புதுடெல்லி:இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. எகிப்தில் 30 ஆண்டு காலம் அதிபராக இருந்த ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து கடந்த 2011இல் அந்நாட்டு மக்கள் புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் பதவி விலகினார். அங்கு முதன்முறையாக ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, முஹம்மது முர்ஸி புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். அவர் இப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவர் இரு தரப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தார். அப்போது, இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையில் சைபர் எனப்படும் இணையதள தொழில்நுட்பப் பாதுகாப்பு, எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மையம் ஒன்றை அமைப்பது, அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு, புராதனப் பொருள்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுப்பது ஆகியவை உள்பட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு தரப்பு ஒத்துழைப்புக்கான துறைகளை இனம்காண்பதற்கும் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பிரதமர் மன்மோகன் சிங் கூறியது:
அதிபர் முர்ஸியும் நானும் விரிவான முறையில் ஆக்கபூர்வமாக விவாதம் நடத்தினோம். எகிப்தில் புதிய ஜனநாயக சகாப்தத்தை ஏற்படுத்துவதில் அந்நாட்டு மக்களின் வீரம் மற்றும் தியாகம் பாராட்டுக்குரியது. அந்நாட்டுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. ஜனநாயகம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் எகிப்தை அதிபர் முர்ஸி சிறப்பாக வழிநடத்துகிறார். எகிப்தில் வெற்றிகரமான முறையில் நடைபெற்ற ஆட்சி மாற்றமானது, அப்பகுதிக்கு மட்டுமின்றி உலகத்துக்கே ஒரு உதாரணமாக அமையும். பல்வேறு துறைகளில் இந்தியாவும் எகிப்தும் ஒதுத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றார் மன்மோகன் சிங்.
முஹம்மது முர்ஸி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மன்மோகன் சிங் கண்ணியமான சகோதரர். இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயல்பட எகிப்து ஆர்வத்துடன் இருப்பதையே எனது பயணம் காட்டுகிறது. எகிப்துக்கு ஆதரவு அளிப்பதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் தீவிரமாக இருக்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இப்போது 5.5. பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இதை இரட்டிப்பாக வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆப்பிரிக்காவுக்கு இந்தியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் வழித்தடமாக எகிப்து மாற வேண்டும் என்று விரும்புகிறேன். எனது இந்தப் பயணம், எகிப்துக்கு மிகவும் முக்கியமானது என்றார்.
-thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment