புதுடெல்லி:1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட சைபுன்னிஸா காஸி என்ற முதிய வயது பெண்மணிக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனுமான மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக்குறித்து கட்ஜு கூறியது: சஞ்சய் தத்தை நேரடியாக சந்தித்ததில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதைப்போலவே சைபுன்னிஸாவும் கருணை காட்டப்பட வேண்டியவர் என்று நான் கருதுகிறேன். முன்பு இவரது வழக்கை நான் விசாரித்திருக்கிறேன். அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பையும், அதுதொடர்பான ஆவணங்களையும் ஆய்வுசெய்துள்ளேன். அவர் சதித்திட்டம் தீட்டினார் என்பதை நீதிமன்றமே உறுதிப்படுத்தவில்லை.
அதை நான் தற்போது எண்ணிப்பார்க்கிறேன். சைபுன்னிஸாவும் கருணைக்கு உரியவர் என்று கருதுகிறேன். மனிதாபிமான அடிப்படையிலும், அவரது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டும், அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றார் கட்ஜு.
சைபுன்னிஸாவுக்கு மன்னிப்பு வழங்கக்கோரி அவரது மகள் மஹராஷ்ட்ரா அரசுக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து கட்ஜு தனது ஆதரவை அளித்துள்ளார்.
இவ்வழக்கில் ஐந்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்ட சஞ்சய்தத்திற்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கட்ஜுஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். சஞ்சய் தத் போலவே சைபுன்னிஸாவுக்கும் நீதிமன்றம் 5 ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது. ஆயுதங்களை கைவசம் வைத்திருந்தது தொடர்பாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. தனது தாயாருக்கு மன்னிப்பு வழங்க கோரிக்கை விடுக்க கோரி கட்ஜுவுக்கு சைபுன்னிஸாவின் மகள் கட்ஜுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என்று கட்ஜு தனது வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தார்.
சஞ்சய்தத்திற்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்களும், அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தனது வயது முதிர்ந்த தாயாருக்கு மன்னிப்பு வழங்க ஏன் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை? என்று சைபுன்னிஸாவின் மகள் கேள்வி எழுப்பினார். “நான் ஏதேனும் ஒரு நடிகரின் மகளாக இருந்திருந்தால், எனது தாயார் ஒரு திரைப்பட நடிகையாக இருந்திருந்தால் அல்லது ஒரு எம்.பியின் சகோதரியாக இருந்திருந்தால் சஞ்சய் தத்திற்கு கிடைத்த ஆதரவு எனது தாயாருக்கும் கிடைத்திருக்குமே என்று சிந்திக்கிறேன். மனிதாபிமானத்தின் அடிப்படை சஞ்சய் தத்திற்கு மட்டும் ஏன் கிடைக்கிறது?” என்று சைபுன்னிஸாவின் மகள் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment