கரகாஸ்: புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹூகோ சாவேஸ் (Hugo Chavez) இன்று மரணமடந்தார்.
தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராகக் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு பெற்று அதிபரான சாவேஸ் புற்றுநோயால் தமது 58 ஆவது வயதில் மரணமடைந்தது அந்நாட்டு மக்களுக்குப் பேரதிர்ச்சியாகும்.
வெனிசுலாவின் கிராமம் ஒன்றில் மண் குடிசையில் தம் பாட்டியால் வளர்க்கப்பட்ட சாவேஸ், அந்நாட்டு ஏழை மக்களால் நேசிக்கப்பட்டவர். 1992 ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியில் சாவேஸ் பங்கேற்றார். அது தோல்வியில் முடிந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விடுதலையான அவர் புதிய கட்சி தொடங்கி 1998 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார்.
கடந்த இரண்டாண்டுகளாகச் சிகிச்சையில் இருந்து வந்த அவர் பொதுமக்களின் முன் தோன்றவில்லை. 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறுவைச் சிகிச்சைக்காக க்யூபா சென்ற அவர் இதுவரை நான்கு முறை க்யூபா சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கடைசியாக க்யூபா சென்று வந்த பின் கடந்த இரு நாட்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வெனிசுலாவில் உள்ள ஈர்னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணத்தைத் தழுவினார். சாவேஸின் மரணத்தைத் துணை அதிபர் மடுரொ (Maduro) தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக வெனிசுலா நாட்டை ஆண்டு வந்த சாவேஸின் மறைவிற்கு தென்அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் ஆதரவு பெற்ற மடுரோ சாவேஸுக்குப் பின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவில் சாவேஸின் வாரிசாக மடுரோ தேர்ந்தெடுக்கப் படாவிட்டால் அந்நாட்டின் கொள்கைகளில் பெரும் மாற்றம் வரும் வாய்ப்புள்ளது.
க்யூபாவின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் உற்ற நண்பராகவும் அமெரிக்காவின் எதிரியாகவும் திகழ்ந்த சாவேஸின் பாதையைத் தாமும் தொடரப் போவதாக மடுரோ கூறியுள்ளார்.
source: www.inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment