Sunday, March 10, 2013

பா.ஜ.க மீது மக்கள் அதிருப்தி – எல்.கே.அத்வானி!


புதுடெல்லி: ‘காங்கிரஸ் மீது மட்டும் அல்லாமல் பாரதீய ஜனதா மீதும் மக்களுக்கு அதிருப்தி உள்ளது’ என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானியே கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முன்பு முதல்–மந்திரியாக இருந்த எடியூரப்பா மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடுமையாக போராடி பாரதீய ஜனதா மேலிடம் அவரை முதல்–மந்திரி பதவியில் இருந்து நீக்கியது. பின்னர் அவர் அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார். ஆனால் அப்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருந்த நிதின் கட்காரி, எடியூரப்பா மீதான ஊழல் புகார் பிரச்சினையை சரிவர கையாளவில்லை என பாரதீய ஜனதா மூத்த தலைவரான அத்வானி அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ஆங்கில வார பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ‘‘பாரதீய ஜனதா ஊழலை சகித்துக் கொள்ளாது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் முன்பு ஏற்பட்ட பிரச்சினை தீர்க்க கட்சி கையாண்ட விதம் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது’’ என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.
மத்தியில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தான் கருதுவதாகவும், அதேபோல் சில வகைகளில் பாரதீய ஜனதா மீதும் மக்களுக்கு அதிருப்தி உள்ளது என்றும் பேட்டியின் போது அத்வானி தெரிவித்தார். என்றாலும், பாரதீய ஜனதாவின் எதிர்காலம் குறித்து தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
-thoothu online

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza