போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணித்த காலித் முஜாஹிதின் வழக்கறிஞர்கள் மீது பாசிச சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஃபைஸாபாத் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழக்கறிஞர்களான ஜமால் காலித், ஜூனியரான முஹம்மது ஸலீம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்ட முஹம்மது ஸலீம் மாவட்ட மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வருகிறார். இரண்டு வழக்கறிஞர்கள் மீது போலிஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
காலிதின் மரணத்தில் நீதி கோரி மனித உரிமை அமைப்புகளும், வழக்கறிஞர்களும் போராட்டம் நடத்தியிருந்தனர். இதனை சகிக்க முடியாத பாசிச சிந்தனைக் கொண்ட ஃபைஸாபாத் பார் அசோசியேசன் ஜமால் காலித், முஹம்மது ஸலீம், முஹம்மது நதீம், ஸைலுல் ரஹ்மான் ஆகியோரை உறுப்பினர் பதவியில் இருந்து எதேச்சதிகாரமாக நீக்கம் செய்துள்ளது.
தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக சிக்கவைக்கப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது என்று பாராபங்கியில் காலித் முஜாஹிதிற்காக ஆஜரான வழக்கறிஞர் ரந்தீர் சிங் சுமன் கூறுகிறார். காலித் முஜாஹிதிற்காக ஆஜரான தன் மீதும் தாக்குதல் நடந்துள்ளது என்று வழக்கறிஞர் முஹம்மது சுஐப் கூறுகிறார்.
தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவேண்டும் என்று ரிஹாய் மஞ்ச் கோரிக்கை விடுத்துள்ளது.
வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உ.பி மாநில சி.பி.எம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment