணையமும், இம்மருந்துகளைத் தடை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தாமல் குழப்பத்தில் இருக்கின்றன.மேலும் பாராளுமன்றக் குழு, கடந்த ஆண்டு மே மாதமே இத்தகைய மருந்துகளைத் தடை செய்யும்படி உத்தரவிட்டது.இருப்பினும், இம்மருந்துகள் இன்னும் சந்தையில் இருந்து வருகின்றன. இவற்றை, சட்டத்திற்கு புறம்பான முறையில் அனுமதித்த, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகளின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அண்மையில் பாராளுமன்றக் குழு மேற்கொண்ட செயல் நடவடிக்கை அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு மே மாதம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்த மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தது. மேலும், அந்த மருந்துகள் தயாரிக்கப்பட்ட நாடுகளே அவற்றின் விற்பனையைத் தடை செய்திருந்ததால், அவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற விதிமுறையும் சுட்டிக்காட்டியுள்ளது.
பெல்ஜியம் நாட்டில் ஒவ்வாமைக்காக தயாரிக்கப்பட்ட பக்லிசைன் என்ற மருந்து, இந்தியாவில் பசியைத் தூண்டும் காரணத்திற்காக குழந்தைகளுக்கும், சிறுவயதினருக்கும் அளிக்கப்படுகின்றது. முறையான மருத்துவ ஆய்வுகளோ, மருத்துவ ஆராய்ச்சியாளர்களோ, உறுதி செய்யாத இந்த மருந்தினை பெல்ஜியம் தடை செய்துள்ளது.இதேபோல், டென்மார்க் நாட்டில் தயாராகும் மனச்சோர்விற்கான மருந்து என்று இங்கு அனுமதிக்கப்படும் தீன்சிட் என்ற மருந்து அந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இது குறித்து உத்தரவிட்டு பத்து மாதங்கள் கழிந்த பின்னும், நடைமுறைப்படுத்தப்படாத இதே நிலை நீடித்தால், மருத்துவ சுகாதார நெறிமுறைகளைக் காப்பது என்பது இயலாத ஒன்றாகிவிடும் என்று பாராளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.
-aanthai

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza