சவுதியில் அனுமதியின்றி தங்கியுள்ள இந்தியர்கள் ஜுலை 6-ம் தேதிக்குள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவுதி அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று சவுதி அரேபியா செல்கிறார்.
சவுதியில் இருந்து இன்னும் 1 1/2 மாதத்தில் 56,700 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்புகின்றனர். இவர்களிடம் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட், விசா இல்லாததால் இந்தியா திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என இவர்கள் அனைவரும் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வளவு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அங்குள்ள இந்திய தூதரகம் திணறுகிறது.
இதனால், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சவுதி அரேபியாவுக்கு இறுதி நேரத்தில் முடிவு செய்யப்பட்ட திடீர் பயணத்தை மேற்கொள்கிறார்.
புதுடில்லியில் நேற்று அமைச்சர் சல்மான் குர்ஷித், உருது பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது, “சவுதியில் இருந்து வெளியேறவுள்ள இந்திய தொழிலாளர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால், அவர்களின் சொந்த மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து தேவையான ஆவணங்களை பெற வேண்டியுள்ளது.
அவற்றை சரிபார்க்க கூடுதலாக 10 அதிகாரிகள் இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சவுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள 4,000 இந்தியர்கள், தன்னார்வ தொண்டர்களாக எமக்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்கள், தாயகம் திரும்ப விரும்பும் இந்திய தொழிலாளர்களின் மனுக்களை பரிசீலித்து வருகின்றனர்” என்றார்.
சவுதி விசா இல்லாமல் அங்கு தங்கியுள்ள இந்தியர்கள், சவுதி குடியுரிமை சட்டங்களை மீறிய போதிலும், சவுதியில் அவர்களின் நன்னடத்தை காரணமாக, தாங்களாகவே வெளியேற முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படாது என இந்திய அரசுக்கு சவுதி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
-viruviruppu.com
0 கருத்துரைகள்:
Post a Comment