Monday, April 29, 2013

இராமநாதபுரத்தில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்!


இராமநாதபுரம் : வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் 26.04.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பணிமனை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்டின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ் கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இபுராஹீம் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜ்மல் ஷரீப் தொகுத்து வழங்கினார் . மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஹசன் அலி மற்றும் சலீம் , SDPI மாவட்ட செயலாளர்களான செய்யது இபுராஹீம் மற்றும் அப்துல் ஜலீல் , திருவாடனை தொகுதி தலைவர் சஹீர்தீன் , செயலாளர் ரியாஸ் அஹமது , இராமநாதபுரம் தொகுதி செயலாளர் ஷேகு இபுராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் ஷேக் முஹம்மது அன்சாரி ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்கள் . SDPI கட்சியின் இராமநாதபுரம் தொகுதி தலைவர் அப்பாஸ் அலி ஆலிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள் . இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் நகர தலைவர் நஜுமுதீன் நன்றியுரையாற்றினார்.

முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்த்திற்காக 6 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் முன்னோர்களால் வக்ஃப் செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வக்ஃப் சொத்துக்கள் சரியான பராமரிப்பு இல்லாததால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. முறையான நிர்வாகம் இல்லாததால் வக்ஃப் வாரியம் வருமானம் இன்றி இருந்து வருகின்றது. எனவே தமிழக அரசு இது விசயத்தில் உடனடியாக தலையிட்டு வக்ஃப் சொத்துக்கள் முறையாக பராமரிப்பதற்கும் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்பதற்கும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

ஆர்ப்பாட்டத்தில் வக்ஃப் சொத்துக்களை மீட்கக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான பொது மக்கள் பெரும் திரளாகக் கலந்துக் கொண்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு பின்வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.


  1. வக்ஃப் வாரிய பணியாளர்களை அதிகப்படுத்த அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

  2. வக்ஃப் வாரிய பணியாளர்களை வெளிப்படையான தேர்வு முறை மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  3. வக்ஃப் வாரியத்திறகென மத்திய மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் மானிய நிதியினை அதிகப்படுத்த வேண்டும்.

  4. வக்ஃப் வாரியத்தின் மத்திய மாநில முதன்மை பதவிகளுக்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

  5. வக்ஃப் வாரியத்திற்குட்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க அவ்வழக்குகளை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.

  6. வக்ஃப் வாரியத்திற்குட்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்கும் விதமாக தேர்ச்சி பெற்ற இஸ்லாமிய வழக்கறிஞர்களை வக்ஃப் வாரிய வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்.

  7. வக்ஃப் வாரிய நிலங்களின் பதிவுகளை உடனடியாக முறைப்படுத்த அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

  8. ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் வாரிய நிலங்களை மீட்க மாநில அளவில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட குழுவினை ஏற்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் அளவு மற்றும் அதை மீட்பதற்கான வழிமுறைகளை கேட்டறிந்து அரசு அதன் அடிப்படையில் வக்ஃப் வாரிய நிலங்களை மீட்க உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும்.

  9. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் எத்தனை வக்ஃப் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்களென மாதம் தோறும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென அரசாணை பிறப்பிக்கபட்டும் அது இன்று வரை மாவட்ட ஆட்சியர்கள் அலட்சியப்படுத்தி வருகிறார்கள். மேற்படி வக்ஃப் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  10. ஒத்தி மற்றும் வாடகைக்கு விடப்பட்ட வக்ஃப் நிலங்களின் ஒப்பந்தததை உடனடியாக இன்றைய பொருளாதார அடிப்படையில் புதுப்பித்து வக்ஃப் வாரிய வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும்.

  11. சிறுபான்மை சமூகம் பயன்பெறும் வகையில் வக்ஃப் வாரியம் மூலமாக பள்ளிக் கூடங்கள்இ மருத்துவக் கல்லூரி சட்ட மற்றும் வக்ஃப் வாரிய பல்கலைக்கழகம் ஏற்படுத்த மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza