Thursday, April 4, 2013

சவுதியில் இந்தியர்கள் பணி இழப்பு: கேரளாவை சேர்ந்தவர்களுக்கு இலவச விமான டிக்கெட்!!


வெளிநாட்டவர் சவுதி அரேபியாவில் பணிபுரிவது தொடர்பாக அந்த நாட்டு அரசின் புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் பலர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி பணி இழந்தவர்கள் கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை மத்திய அரசே செலுத்த முன்வந்துள்ளது என கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.


சவுதி அரேபிய அரசு, புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, அங்குள்ள நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளில் 10 சதவீதத்தை, அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்க வேண்டும்.

சவுதி அரேபிய அரசின் இந்த புதிய சட்டத்தால் அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள்தான், அதிகம். இனால்தான், கேரள அரசு, தமது மாநில மக்களுக்காக சில முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

இது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில், “வேலை இழக்கும் இந்திய தொழிலாளர்கள் இந்தியா திரும்புவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதுகுறித்து வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர், வயலார் ரவியிடம் ஆலோசித்தோம்.

இதையடுத்து வேலை இழக்கும் தொழிலாளர்கள் கேரளா திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள் சவுதியில் வேலை இழந்து திரும்பினால் அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
சவுதியில் கணிசமான எண்ணிக்கையில் தமிழக தொழிலாளர்களும் உள்ளார்கள். இவர்கள் தொடர்பாக தமிழக அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா தெரியவில்லை.

source: viruviruppu.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza