Wednesday, May 1, 2013

சென்னையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு!



சென்னை: பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னையில் வரும் மே 5ம் தேதி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று கூட்டமைப்பின் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.


அப்போது அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹனிபா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது: "தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தொடர்கிறது. கடந்த ஏப்ரல் 17 அன்று பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகத்திற்கு முன் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இது கண்டிக்கத்தக்கது. இதில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இவ்வழக்கில் நடந்த சமீபத்திய கைது நடவடிக்கைகள் முஸ்லிம் சமுதாயத்தைக் குறிவைத்தே திட்டமிட்டு நடத்தப்படுவதாக அறிய முடிகிறது.

குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்ட சில முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும். பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்சரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லாக்கோணத்திலும் நடைபெற வேண்டும்.

இதற்கு முன் நாடடில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும் களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்பினர்கள் கைது செய்யப்பட்டுளனர்.

'பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும், உளவுத்துறையும் இது போன்ற குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக ஒரு சார்பான போக்கையே கடைபிடிக்கின்றன' என்று பிரஸ் கவுன்சில் சேர்மன் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே.

தமிழகத்தில் 2006ம் ஆண்டு கோவையை தகர்க்க சதி செய்ததாகவும் வெடிகுண்டுகளுடன் பிடிக்கப்பட்டதாகவும் 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதும் அவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி சிறப்புப் புலனாய்வு செய்து பின் நேர்மையான நடுநிலையான விசாரணையில் அந்த இளைஞர்கள் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்றும் அப்போதைய கோவை உதவி ஆணையர் இரத்தின சபாபதி திட்டமிட்டு சதி செய்து இவ்வழக்கில் அறிக்கை சமர்பித்தது, இது தமிழக உளவுத்துறை - காவல்துறை யின் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அது மட்டுமல்லாமல் கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் கோவை, மேலப்பாளையம், நாகர்கோவில் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீதும் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதும் சங்பரிவார்கள் நடத்திவரும் கொலைவெறி தாக்குதல்களும், கலவரம், பந்த் போன்ற நடவடிக்கைகளும் காவல்துறையினர் இந்துத்துவ சக்திகளை கண்டுகொள்ளாது அவர்களின் சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கைகளுக்கு துணை போவது கவலைக்குறிய விஷயமாகும்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் மக்களின் அனுதாபங்களை பெறுவதற்காகவே பா.ஜ.க அலுவலக குண்டுவெடிப்பு நடைபெற்றதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்று தமிழகத்திலும் இந்த நிலை உருவாக்குவது வேதனைக்குரியது. அதே போல் தமிழகத்தில் பா.ஜ.க வினர் நடத்திவரும் பந்த், கலவரம், அடிதடி, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் ஆகியவற்றின் பின்னணியில் பா.ஜ.க வின் மதவெறி அரசியலும், அரசியல் ஆதாயமும் இருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் திட்டமிட்டே சிறுபான்மை விரோத போக்குடன் நடந்து கொள்கின்றனர். வகுப்புவாத உணர்வின்றி செய்ய வேண்டிய இந்த உளவுத்துறையினரும், காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில் ஒரு சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருப்பதும் தமிழக முதல்வரின் கவனத்தை எட்டுகிறதா என்பது தெரியவில்லை.

அதே போல் முஸ்லீம்கள் குறித்து சரியான, நேர்மையான தகவல்கள் அறிக்கைகள் தமிழக முதல்வருக்கு உளவுத்துறையினர் சமர்பிக்கப்படுவாதகவும் தெரியவில்லை. காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள தமிழக முதல்வர் அவர்கள் உளவுத்துறையும் காவல்துறையையும் சீரமைக்க வேண்டுமெனில் சிறுபான்மை விரோத போக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், திட்டமிட்டு வகுப்புவாத அடிப்படையில் தொடர் தாக்குதல்கள் நடத்தி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து கொண்டிருக்கும் பா.ஜ.க உள்ளிட்ட சங்பரிவார அமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கேட்டுகொள்கின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza