SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே. எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 2012 பிப்ரவரியில், தமிழக சட்டசபையில் தே.மு.தி.க எம்.எல்.ஏக்களுக்கும், தே.மு.தி.க விலிருந்து கொண்டே அ.தி.மு.க வுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏக்களுக்கும் இடையே ஏற்பட்ட விவாதம் கைகலப்பில் முடிந்தது.
இந்த பிரச்சனை சபாநாயகரால் உரிமை குழுவிற்கு அனுப்பப்பட்டு, அதன் முடிவின் அடிப்படையில் இன்று சட்டசபையில் அவை முன்னவர் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள், சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ க்களை ஒரு வருடம் பதவி நீக்கம் செய்ய முன் மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .
சட்டசபையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்திருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் அதே சமயம் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை அதிகபட்சமானது. சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏக்களை மன்னிப்பு கோர உத்தரவிட்டிருக்கலாம், அல்லது ஒரு வாரமோ, 15 நாட்களோ சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.எல்.ஏக்களை ஒரு வருட காலம் மக்கள் பணிகளை செய்ய முடியாமல் முடக்குவது என்பது அந்த தொகுதி மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இது ஜனநாயக விரோதமானது எனவே 6 எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற்று அந்த தொகுதி மக்களின் ஜனநாயக உரிமையை காத்திடுமாறு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக தமிழக முதல்வரையும்,சபாநாயகரையும் கேட்டு கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment