Wednesday, May 22, 2013

ஜனநாயக வழியில் முன்னேறும் யெமன்!


எகிப்தும், துனீசியாவும் புரட்சிக்கு பிறகு உள்நாட்டு குழப்பங்களை சந்திக்கும் வேளையில் குழப்பங்களுக்கும், மோதல்களுக்கும் பிரசித்திப் பெற்ற யெமன் மெதுவாக ஜனநாயக பாதையில் முன்னேறி வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நம்பிக்கையை பெற யெமன் அரசு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குகிறது. மார்ச் 18-ஆம் தேதி 565 உறுப்பினர்களை கொண்ட அரசியல் நிர்மாண அவையின் செயல்பாடு துவங்கும். தெற்கு-வடக்கு யெமன் பிரச்சனை உள்பட ஒன்பது பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த அவை முயற்சிக்கும்.

ஷியா பிரிவினர், பழங்குடியினர் ஆகியோரின் பிரதிநிதித்துவம் குறித்தும் இந்த அவை பரிசீலிக்கிறது. புதிய அரசியல் சாசனம் 2014 பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்பாக அமலுக்கு வரும் என கருதப்படுகிறது.
துவக்கத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், பின்னர் அவை உறுப்பினர்கள் அனைவரும் கருத்தொற்றுமை உருவாக உள்ளார்ந்த நேர்மையுடன் செயல்படுவதாக முன்னாள் கல்வி அமைச்சர் யஹ்யா அஸைபி கூறுகிறார்.
அவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பிரிவினர் பெண்கள் என்பதால், மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். யெமனில் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான அல் இஸ்லாஹிற்கு பேச்சுவார்த்தைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரும் ஜெயிக்கவும் மாட்டார்கள், தோற்கவும் மாட்டார்கள் என்று முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அத்தபி சுட்டிக்காட்டுகிறார்.
புதிய அதிபரான அப்துர்ரப் மன்சூர்ஹாதி ராணுவத்தை அரசியலில் இருந்து விடுவிக்க முயன்று வருகிறார். உளவுத்துறை ஏஜன்சிகள் மற்றும் குடியரசு படையின் தலைமை பதவிகளில் இருந்து முன்னாள் சர்வாதிகாரி அப்துல்லாஹ் ஸாலிஹின் குடும்பத்தினரை அண்மையில் நீக்கினார் மன்சூர் ஹாதி.
-new india

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza