Friday, May 3, 2013

இலங்கையின் தேசிய ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளர் அஸத் ஸாலி கைது : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்


கொழும்பு நகரின் முன்னாள் துணை மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான அஸத் ஸாலி அவர்கள் கைது செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் வார இரு இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியை காரணமாக வைத்தே இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் இலங்கை அரசாங்கம் தன்னுடைய வலிமையை காட்டுவதற்கே இந்த கைதை நடத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த பேட்டியின் விபரங்களை அஸத் ஸாலி தரப்பு விளக்கிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள அரசாங்க தரப்பு தயாராக இல்லை.


இலங்கையில் தற்போது சிங்கள பேரினவாத இயக்கங்கள் மேற்கொண்டு வரும் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து குரல் எழுப்பி வரும் மிகச் சிலரில் அஸத் ஸாலி முக்கியமானவர்.சிங்கள பேரினவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளித்து வரும் இலங்கை அரசாங்கம் அஸத் ஸாலியை கைது செய்வதற்கு காய்களை நகர்த்தி வந்தது.தற்போதைய குற்றச்சாட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி நேற்று அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது ஜனநாயக வரம்புகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.அத்துடன் கடுமையான தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழும் அவரை கைது செய்துள்ளனர்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸத் ஸாலி உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருடைய உடல் நலத்தையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இலங்கை அரசின் இந்த எதேச்சதிகார போக்கை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன் அஸத் ஸாலி அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

ஏ.எஸ்.இஸ்மாயீல் 
மாநில தலைவர் 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza