Tuesday, May 28, 2013

மும்பை ரெயில் குண்டுவெடிப்பு: ஒரே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு தரப்பினர்!

மும்பை: ஒரே வழக்கில் இரு தரப்பு கைதிகள் சிறையில் பல வருடங்களாக அடைக்கப்பட்டுள்ளனர். ஒரே சம்பவம் தொடர்பாக இருவேறு நீதிமன்றங்களில் பரஸ்பரம் முரண்பாடான குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2006-மும்பை ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில்தான் அறிவுக்கும், நீதிக்கும் பொருந்தாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.


பிரபல புலனாய்வு செய்தியாளர் ஆஷிஷ் கேதானின் இணையதளமான குலைல் நியூஸ் தளம், இது தொடர்பான போலீஸ் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வெளிக் கொணர்ந்துள்ளது. செய்யாத குற்றத்திற்காக ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களோடு மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் அதிகாரிகள் மேற்கொள்ளும் சித்திரவதைகள் மற்றும் பாரபட்சத்தை போலீஸ் ஆவணங்களே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

2006-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி மும்பை ரெயில் பெட்டிகளில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 188 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவ சம்பவத்தில் 13 பேர் கைதுச் செய்யப்பட்டனர். ஆனால், இவர்கள் எவ்வித ஆதாரமும் இன்றியே கைதுச் செய்யப்பட்டனர். தடைச் செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமியுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற போலீஸின் ஓரவஞ்சனையே இந்த கைதின் பின்னணியில் அமைந்துள்ளது.

2001-ஆம் ஆண்டு புஜ்ஜில் நிகழ்ந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிமி ஏற்பாடுச் செய்த இலவச மருத்துவ முகாமிற்கு ஒத்துழைத்தார் என்பதே இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்ட டாக்டர் தன்வீர் அன்ஸாரி செய்த குற்றம். 2001-ஆம் ஆண்டு சிமி இயக்கம் தடைச் செய்யப்பட்டதை தொடர்ந்து இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ஆசிரியரான அப்துல் வாஹித் ஷேக்கை போலீஸ் வேட்டையாடத் துவங்கியது.

இதுபோலவே இதர 11 முஸ்லிம் இளைஞர்களின் கதையும்.மும்பையில் ஏதேனும் ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தாலும் போலீஸ் இவர்களைத்தான் தேடிச் செல்லும். வழக்கமாக விசாரணைச் செய்துவிட்டு இவ்விளைஞர்களை விடுவிக்கும் போலீஸ், 2006-ஆம் ஆண்டு ரெயில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு அவ்வாறு செய்யவில்லை. மொபைல் ஃபோன் அழைப்பு பதிவுகளை பரிசோதித்த பிறகு இவர்கள் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வேளையில் சம்பவ இடத்தில் இல்லை என்பது உறுதியான பிறகும் இந்த அப்பாவிகளை விடுதலைச் செய்ய மும்பை போலீஸ் மறுத்துவிட்டது என்று குலைல் கூறுகிறது.

குவாண்டனாமோ, அபூகரீப் சிறைகளில் கைதிகளிடம் சி.ஐ.ஏவும், எஃப்.பி.ஐயும் நடத்தும் கொடூர சித்திரவதைகளை வெல்லும் வகையில் இந்த அப்பாவி இளைஞர்களை மிகக்கொடூரமாக சித்திரவதைச் செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தினர். தலையை தண்ணீரில் மூழ்கடித்து மூச்சித்திணறச் செய்யும் வாட்டர் போர்டிங் சித்திரவதை, மர்ம உறுப்புக்களில் மின்சார அதிர்ச்சிக் கொடுத்தல், உடலை தளரச் செய்யும் மருந்துகளை செலுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத வழிகளில், தாங்கள் ஏற்கனவே எழுதி தயார் செய்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் இவர்களை கையெழுத்திடச் செய்துள்ளது போலீஸ்.

கையெழுத்திட மறுத்த ஃபைஸல் ஷேக்கின் 70 வயதான தந்தையை முழு நிர்வாணமாக்கி அவர் முன்பாக நடத்தி கையெழுத்திட வைத்துள்ளனர். இதனைக் குறித்து குலைல் செய்தியாளர்கள் மிக ரகசியமாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுடன் நீதிமன்றத்தில் வைத்து நடத்திய நேர்முகங்களின் வீடியோ பதிவு குலைல் நியூஸ் இணையதளத்தில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 2008 செப்டம்பரில் டெல்லி, அஹ்மதாபாத், சூரத் ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்ற பெயரில் மும்பை க்ரைம் ப்ராஞ்ச் கைதுச் செய்த ஸாதிக் ஷேக்கும், அவரது கூட்டாளிகளும் ரெயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதும் தாங்கள்தாம் என்று பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு வாக்குமூலம் அளித்த பிறகும் முன்னர் இவ்வழக்கில் கைதான 13 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் துயரத்திற்கு விடிவு ஏற்படவில்லை.

2006-ஆம் ஆண்டு 13 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ரகுவன்ஷி தலைமையிலான மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படை கைதுச் செய்திருந்தது. ஆனால், ஸாதிக் ஷேக்கின் கைதிற்கு பிறகு அன்றைய ஏ.டி.எஸ் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னர் கைதான இளைஞர்கள் நிரபராதிகள் என்று சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால், சில தினங்களுக்குப் பிறகு நிகழ்ந்த மும்பை தாக்குதலின் போது கர்கரே, மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

மீண்டும் ஏ.டி.எஸ் தலைவராக பொறுப்பேற்ற ரகுவன்ஷி, ஸாதிக் ஷேக்கை மும்பை ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரிப்பதற்காக கஸ்டடியில் வாங்கினார். ஸாதிக் ஷேக்கை கஸ்டடியில் வாங்கி விசாரணை நடத்தியதன் நோக்கம், ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டி சிறையில் அடைத்துவிட்டு நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்ய அல்ல. மாறாக, ஸாதிக் ஷேக்கை குற்றமற்றவர் என விடுவித்து விட்டு முன்னர் கைதுச் செய்த 13 முஸ்லிம் இளைஞர்களையும் சிறையில் அடைப்பதற்காகும்.

ரெயில் குண்டுவெடிப்புக்கான பொறுப்பை தானும், தனது கூட்டாளிகளும் ஒப்புக்கொண்டது புலனாய்வு ஏஜன்சிகளை திசைதிருப்பவே என்று விசாரணையின் போது ஸாதிக் ஷேக் தெரிவித்ததாக ரகுவன்ஷி மோக்கா நீதிமன்றத்தில் தெரிவித்து, வழக்கில் இருந்து அவரை விடுதலைச் செய்ய கோரினார். ஆஸம்கரைச் சார்ந்த ஆதிஃப் அமீனின் உத்தரவின் பேரிலேயே தான் ரெயில் குண்டுவெடிப்பிற்கான குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், ரெயில் குண்டுவெடிப்பில் தனக்கு எவ்வித பங்குமில்லை என்று கூறியதாகவும் ரகுவன்ஷி தெரிவித்தார்.

ஆனால், ஸாதிக் ஷேக் முதலில் அளித்த வாக்குமூலம், பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் ஆதிஃப் அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பல மாதங்களுக்கு பிறகு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அநியாயமாக தண்டிப்பதற்கான அவசரத்தில் ஏ.டி.எஸ்ஸிற்கு இது ஒன்றும் பிரச்சனையே அல்ல.

நிரபராதிகள் என்று தெரிந்தே ஏ.டி.எஸ் அப்பாவிகளான 13 முஸ்லிம் இளைஞர்களை ஏழு ஆண்டுகளாக சிறையில் அடைத்துள்ளதாக மும்பை உயர்நீதிமன்றம், தேசிய மனித உரிமை கமிஷன், தேசிய சிறுபான்மை கமிஷன் ஆகியவற்றிற்கு குலைல் செய்தியாளர்கள் அனுப்பிய மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மனித உரிமை மீறல் என்பது மட்டுமல்ல, நாட்டின் நீதித்துறை, சட்டத்துறை மீதான குடிமக்களின் நம்பிக்கையை தகர்த்துவிடும் விவகாரம் என்ற நிலையில் மிகவும் கவனத்தோடு இதனை பரிசீலிக்கவேண்டும் என்று மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza