குஜராத்தில் செயல்பட்டு வரும் பெரும் நிறுவனங்களுக்கு மோடி அரசு சலுகை காட்டியதால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி மோடி அரசு மீது குற்றம் சுமத்தி சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாவன:
மாநில அரசுக்கு சொந்தமான குஜராத் மாநில பெட்ரோநெட் லிமிடெட்-க்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும் கடந்த 2007–ம் வருடம் ஒரு உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி, பருச் மாவட்டத்தில் உள்ள பத்புட் என்ற இடத்திலிருந்து கியாஸை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு குழாய் வழியாக எடுத்துச் செல்லலாம். உடன்படிக்கையின் படி, கியாஸை எடுத்துச் சென்ற ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒப்புக்கொண்ட விதிமுறையை மீறி ஒற்றை கட்டண வீதத்தின்படி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.52.27 கோடி ரூபாய் கூடுதல் லாபம் கிடைத்துள்ளது.
மாநில அரசுக்கு சொந்தமான குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம், அதானி பவர் லிமிடெட்டுடன் செய்து கொண்ட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தில் காணப்படும் விதி முறைகள் மீறப்பட்டு, போதிய அளவிறகு மின்சாரம் வழங்கப்படாத நிலையிலும், அதற்கு அபராதத் தொகை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, அதானி பவர் லிமிடெட் நிறுவனம் 160.26 கோடி ரூபாய் பலன் அடைந்துள்ளது.
எஸ்ஸார் உருக்கு நிறுவனம் சூரத்தில் செய்த ஆக்கிரமிப்புகளை குஜராத் மாநில அரசு முறைப்படுத்தி கொடுத்ததால், 7 லட்சத்து 24 ஆயிரத்து 897 சதுர மீட்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இந்த இடத்திற்கு மாநில அரசு, சதுர மீட்டர் ஒன்றுக்கு தற்காலிக மதிப்பாக ரூ.700 என விலை நிர்ணயம் செய்தது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல . இதற்கு அரசு அளிக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
மேலும், போர்டு இந்தியா மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கும் அரசு நிலத்தை வழங்கி இருப்பதில் விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படாமல் மீறப்பட்டுள்ளதால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் நரேந்திர மோடி அரசில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் மற்றும் முறைகேடுகளால் அரசுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று சி.ஏ.ஜி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: Inneram
0 கருத்துரைகள்:
Post a Comment