Wednesday, May 22, 2013

இலங்கையில் மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் இடமில்லை!-ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்!


கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம்சாட்டியுள்ளது.

தவிர மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்றவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அது சாடியுள்ளது.


"துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தும், காணாமல் போனவர்களின் கதி பற்றிய தகவலை எதிர்பார்த்தும், தமது அடிப்படை மனித உரிமைக்கு சிறிதளவு மரியாதையை எதிர்பார்த்தும் ஏங்கி நிற்கிறார்கள், ஆனால் ராஜபக்ஷ அரசாங்கமோ அதில் ஒன்றையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது" என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய விவகார இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை எத்தரப்பு செய்திருந்தாலும் அது விசாரிக்கப்படும் என ஐநா தலைமைச் செயலருக்கு ராஜபக்ஷ வழங்கியிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் நியமித்த படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான
ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளும்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டுகிறது.

"பரந்துபட்ட அடக்குமுறையால் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை தொடர்ந்தும் மறுத்து வரலாம் எனும் விதமாக இலங்கை அரசு செயல்படுகிறது. ஆனால் யுத்தகாலத்திலேயே பல கஷ்டங்களுக்கு இடையில் உண்மையை வெளிக்கொண்டு வந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண்மையை வெளிக்கொண்டு வர நிச்சயம் வழிதேடுவார்கள்" என பிராட் ஆடம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza