அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த இரண்டு நாட்களாக ஜீதமிழில் கண்ட உறைய வைக்கும் சம்பவம் என்னை இன்று இந்த உண்மை நிகழ்வை எழுத தூண்டியது..இது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நல் நோக்குடன்....இன்றைய சூழ்நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்திலும் முன்னேறி வருகின்றனர் என்பதில் ஒரு விதம் மகிழ்ச்சி இருந்தாலும், மறு புறம் அது பல விதங்களில் தீயதை தருகிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
இன்று எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மிகவும் சுதந்திரமாகவும், அவர்கள் எண்ணியதை எப்பாடு பட்டேனும், கடல் கடந்தேனும் படிக்க வைக்க முயல்கின்றனர். தங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலும், அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதையே குறிக் கோளாக கொண்டுள்ள பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தையும், ஆசைகளையும் மறைத்து மறந்து வாழ்கின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு பரிசாக இந்த காலத்து பிள்ளைகள் கொடுப்பதெல்லாம் அவமானமும் தலைகுனிவும் தான்.
இது தேவையா?
ஏழு வருடமாக காதலித்து அவனின் குழந்தையும் சுமந்துக்கொண்டு வாழ்க்கை கொடு என அவள் அவன் காலை பிடிப்பதும், திமிராக அவன் கிளிப்பிள்ளை போல் முடியாது முடியாது என்றும், முடியாது என்பது நிச்சயம் என்றும் அவன் கூறுவது தவறான பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் நம் பெண்களுக்கு தேவையான பாடம் தான். காதலிக்கும் வரை தான் ஹீரோ, ஹீரோயின் என்ற எண்ணம் பெருக்கெடுக்கும். அவன் தேவை முடிந்ததும், எளிதாக தூக்கி எறிந்து ஆண் என்னும் திமிருடன் தலைநிமிர்ந்து நிற்கிறான். நிச்சயமாக இதற்கு பிறகும் மானங்கெட்ட கூட்டம் அவனுக்கு பெண் கொடுக்க முன்வரவே செய்யும். காரணம் இச்சமூகமானது, ஆண் என்றால் குத்திவிட்டு கம்பிரமாக நிற்கும் முள்ளாகவும், பெண்ணை கிழிந்தால் தூக்கி எரியும் சேலையாகவும் தான் பார்க்கிறது. மொத்த இழிவும் பெண்ணிற்கே. இதற்கு பிறகும் அவனுக்கு வாழ்க்கை இருக்கிறது.. ஆனால் அவளுக்கு? அந்த தைரியத்தில் தானே போலிஸ்ல கம்ளைன்ட் கொடு என சொல்கிறான்? ஓட்டை நிறைந்த சட்டமும், இந்த ஆணாதிக்க வெறிபிடித்த சமூகமும் அவனை காப்பாற்றும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் அவன்!ஆனால் அப்பெண்????? வீதி ஏறி போராடி பலன் கிடைத்ததா? இல்லை டிவியில் லட்சுமி ராமக்கிருஷ்ணனிடம் பஞ்சாயத்து வைத்ததால் வாழ்வு கிடைத்துவிட்டதா? அவமானத்தையும் ,இழிவையும் தவிர என்ன எஞ்சியிருக்கிறது இப்போது? தன் வாழ்க்கையும் வீணாக்கியது போதாதென்று தன் தங்கையையும் காதலிக்க வைத்து , ஊர் உலகம் பார்க்க குடும்பத்தை பார்த்து காரிதுப்ப வைத்ததை தவிர என்ன என்ன சாதித்துவிட முடிந்தது இப்போது? நம்மை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதிவலை பற்றிய எச்சரிக்கைகள் அவ்வபோது சொல்லப்பட்டும் சிக்கிதான் சீரழிவேன் என்று போகும் பெண்களை கண்டு பரிதாபம் கொள்ள மனம்வரவில்லை. இதை தொடர்ந்தே இந்த உண்மை சம்பவத்தை இங்கு பகிர்கிறேன்.
ஏமாந்த பெண்களுக்கும் இனி ஏமாற காத்து இருக்கும் பெண்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மேற்க் கண்ட சம்பவமும், இனி கீழ் வரும் சம்பவமும் ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
என் வீட்டிற்கு அருகில் மிகவும் நடுத்தர வசதி கொண்ட ஒரு முஸ்லிம் குடும்பம் வசித்து வந்தனர். எல்லாரையும் போல் இந்த தாயும் தான் படிக்க முடியாத, அடைய முடியாத உயரத்தை தன் பிள்ளைகள் அடைய வேண்டும் என்று விரும்பினார்.
தன் பிள்ளைகளை உயர்ந்த படிப்பில் படித்து, நல்ல நிலைமையை அடைய பேங்க் லோன் அப்படி இப்படின்னு கடன, வுடன வாங்கி படிக்க வைத்தார்கள். வீட்டில் இருந்து படித்தால் வீட்டு வேலைகளுக்கு இடையில் படிப்பில் கவனம் சிதறும் என்று, உயர்ந்த செலவில் நல்ல பள்ளி, கல்லூரிகளில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தனர். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்துள்ளோம் என்பதை மறந்து அவர்களும் எந்த வித கட்டுப்பாடும் இன்றி நட்பு வட்டாரத்தில் சுற்றி சுழன்டனர். மொபைல், கம்பூட்டர் என்று அவர்கள் வசதியை பெருக்கி கொடுத்தனர்.
மூன்று பெண் பிள்ளைகளும் நன்றாக, மிகவும் சுதந்திரமாக படித்தனர். இரண்டாம் டிகிரி முடிக்கும் நிலையிலேயே முதல் பெண்ணிற்கு நல்ல வரன் வந்தது. வந்த மாப்பிள்ளையோ பெண்ணின் உயர்ந்த டிகிரிக்கு ஏற்றார் போல் வரதட்சனையும் தாரளாமாக கேட்டார்.
நன்கு படிக்க வைத்தது போல் சிறந்த வாழ்க்கையும் அமைத்து தர வேண்டும் என்று எண்ணிய அவர்கள் மேலும் கடனை வாங்கி திருமணத்தை முடித்துக் கொடுத்தனர் அவளின் பெற்றோர்கள். திருமணத்திற்கு பிறகு அவள் படித்த படிப்பிற்கு உயர் சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் அளவில் தன் மகள் உயர்ந்த நிலையில் உள்ளாள் என்று பெற்றோர்களுக்கோ ஆழ்ந்த பூரிப்பு. இந்த கானல் நீர் பூரிப்பை தவிர வேறு ஒன்றும் மிச்சமில்லை.
இதே போல் நமது இரண்டாவது மகளும் நன்கு படிக்க வேண்டும். உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைத்து நமக்கு பொருளாதார ரீதியில் உதவ வேண்டும் என்று மனக் கோட்டை கட்டினர் அவர்களின் தாய். அவளும் தனது படிப்பை சிறப்பாக முடித்தார். தன் பெற்றோர் எண்ணியது போல் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று சிந்தித்த அவள் பல இடங்களில் வேலை தேடினார்.
அவள் நினைத்தப் படி தான் வசிக்கும் ஊரில் இருந்து ஒரு நாள் தூரம் பயணிக்கும் தொலைவில் ஒரு வேலையை கண்டெடுத்தாள் அவள் நண்பர்களின் உதவியால்.
பெண் பிள்ளையை இவ்வளவு தொலைவு தனியாக அனுப்புவதை பற்றி கொஞ்சமும் சிந்திக்காத பெற்றோர் அவள் விருப்பப்படி வேலைக்கு அனுப்பினர் பணம் வரும் என்ற ஆசையில். மாதம் ஒரு முறை, இரு முறை, விஷேசம் என்று தன் வீட்டை எட்டிப் பார்த்த அவள் தான் வேலை பார்க்கும் ஊரில் சுதந்திரப் பறவையாக பறந்தாள்.
முதல் பெண்ணைப் போல் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் சில ஆயிரங்கள் சம்பாதித்து அனுப்பினாள். பெண் பிள்ளையை பணயம் வைத்து பணம் வருகிறது என்று ஒரு துளி கூட அவர்கள் வருந்தவும் இல்லை, அதை தடுத்து கண்ணியத்தை காக்க முயற்சிக்கவும் இல்லை.
பணம் வந்தால் போதும் என்ற மன நிலையிலும், “கேட்பவர்களுக்கு எங்கள் பிள்ளை மேல் எங்களை விட நம்பிக்கை யார் வைக்க முடியும்” என்று அசட்டு பதிலும் கூறி வந்தனர்.
காலங்கள் கடந்தன கல்யாண வயதையும் தாண்டி! பார்க்கும் மாப்பிள்ளை எல்லாம் இவன் சரி இல்லை அவன் சரி இல்லை என்று அவளும் காலத்தை கடத்தினாள். ஒரு நாள் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீடோ இவளை பிடித்து விட்டதாகவும், கல்யாணத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று பேசும் அளவிற்கு அவளது திருமணம் அருகில் வந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு பதில் சொல்வதாக திருப்பி அனுப்பி வைத்து அவளது பதிலுக்காக காத்திருந்த வேளையில் அவளோ ஒன்றும் சொல்லாமல் தன் வேலையை தொடர தொடர் வண்டியை பிடித்தாள்.
ஒரு மாதம் ஆனது, இரண்டும் மாதம் ஆனது, மூன்று மாதங்களாக வீட்டு பக்கம் எட்டி பார்க்காத, பதிலும் தராத மகளை எண்ணி தவித்தனர். தொலைபேசியின் இணைப்பும் துண்டித்து இருந்தது.
இத்தனை நாள் அவள் எங்கு வேலைப் பார்க்கிறாள், என்ன வேலை பார்க்கிறாள், யாருடன் வசிக்கிறாள் என்று எண்ணாத பெற்றோர் சற்று பதட்டம் கொள்ள ஆரம்பித்தனர். என்ன செய்வது என்று அறியாமல் இருந்த வேளையில் தான் அந்த கடிதம் அவர்களுக்கு எட்டியது.
படிப்பறிவில்லாத பெற்றோர்களோ இது என்னவென்று அறிய தனது மூன்றாவது மகளை நாடினார்.
அதைக் கண்ட அவள் திடுக்கிட்டாள். பேச்சு வராது ஊமையாகினாள். கதறினாள். என்னவென்று அறிய காத்து இருந்த அவளது பெற்றோர்களோ என்ன என்னவென்று கதறிக் அழுதனர்.
அந்தக் கடிதமோ, சர்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் முடித்துக் கொண்டதற்கான சான்றிதழ், உடன் ஒரு லட்டரும் எழுதி இருந்தாள்.
“எனக்கு நீங்கள் பார்த்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை, பதிலை எண்ணி காத்து இருந்த உங்களிடம் அதை சொல்லவும் வார்த்தைகள் இல்லை. அதனால் தான் நான் போனில் கூட உங்களிடம் தொடர்பு கொள்ளவில்லை. காரணம் நான் என்னுடன் கல்லூரியில் படித்த என் தோழனை கடந்த ஐந்து வருடமாக காதலித்தேன், திருமணம் முடித்துக் கொண்டேன்.
அவர் மாற்று மதம் என்பதால் உங்களிடம் சொல்ல தயக்கமும், உங்கள் எதிர்ப்பை எண்ணி பயமும் வந்தது. அதனால் என்னுடைய வாழ்க்கையை உங்கள் சம்மதமின்றி நானே தேடிக் கொண்டேன். எனக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன.
உடனே தெரிவித்தால் என்னை அவரிடம் இருந்து பிரித்துவிடுவீர்கள் என்ற பயம் என்னை ஊமையாக்கியது. சிறிது நாட்கள் கழியட்டும் என்று காத்து இருந்தேன். இனி என்னை தேட வேண்டாம், அவரை நம் மதத்திற்கு அழைத்து வர முயற்சிப்பேன், அவர் சம்மதித்தால் அவரை உங்கள் மருமகனாக நம் வீட்டிற்கு அழைத்து வருவேன். இல்லையெனில் உங்களுடானுனான உறவை துண்டித்துக் கொள்வேன் உங்கள் சம்மதம் வரும் வரை”.
கடிதம் முடிக்க முற்றுப் புள்ளி இட்டவள் தன் குடும்ப மானம் கொடி கட்டி பறக்க ஆரம்பம் இட்டாள். இன்று அந்த குடும்பமே வெளியில் செல்ல முடியாமல், சகஜமாக மற்றவர்களுடன் பேச முடியாமல், கூனி குறுகி ஒரு கைதி போல் சில வருடங்களாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.
அவளை நேரில் கண்ட நான் எழுப்பிய வினா? பக்கத்து வீட்டில் வசிக்கும் எனக்கே எத்தனை பெரிய ஏமாற்றம், கோபம், வருத்தம் வருகிறதென்றால், அப்போ உன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு??
என் மனம் சொல்லியது “உன்னை கொல்லும் உரிமை எனக்கில்லை இல்லையெனில்.......”.
உன் குடும்பம் உன்னை, உன் காதலை ஏற்றுக் கொள்ளாது என நீயே முடிவு செய்தது ஒரு பக்கம் இருக்க, அவனை இஸ்லாத்தில் இணைக்காமல் திருமணம் முடித்துக் கொள்ள உன்னால் எப்படி முடிந்தது. உன் வரையறை இதுவானாலும் வல்ல இறைவன் வகுத்ததோ...
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல் குர்-ஆன் 2:221).
உன் பெற்றோர் மகள் என்ற பேரில் இத்தனை நாள் பாம்பிற்கு பால் வார்த்துள்ளனர். தான் அடைந்த கஷ்டத்தை தன் பிள்ளைகள் அடையக் கூடாது என்று நம்பிக்கையுடன் சுகமான பள்ளி, கல்லூரி வாழ்க்கை, விருப்படி வேலை, மொபைல், கம்ப்யுட்டர் என்று உன்னை ஆளாக்கிய உன் பெற்றோருக்கு நீ கொடுத்த பரிசு இது தானா? இன்று அவர்களோ கடனில் மூழ்கி பட்டினி, ஓடிப் போன மகளின் பெற்றோர்.
சிந்தித்தாயா????? வயதான உன் பெற்றோர் நிலை என்னாவது? உனக்கு பின்னால் இருக்கும் தங்கையின் வாழ்வு என்னாவது? உன்னை பற்றி விசாரிக்கும் ஊராற்கு என்ன பதிலுரைப்பது?
இத்தனை வருடம் உன்னை சுமந்து பெற்றெடுத்து, உன் சுக போக வாழ்விற்காக தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகு போல, அவர்களின் வாழ்வை உருக்கி உன்னை ஒளி கொள்ள செய்தனர். ஆனால் நீயோ???.
இஸ்லாத்தின் சட்டப்படி நீ ஒருவரை விரும்பவதும், வெறுப்பதும் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டுமே தவிர உன் சுய இன்பம் மற்றும் சுய வாழ்விற்காக இருக்க கூடாது என்பதை நீ உணரவில்லையா?? இஸ்லாம் போதித்தது இது தானா?? இவ்வுலக வாழ்வின் இன்பத்திற்காக உயிரினும் மேலான உன் இறைவனை நிராகரித்து, அற்ப வாழ்வை நீ தேர்ந்தேடுத்துள்ளாய். நபி(ஸல்) அவர்களின் வாக்கை ஒரு முறையேனும் வாசித்துப் பார்த்தாயா???
இதையே இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:-
எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார்.அவை:1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குறியோறாவது2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல இறை மறுப்பிற்கு திரும்புவதை அவர் வெறுப்பது என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் புஹாரி எண்: 6941
ஆனால் நீயோ இறை வழிக்கும், நபி மொழிக்கும் மாற்றத்தை கொண்டு சுகம் என்று நினைத்து சுமையை கொண்டுள்ளாய். தாய், தந்தையை நிராகரித்துள்ளாய். உன் தங்கை வாழ்வை கேள்விகுறியாக்கியுள்ளாய். நம்பிக்கை என்ற ஆயுதத்தைக் கொண்டு மிகப் பெரும் துரோகம் செய்துள்ளாய். இன்று நீ செய்த துரோகத்தை நாளை உன் பிள்ளை உனக்கு செய்யாது என்பதற்கு என்ன சான்று?
நீ நல்லோர் கூட்டத்தில் இருந்தால் அல்லாஹ் உனக்கும் உன் கணவருக்கும் நல் வழி காட்டுவானாக!!!
இன்று காதல் என்னும் பேரில் பெற்றவர்களை மறந்து இரு குடும்பத்தில் பேசி தீர்க்க வேண்டிய அந்தரங்க விஷயங்களை நீதி தேடி டீ.வி, நீயூஸ் பேப்பர் என்று ஊரே அலங்கோலப் பட செய்கின்றனர்.
இதனால், தான் செய்த தவறால் நம் பெற்றோருக்கு தலைக் குனிவை ஏற்படுத்துகிறோம், உடன் பிறவந்தவர்களின் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்குகிறோம் என்று எந்த குற்ற உணர்வு இல்லாமல் சுய நலமாக சிந்திக்கும் இவர்களை என்ன செய்வது???
பல வருடங்கள் காதலித்து, ஊரைச் சுற்றி அலையும் ஆண் பெண்ணுக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டவுடன் பிரிந்து செல்வதும், வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொள்வதும், கற்பம் அடைய செய்து காதலித்து பெண்ணை ஏமாற்றி கதறி அழ வைப்பதும், தன்னை மணம் செய்து கொண்டவருக்கு துரோகம் செய்வதும், கரை பட்ட உடையை மாற்றுவது போல் ஒரு நிமிடத்தில் செய்து விடுகின்றனர்.
உண்மைக காதல் என்று எண்ணி சில கயவர்களின் பசிக்கு ஆளாகும் பெண்களே என்று உணரப் போகிறீர்கள் காதல் என்பது கானல் நீர், அவர்களின் ஆசைக்கு நீங்கள் ஒரு போகப் பொருள் என்பதை...
இன்று நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நாளை மறுமை என்னும் நிரந்தர வாழ்வில் பதில் அளிக்க வேண்டும் என்பதை அனைவரும் மறந்து விடுகின்றனர். யாரும் காணாமல் அந்நிய ஆணுடன் ஊரை சுற்றி தவறு செய்தாலும் நம்மை படைத்த இறைவன் நம் அனைத்துக் காரியங்களும் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் அதற்கான தண்டனை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல் குர்-ஆன் 6:32)
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது, அது போல் பெற்ற பிள்ளைகளை பேணி சரியான முறையில் வளர்ப்பது பெற்றோரின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும்.
பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களே உஷார்!
Ø பெற்றோர்கள் தங்கள் பிள்ளையுடன் ஒரு மேலதிகாரி, ஊழியன் உறவு போல் அல்லாமல் நட்புடன் பழக வேண்டும். சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். நாம் ஒரு சிறந்த அன்பு நிறைந்த பெற்றோராக நடந்துக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் வேறு ஒருவரிடம் அன்பைத் தேடி செல்ல மாட்டார்கள்.
Ø அளவுக்கு அதிகமாக வெறுப்பைக் காட்டுவது, திட்டுவது, சந்தேகிப்பதும் கூடாது.
Ø அளவுக்கு அதிகமாக வெறுப்பைக் காட்டுவது, திட்டுவது, சந்தேகிப்பதும் கூடாது.
Ø சிறு வயது முதல் உலக கல்வியை கொடுக்க முற்படும் நாம் மார்க்க கல்வியை கொடுக்க தவறுவதே இது போன்ற விளைவுகளை கொடுக்கிறது.
Ø ஐந்து வேலை தொழுகையை வலியுறுத்துவது அவர்களின் எண்ண அலைகளை கட்டுப் படுத்த உதவும். மனதை நிதானப்படுத்தும், பொறுமையைக் கொடுக்கும். மானக்கேடான விஷயங்களில் ஈடுபட நம்மை சிந்திக்க வைக்கும்.
இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். (அல் குர்-ஆன் 29: 45)
Ø மாத பயான்களுக்கு அழைத்து செல்வதும், இபாதத் நிறைந்த பெண்களுடன் பழக வைப்பதும் மனதில் ஒரு மாற்றத்தை கொடுக்கும். தவறான எண்ணங்கள் உதித்தால் களைய உதவும்.
Ø அந்நிய ஆண்களுடன் பழகும் வரைமுறையை இஸ்லாம் கற்றுத் தரும் முறைப்படி கற்றுத் தர வேண்டும்.
Ø நாம் படும் கஷ்டத்தை, கடனை நம் பிள்ளைகளுக்கு தெரிவிப்பது அவர்களை சூழ்நிலை அறிந்து நடக்க, உயர உதவும்.
Ø பெண் பிள்ளைகளை வளர்க்கும் நாம் சுதந்திரம் என்ற பேரில் அதீத நம்பிக்கையை கொண்டு வளர்ப்பது தவறல்ல. ஒரு பருவம் வந்தவுடன் அவர்களது அனைத்து செயல்களையும் உற்று கவனிப்பது பெற்றோரின் கடமையே. அது சந்தேகம் அல்ல அவர்கள் மீதுள்ள அக்கறை என்பதை விளங்க வேண்டும்.
Ø பருவம் வந்தவுடன் தனிமையை (ஹாஸ்டலில் படிக்க வைப்பது, வெளியே தங்க வைப்பது) கொடுப்பது அவர்களின் தவறான எண்ணத்திற்கு நாமே வழி ஏற்படுத்தி கொடுப்பதற்கு சமம். மாறாக நம்பகமான உறவினர் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள பள்ளி கல்லூரிகளிலேயே படிக்க வைக்கலாம். நம் கண் பார்வையில் வைத்துக் கொள்வது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உகந்தது.
Ø அவர்களின் நட்பு வட்டத்தை நாமும் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.
Ø கல்யாணத்திற்கு முன்பு தனியாக வேலைக்கு அனுப்புவதும், வெளியே தங்க வைப்பதும் சிறந்ததல்ல. இவ்வாறு செய்வது அவர்கள் தவறு செய்வதற்கு ஏதுவாக பெற்றோர்களே வழியமைத்து வாழ்த்துவதற்கு சமம்.
நம்பிக்கை என்ற பேரில் இன்று தானும் வழி தவறி, தன் குடும்பத்தையும் சிதைத்த இவளை போல் நாளை எத்தனை பேரோ. தான் எடுக்கும் ஒரு நொடி முடிவிற்கு முன், தன்னை சார்ந்தவர்களை சிந்தித்து பார்ப்பதும், பாதகம் ஏற்படாமல் நடந்துக் கொள்வதும் ஒவ்வொருவரின் கடமை.
பெற்றோர்களே!!! உங்கள் குழந்தைகளின் தலைநிமிரும் வாழ்க்கைக்கான பாதையை ஏற்படுத்த பாடுபடுங்கள்.. அவர்களின் வாழ்வு செழுமைக்கு உங்களின் கண்காணிப்பும் அறிவுரையும் தான் முதல் தேவை.
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! (25:74)video : http://www.tamiltvshows.net/2013/04/solvathellam-unmai-23-04-2013-zee-tamil.html
உங்கள் சகோதரி
யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்
யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்
source: Islamiyapenmani.com
0 கருத்துரைகள்:
Post a Comment