Sunday, February 24, 2013

EIFF நடத்திய ‘ஆம்னஸ்டி’ விழிப்புணர்வுப் பிரச்சாரம்!

EIFF நடத்திய ‘ஆம்னஸ்டி’ விழிப்புணர்வுப் பிரச்சாரம்!

துபை:ஐக்கிய அரபு அமீரக(UAE) அரசு சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு ‘ஆம்னஸ்டி’ என்ற பொது மன்னிப்பை அறிவித்துள்ளது. இது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) வெளிநாட்டவர்களிடையே பரவலாகச் செய்தது.
“அமீரகத்திற்கு நம்பகமாக இருங்கள், பொது மன்னிப்பைப் பயன்படுத்துங்கள்” (BE LOYAL TO UAE, MAKE USE OF AMNESTY) என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை EIFF பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இந்தப் பத்து நாட்களில் EIFF தன்னார்வலர்கள் 20,000க்கும் அதிகமான மக்களைச் சந்தித்து இந்தப் பிரச்சாரத்தைச் செய்து சாதனை படைத்துள்ளனர். பர் துபாய், தேரா, கராமா, அல் கூஸ், ஜெபல் அலீ, ஸத்வா, சோனாப்பூர், முஸஃப்பாஹ், அபுதாபி நகரம், அல் அய்ன், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா, அஜ்மான், உம்மு அல் குவைன் என்று அமீரகத்தின் பல பகுதிகளில் ‘ஆம்னஸ்டி’ குறித்து தகவல்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வினியோகம் செய்து EIFF தன்னார்வலர்கள் பிரச்சாரம் செய்தனர்.
குறிப்பாக, பணியாளர் முகாம்கள், உணவு விடுதிகள், பலசரக்குக் கடைகள், பேருந்து நிறுத்துமிடங்கள், இறையில்லங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் போன்ற இடங்களில் சிறப்பு கவனம் எடுத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. சட்டவிரோதமாகக் குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்தும்படி கூறப்பட்டது.
துண்டறிக்கைகள் ஆங்கிலம், ஹிந்தி, உர்து, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் அச்சிடப்பட்டு வீடு வீடாக வினியோகிக்கப்பட்டன. இதற்காக அணுக வேண்டிய  சேவை மையங்கள், இமிகிரேஷன் அலுவலகங்கள் போன்றவை வழி காட்டப்பட்டன. சட்ட ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் சட்டவிரோதமாகக் குடியிருக்கும் 100க்கும் மேற்பட்ட மக்கள் EIFFஐ அணுகி பயனடைந்தனர். இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் ஆகிய நாட்டவர் அடங்குவர். 1000க்கும் மேற்பட்ட ஐயங்கள் EIFF குழுவிடம் அணுகி கேட்கப்பட்டன. இன்னும் சிலரை EIFF தன்னார்வலர்களே வேண்டிய இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தேவையான உதவிகைச் செய்தனர்.
‘ஆம்னஸ்டி’ குறித்த பொதுக் கூட்டங்களும் EIFF சார்பாக நடத்தப்பட்டன. வழக்கறிஞர் உமர் ஃபாரூக் இந்தப் பொது மன்னிப்பின் சட்ட விவரங்களை விவரித்துப் பேசினார். EIFF தன்னார்வலர்கள் தன்னலமின்றி செய்த இப்பிரச்சாரப் பணியினை அமீரக அரசு அதிகாரிகள் மனமார பாராட்டினர்.
source: thoothu online

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza