Wednesday, March 6, 2013

ஹியூகோ சாவேஸ்: ஒரு புரட்சித்தலைவனின் மரணம்….!

வெனிசுலா: இருபத்தோராம் நூற்றாண்டில் புரட்சி என்கிற சொல்லை புதிய கோணத்தில் மறு அறிமுகம் செய்து வைத்தவர் வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ். 1954ல் பிறந்து சாவேஸ் 1975ல் மிலிட்டரி அகாடெமியில் பட்டம் பெற்றார். கொரில்லா தாக்குதல் இல்லை... ராணுவத்தை வைத்து கலகம் செய்யவில்லை... ஒரு குண்டு கூட வெடிக்காமல், கத்தியின்றி ரத்தமின்றி முறைப்படி தேர்தலில் நின்று, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவர் சாவேஸ். மக்களின் மனம் கவர்ந்தவர் இந்த புரட்சி நாயகன். வெனிசூலாவில் சாவேஸ் நிகழ்த்திக் காட்டியஅமைதிப்புரட்சி, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. எனவேதான் காஸ்ட்ரோவுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் புரட்சியாளராகவே கருதப்படுகிறார்.
திறமையான ஆட்சி:

வெனிசூலா என்னும் தேசத்தின், ரத்தமும் நகமும் சதையும் உயிரும் ஆன்மாவுமாக இருப்பவர் சாவேஸ். காஸ்ட்ரோவை முன்னோடியாக கொண்டு வெனிசுலாவை ஆட்சி செய்தாலும் இவர் கம்யூனிஸ்ட் இல்லை. மிகவும் பின்தங்கிய, பொருளாதார பலம் இல்லாத தேசமாக இருந்த வெனிசூலாவை, சாவேஸ் தமது திறமை மிகுந்த ஆட்சியாலும் அச்சமற்ற நடவடிக்கைகளாலும், வளரும் நாடுகளில் ஒன்றாக்கி இருக்கிறார்.

நித்தம் நித்தம் யுத்தம்:

அமெரிக்கா, தன் உளவுத்துறை மூலம் தூண்டிவிட்ட உள்நாட்டுக் கலகங்களைத் திறம்பட சமாளித்தார். தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே குறியாக கொண்டு செயல்பட்ட சாவேஸ்க்கு இந்த சவாலினால் நித்தம் நித்தம் யுத்தம்தான். மரணம் வரையிலும் தினம் தினம் புரட்சிதான்.

ஆதாரத்துடன் நிரூபித்த சாவேஸ்:

கியூபா அதிபர் காஸ்ட்ரோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவை எதிர்த்த இன்னொரு நாயகன் தான் ஹியூகோ சாவேஸ்.ஒரு நாடு வளர்கிறது என்றால் அமெரிக்காவிற்கு தாங்காது. எப்படியாவது உள்நாட்டு கலகத்தை ஏற்படுத்தி ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள். தன் உள்நாட்டு கலவரத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று ஆதாரத்துடன் நிருப்பித்தவர் சாவேஸ்.


அமெரிக்க அதிபர் புஷ்ஷை ஐநா சபையில் சாத்தான் என்று தைரியமாக விமர்ச்சித்தவர்:

பெரியண்ணன் போக்குடன் செயல்பட்டு வந்த அமெரிக்க அதிபர் புஷ்ஷை ஐநா சபையில் சாத்தான் என்று தைரியமாக விமர்ச்சித்தவர் சாவேஸ். இதன்பின்னர் ஊடகங்களின் பார்வை இவர்பக்கம் திரும்பியது. ஐ.நா.வை பேசாமல் ஜெரூசலமுக்கோ அல்லது வேறு ஒரு வளரும் நாட்டுக்கோ மாற்றிவடலாம் என்று யோசனை கூறியவர் சாவேஸ்.


உண்மையான புரட்சி நாயகன்:

அரசாங்கம் சந்திக்கும் முதல் பெரும் செலவு இராணுவத்துறை தான். ஆனால், சாவேஸ் தனது இராணுவ வீரர்கள் நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்தினார். மீன் பிடிக்கவும், வீட்டை கட்டிக் கொடுக்கவும், பள்ளிப் பாடம் எடுக்கவும் இராணுவ வீரர்கள் உதவியாக இருந்தனர். நில சீர்திருத்த சட்டத்தால் 21 நபர்கள் 612289 ஹேக்டேர் நிலத்தை சுருட்டி இருப்பதை கண்டு பிடித்து, அந்த இடங்களை எல்லாம் அரசுக்கு சொந்தமாக்கினார். "மீனுக்கு தண்ணீர் ; இராணுவத்துக்கு மக்கள் " என்ற மாவோ வழியை பின்பற்றினார். வளைகுடா போருக்கு பிறகு சதாமைச் சந்தித்த ஒரே தலைவர் இவர் தான்.


14 ஆண்டு கால ஆட்சி:

ராணுவ வீரராக தொடங்கிய சாவேஸ் தனது திறமையால் வெனிசுலா அதிபராக கடந்த 1999-ம் ஆண்டு பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 4 வது முறையாக அதிபராக பொறுப்பேற்றார். மக்களின் மனதில் உண்மையான புரட்சித்தலைவராக உயர்ந்த இந்த மக்கள் நாயகனின் மரணம் வெனிசுலா மக்களுக்கு மட்டுமல்ல புரட்சியை நேசிக்கும் அனைவருக்கும் இழப்புதான்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza