Wednesday, May 29, 2013

’சென்சார் போர்ட்டில் அரசியல் பின்னணியா?’ – ஹைகோர்ட் கேள்வி

”கடுமையான வன்முறைக் காட்சிகள், கொடூர காட்சிகள், குற்றவாளிகளை புகழ்வது ஆகியவற்றை சினிமாவில் பார்க்கும்போது, இதற்கு தணிக்கைத்துறை எப்படி சான்றிதழ் வழங்கியது என்று தெரியவில்லை. தணிக்கைத் துறைக்கு தனி பொறுப்பு உள்ளது. தணிக்கை குழுவில் அரசியல் பின்னணி உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது” என்று சென்சார் போர்ட்டுக்கு ஹைகோர்ட் அறிவுரை கூறியுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் கே.ஆர்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மனு ஒன்றை விசாரித்தபோது  போது   நீதிபதி என்.கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்தார் அந்த உத்தரவில்,”பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தலைப்பே படத்தின் மதிப்பை அறிவிக்கும். நல்ல கதாபாத்திரங்களில் கதாநாயகர்கள் நடித்தனர். இதனால் அவர்கள் கடவுளாக வணங்கப்பட்டனர்.

தற்போது வர்த்தக நோக்கத்தில் சினிமா படம் தயாரிக்கப்படுகிறது. சமுதாயத்துக்கு எதிரான குற்றச்செயல்கள், வன்முறைகள் செய்வது தவறு இல்லை என்ற கருத்து சினிமா படங்களில் கூறப்படுகிறது. கதாநாயகர்கள் குற்றம் செய்துவிட்டு இறுதியில் தண்டனை பெறாமல் எளிதில் தப்பி விடுவது போல கதைகள் வருகின்றன. இது இளைய சமுதாயத்தின் மனதை கெடுக்கும்.
இதற்கு சினிமா தணிக்கைத் துறையினர் (சென்சார் போர்டு) சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. இதனால் நாட்டில் வன்முறை அதிகமாகிறது. இதை தவிர்க்க வேண்டும்.சினிமா படத்துக்கு தலைப்புகள் சரியாக வைப்பது இல்லை. சில படங்களில் வன்முறையைத் தூண்டும் வார்த்தைகள், கொடூர காட்சிகள் இடம் பெறுகிறது. சில குற்றவாளிகள் சினிமா படத்தை பார்த்து குற்றம் செய்கிறார்கள். அவர்களுக்கு படத்தில் இருந்து ஆலோசனை கிடைக்கிறது.
கடுமையான வன்முறைக் காட்சிகள், கொடூர காட்சிகள், குற்றவாளிகளை புகழ்வது ஆகியவற்றை சினிமாவில் பார்க்கும்போது, இதற்கு தணிக்கைத்துறை எப்படி சான்றிதழ் வழங்கியது என்று தெரியவில்லை. தணிக்கைத் துறைக்கு தனி பொறுப்பு உள்ளது. தணிக்கை குழுவில் அரசியல் பின்னணி உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது. இது தொடர்பாக தணிக்கை குழுவினர் ஜூன் 12ந் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவேண்டும்.”என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
-aanthai reporter

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza