Thursday, May 23, 2013

ஈரான் அதிபர் தேர்தல்:முக்கிய தலைவர்களின் மனுக்கள் தள்ளுபடி!


ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் அக்பர் ரஃப்ஸஞ்சானி, அதிபர் அஹ்மத் நஜாதிற்கு நெருக்கமான ரஹீம் மஸாஈ ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஈரானின் தேர்தலை நடத்தும்
கார்டியன் கவுன்சில் தள்ளுபடிச் செய்துள்ளது.மனுக்களை தள்ளுபடிச் செய்ய என்ன காரணம்? என்பதுக் குறித்து கார்டியன் கவுன்சில் விளக்கம் அளிக்கவில்லை.

மனுத்தாக்கல் செய்த 686 பேரில் 12 பேருக்கு மட்டுமே ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட கார்டியன் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
முக்கிய அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீலி, முன்னாள் மத்தியஸ்தர் ஹஸன் ருஹானி, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் விலாயத்தி, டெஹ்ரான் மேயர் முஹம்மது பக்கர் காலிபாஃப் ஆகியோர் மனுத்தாக்கல் செய்த முக்கிய பிரமுகர்கள் ஆவர்.
ஈரானின் ஆன்மீக உயர் தலைவர் ஆயத்துல்லாஹ் காம்னஈக்கு நெருக்கமானவரான ஸஈத் ஜலீலி ஈரானின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கருதப்படுகிறது.
இதனிடையே மஸாஈயின் மனுவை தள்ளுபடிச் செய்ததை எதிர்த்து புகார் அளிப்போம் என்று அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். மஸாஈயை போட்டியிடச் செய்வதற்கான முயற்சி தொடரும் என்றும், பிரச்சனை தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் நஜாத் தெரிவித்துள்ளார்.
ஆனால், மனுவை தள்ளுபடிச் செய்ததை எதிர்த்து புகார் அளிக்கப்போவதில்லை என்று ரஃப்ஸஞ்சானி கூறியுள்ளார். 1989-ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை ஈரான் அதிபராக பதவி வகித்த ரஃப்ஸஞ்சானி, ஈரானின் சீர்திருத்தவாதிகளின் ஆதரவுடன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதிப் பெற்றவர்களில் 3 பேர் ஈரானின் ஆன்மீக உயர்தலைவர் ஆயத்துல்லாஹ் காம்னஈக்கு நெருக்கமானவர்கள் ஆவர். அதிபர் தேர்தலில் போட்டியிட 30க்கும் மேற்பட்ட பெண்களும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza