அஹ்மதாபாத்: மீன்பிடிக்க அனுமதி வழங்கியதில் சட்ட விரோதமாக செயல்பட்டு அரசுக்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டில், மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புருஷோத்தம் சோலங்கிமீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குஜராத் மாநில மோடி அரசில் மீன் வளத்துறை அமைச்சராக இருப்பவர் புருஷோத்தம் சோலங்கி. மோடியின் கடந்த அமைச்சரவையிலும் இவர் இதே துறையின் அமைச்சராக இருந்தார்.
அப்போது, 2009 ஆம் ஆண்டு குஜராத்திலுள்ள 58 நீர் தேக்கங்களில் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தத்தை, அதிகாரப்பூர்வ அரசு ஆணையோ பொது டெண்டர் அழைப்போ இன்றி சட்ட விரோதமாக 40 கோடி ரூபாய்க்குத் தனக்கு விருப்பமானவர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். இதில் அரசுக்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டப்படி சோலங்கி மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரி இஷாக் மராடியா என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால், ஒரு அமைச்சரை விசாரிக்க வேண்டுமெனில் நீதிமன்ற அனுமதி வேண்டும். இதனைத் தொடர்ந்து மராடியா உயர் நீதிமன்றத்தை அணுகினார். குஜராத் உயர் நீதிமன்றம், சோலங்கியை விசாரிக்க அமைச்சரவை மட்டத்தில் முடிவெடுக்க மோடிக்கு உத்தரவிட்டது. ஆனால், சோலங்கி மீது விசாரணை நடத்த உறுதியான ஆதாரம் ஏதுமில்லை எனக்கூறி இருமுறை மோடி அமைச்சரவை சோலங்கிக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி மறுத்தது.
இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் இவ்விவகாரத்தை குஜராத் மாநில கவர்னரின் கவனத்துக்கு அனுப்பி வைத்தது. குஜராத் கவர்னர் கம்லா பெனிவால், மீன்பிடி ஒப்பந்தம் முறையான பொது டெண்டர் அழைக்காமல் குறைந்த தொகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளதற்கு ஆதாரம் இருக்கும் நிலையில் சோலங்கிமீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமென மோடி அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஜூலை 26, 2012 ல் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மராடியா, ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தை அணுகினார். அமைச்சர் சோலங்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஆகஸ்ட் 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்ட ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம், அக்டோபர் 6, 2012 க்குள் விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்ற சோலங்கியின் மனுவை செப்டம்பர் 20, 2012 ல் தள்ளுபடி செய்ததோடு, கவர்னர் உத்தரவுபடி சோலங்கிமீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மோடி அமைச்சரவையிலும் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் புருஷோத்தம் சோலங்கிமீது 400 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு, விசாரணைக்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னர், மோடி அமைச்சரவையின் முடிவை மீறி கவர்னரும் ஊழல் தடுப்பு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் சோலங்கி மீது விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், குஜராத் எதிர்கட்சி தலைவர் அருண் மோட்வாடியா, இந்த ஊழலில் மோடிக்கும் பங்குண்டு; ஊழல் புரிந்த சோலங்கியைக் காப்பாற்ற முயற்சி செய்யும் மோடி முதல்வர் பதவியினைத் தார்மீகமாக ராஜினாமா செய்யவேண்டுமென கோரியிருந்தார்.
-inneram
0 கருத்துரைகள்:
Post a Comment