Saturday, February 23, 2013

மனித உரிமைகளை காக்கப் போராடும் அமெரிக்காவின் மறுபக்கம்

லக  அளவில் மனித உரிமை 
மீறல்கள், சமூக அநீதிகள், சர்வதேச 
விதிகள் மீறல்கள், குற்றவியல் 
சட்டங்களை தவறாகப் 
பயன்படுத்துதல்  போன்றவை 
நிகழும் நாடுகளில் அவற்றை 
ஆராய்ந்து  கண்டறிந்து  
வெளிச்சத்திற்கு கொண்டுவந்து நீதி 
கேட்டுப் போராடும்  ஓர் அமைப்பு 
ஓப்பன் சொஸைட்டி 
ஃபவுண்டேஷன்  (OPEN SOCIETY FOUNDATION).

 14 நாடுகளில் அலுவலகங்களுடன் இயங்கும் இதன் தலைமை 
அலுவலகம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருக்கிறது. ஜார்ஜ் 
(GEROGE SOROS) என்ற செல்வந்தரால் அரசாங்கங்களின் ஆதிக்கத்தினால் 
மனித உரிமைகள் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற 
குறிக்கோளுடன் 1979ல்  துவக்கப்பட்ட  ஓர் அறக்கட்டளை இது. இன்று  
ஒரு மிகப் பெரிய  சர்வதேச அமைப்பாக  உயர்ந்திருக்கிறது. ஐக்கிய 
நாடுகள் சபை அங்கீகரித்திருக்கிறது. இந்த அமைப்பின்   நீதி மற்றும் 
சட்டப்பிரிவு சமீபத்தில் ஓர் அதிர்ச்சியான அறிக்கையை 
வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க அரசின் வலிமை மிகுந்த உளவுத்துறையான சி.ஐ.ஏ. 
விசாரணை என்ற பெயரில் பல இஸ்லாமியர்களை வழக்குகள், கோர்ட் 
ஆணைகள் எதுவுமில்லாமல்  பிடித்து துன்புறுத்தி சித்ரவதை 
செய்துகொண்டிருக்கிறது. பல கொலைகளும் அடங்கிய இந்த 
மிருகத்தனமான சித்ரவதைகள் செய்யப்பட்டது  அமெரிக்காவில் 
இல்லை. உலகின் மற்ற பல நாடுகளில், சி.ஐ.ஏ. நடத்தும் அதிகாரப் 
பூர்வமற்ற கறுப்பு சிறைகளில். இந்த மாதிரி சித்ரவதைகளை அமெரிக்க 
அரசு செய்ய ஆரம்பித்ததன் நோக்கம்,  இந்தச் சிறைகள் இருக்கும் 
நாடுகள், இதுவரை கொடுமைப்படுத்தப்பட்டவர்களின்  எண்ணிக்கை 
ஆகியவற்றை மிகத் தெளிவாக, விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் இந்த 
அறிக்கையை தயாரித்தவர்.  216  பக்கங்களில்   1,600 க்கும் மேற்பட்ட 
ஆவணங்களின் சான்றுகளுடன்  புத்தகமாக வெளிவந்திருக்கும்  இந்த 
அறிக்கையின் சில பகுதிகளை அதுவும் சித்ரவதைகள் செய்யப்பட்ட 
முறைகளை அனுபவித்தவர்களின் வார்த்தைகளில் பதிவு 
செய்யப்பட்டிருப்பது, படிப்பவரின் மனதில் வலியை உண்டாக்கும்.  

அறிக்கையில் பாகிஸ்தான் உள்பட இம்மாதிரி கறுப்பு சிறைகள் 
இருக்கும். 54 நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது.  ஆப்கானில் துவங்கி, 
அகரவரிசையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நாடுகளில் அதிகம் அறிமுகம் 
இல்லாத குட்டி நாடுகளிலிருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, 
டென்மார்க் போன்ற பெரிய ஐரோப்பிய நாடுகளும் அடக்கம். அதில் 
இந்தியாவின் பெயர் இல்லாததில் ஒரு நிம்மதி.  இல்லாதிருப்பதின் 
காரணம், நமது அரசின் ராஜதந்திரமா அல்லது நம் நாட்டின் மீது 
அமெரிக்காவிற்கு நம்பிக்கையில்லையா என்பது தெரியவில்லை.


 இந்தச் சிறைகளில் சித்ரவதைக்குள்ளான 136 பேர்களின் பெயர், 
பின்னணி, எங்கே எப்படி கைது செய்யப்பட்டு, எந்த சிறைக்கு என்று 
கொண்டு செல்லப்பட்டார்கள் போன்ற விவரங்களையும் அவர்கள் 
அனுபவித்த தண்டனைகளையும்  இந்த அறிக்கை விவரிக்கிறது.

2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த அதிபயங்கர தீவிரவாதத் தாக்குதலின் 
பின்விளைவாக  அமெரிக்க அரசு எடுத்த முடிவுகளில் ஒன்று, சி.ஐ.ஏ.க்கு 
வழங்கப்பட்ட  சில சிறப்பு அதிகாரங்கள்.  உலகம் முழுவதும் இருக்கும் 
தீவிரவாதிகளை அந்த நாட்டு அரசுகளின் உதவியுடன் சி.ஐ.ஏ., 
தேடிக்கண்டுபிடித்து விசாரணைக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். 
அவர்களை  ஒரு ரகசிய சிறையில் சி.ஐ.ஏ.,  தீர விசாரித்து யார் அந்தத் 
தீவிரவாதி, யார் அந்தக் குழுவின் மூளை என்பதைக் கண்டறிந்து 
தண்டிக்கும். இதற்காக சி.ஐ.ஏ., மேன்மைப்படுத்தப்பட்ட சில விசாரணை 
டெக்னிக்குகளை கையாளலாம் என்பதுதான்  ரகசியமாக வழங்கப்பட்ட 
அந்தச் சிறப்பு அதிகாரம். இது, அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் 
புஷ்ஷால் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டோடு முடிவுக்கு வந்த இந்த 
விசேஷ அதிகாரத்தை மேலும்  நீட்டிப்பு செய்திருப்பவர் ஒபாமா.


இதைப் பயன்படுத்தி உலகின்  பல பகுதிகளில் அமெரிக்க 
ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு 
உதவுபவர்களை கண்காணித்து அவர்களை குண்டுக்கட்டாக  தூக்கி, 
இரவோடு இரவாக ஒரு தனி விமானத்தில் ஏதேனும் ஒரு 
நாட்டிலிருக்கும் கறுப்பு சிறைக்கு விசாரணைக்கு கொண்டு 
போய்விடுவார்கள். இந்த மாதிரி சிறைகள், அந்த நாடுகளில் அடர்ந்த 
காட்டுப் பகுதிக்குள்ளாகவோ அல்லது ஆளரவமற்ற ஒரு 
தீவுப்பகுதியிலோ இருக்கும். அந்நாட்டினருக்கே இப்படிப்பட்ட  சிறைகள்  
தங்கள் நாட்டில் இயங்குவது தெரியாது. தான் எங்கே 
கொண்டுவரப்பட்டிருக்கிறோம்  என்பது அப்படி 
கொண்டுவரப்பட்டவருக்கு தெரியாதது மட்டுமில்லை, அந்தக் கறுப்பு 
சிறை இருக்கும் நாட்டின் அரசுக்கு கூடகொண்டுவரப்பட்டிருப்பவர்கள் 
யார் என்று தெரியாது. காரணம், எங்கும் இவர்களின் பயணம் பதிவு 
செய்யப்படுவதில்லை.  

இரவு நேரங்களில் விசேஷ அனுமதியுடன் தரையிறங்கும் சி.ஐ.ஏ.யின் 
விமானம், அங்கிருந்து சில சரக்குகளுடன் திரும்பியதாக விமான 
நிலையங்களில் பதிவு செய்யப்படும். தேசப் பாதுகாப்பைக் காரணம் 
காட்டி, அந்த  விவரங்கள் கூட வெளியே அறிவிக்கப்படுவதில்லை. 
‘அரசாங்கங்கள் செய்யும் பயங்கரமான ஆள் கடத்தல்கள் இது’ என 
சொல்லுகிறார் புத்தக ஆசிரியர்.  கறுப்பு சிறையில் அமெரிக்க ராணுவ 
அதிகாரிகளும் சி.ஐ.ஏ., அதிகாரிகளும் விசாரணையை தொடர்வார்கள். 
மிருகத்தனமான மனித உரிமை மீறல்கள். சித்ரவதைகள் இங்கே 
அரங்கேறும். நிர்வாணமாக நிற்க வைத்து அடிப்பது, நாய்களைக் கடிக்க 
விடுவது, உடலில் ஒயர்களை இணைத்து தொடர்ந்து மெல்லிய 
மின்சாரம் செலுத்தி, நீண்ட நேரம் நிற்கச் செய்வது போன்ற பல 
தண்டனைகள். சிலர் இத்தகைய கொடுமைகளுக்குப் பின்னர், தவறாகக் 
கொண்டுவரப்பட்டவர்கள் என முடிவு செய்யப்பட்டு,  விடுதலையும் 
செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டதைப் போலவே திருப்பிக் 
கொண்டுவிடப்பட்டும் இருக்கிறார்கள்.


தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க, அமெரிக்க அரசு செய்யும்  இந்தச் சட்ட 
விரோதமான மனித உரிமை மீறல் கொடுமைகளுக்கு எப்படிப் பல 
நாடுகள் -கிட்டத்தட்ட உலகின் கால்பங்கு நாடுகள்= ஆதரவளிக்கின்றன 
என்பது ஓர் ஆச்சரியம். செப். 11 நிகழ்விற்குப் பின்னர், உலகம் 
முழுவதும் தீவிரவாதம்  மிக வேகமாக தலையெடுத்துக் 
கொண்டிருக்கிறது. அடுத்த இலக்கு உங்கள் நாடாகவே இருக்கலாம்  
என்று  பெரிய நாடுகளை நம்ப வைத்திருக்கும், உலக அமைதியைக் 
காக்கும்  போலீஸ்காரனாக தன்னை சித்தரித்துக் கொண்டிருக்கும் 
அமெரிக்காவின் ராஜதந்திர டெக்னிக்குகள் இதற்கு கைகொடுக்கின்றன. 
சிறிய நாடுகள் பொருளாதார ரீதியில் அச்சுறுத்தப்படுகின்றன.  அண்டை 
நாடுகளுடன் போரிடும் நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கி,  அமெரிக்கா 
தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது.

சட்டம், நீதி ஆகியவற்றின்  வரம்புகளைத் தாண்டி, அமெரிக்க அரசு  
இப்படிச் செய்வதை அந்த மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?  மாற்றம் 
வரும் என முழங்கி, முதல் முறை ஆட்சிக்கு வந்த ஒபாமா 
ஆப்கானிஸ்தானிலிருந்து, ஈராக்கிலிருந்து போர்ப் படைகளை வாபஸ் 
பெறுவேன் என அறிவித்ததற்காக உலக அமைதிக்கான நோபல் பரிசு 
பெற்றார்.  ஆனால்,அதை முழுவதுமாக   இன்னும் செய்யவில்லை. 
இரண்டாம் முறை வெற்றிக்குப் பின் உலக அமைதிக்காக அமெரிக்கா 
செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருக்கிறது என்று தன் நன்றி 
அறிவிப்பில் சொல்லியது, - தங்கள் பாதுகாப்புக்காக தங்கள் அரசாங்கம் 
என்ன செய்தாலும் பரவாயில்லை- என்ற பெரும்பாலான அமெரிக்க 
மக்களின் எண்ணங்களின்  பிரதிபலிப்புதான்.

அதனால், இப்படி உலகம் முழுவதும் அமெரிக்கா தன் சித்ரவதை 
டெக்னிக்குகளை பரப்பிக் கொண்டிருக்கிறது என்பதால், தன் 
புத்தகத்திற்கு,‘உலகமயமாகும்  சித்ரவதைகள்’ என பெயரிட்டிருக்கிறார் 
அதன் ஆசிரியர்.

2009ல் வெளிவந்து உலகையே உலுக்கிய ஈராக்கின் போர்க்கைதிகள், அபு 
கரீஹி (Abu ghraih) என்ற சிறையில்  மிக மோசமாக சித்ரவதை 
செய்யப்பட்ட போர்க்கைதிகளின் படங்களும் வீடியோக்களும் 
நினைவிருக்கிறதா? அதையும் அது சம்பந்தப்பட்ட அத்தனை 

ஆவணங்களையும்  அமெரிக்க அரசின் தகவல் அறியும் சட்டத்தின்கீழ்  
பல கோர்ட்டுகளில் போராடி, அதிகாரப்பூர்வமாக பெற்று, வழக்கு 
தொடர்ந்து அந்தச் சிறை அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்த 
வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர்.  அதன் தொடர்விளைவாக இவர் 
மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எழுந்ததுதான்  இந்தப் 
புத்தகம். உண்மையை வரவழைப்பதற்காக ஒரு நபரை சித்ரவதை 
செய்வது என்பது அமெரிக்காவில் மட்டுமில்லை, எந்த நாட்டிலும்  
சட்டப்படி குற்றம்.

கடந்த 10 ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தி, பெரிய உண்மைகள் 
எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும், மாறாக இத்தகைய 
சித்ரவதைகளினால் தீவிரவாதம் உலகம் முழுவதும் வேகமாக 
வளர்கிறது என்பதையும்  முன்னாள் சி.ஐ.ஏ., அதிகாரிகளின், 
செனட்டர்களின் பேட்டிகள் மூலம் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் 
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்  ஓர் இந்தியப் பெண். பெயர்  திருமதி. 
அம்ரித் சிங். அடே! சபாஷ் என நீங்கள் சொல்லி முடிப்பதற்குள் 
ஆச்சரியமான அடுத்த செய்தி, அவர் நம் பிரதமர் மன்மோகன் சிங்கின் 
இளைய மகள். தனது தந்தையைப்போல, தன் மூத்த இரண்டு 
சகோதரிகள்போல (ஒருவர் பேராசிரியர்), நிறையப் படித்தவர். 
கேம்பிரிட்ஜிலும், ஆக்ஸ்போர்டிலும் பொருளாதாரம் படித்த இவர், 
சர்வதேச நிதி ஆணையத்தில் எக்கானமிஸ்ட்டாகப் பணிபுரிந்தபின் யேல் 
பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, நியூயார்க் கோர்ட்டில் 
வழக்கறிஞராக இருந்தவர். 2009ல் இந்த அமைப்பில் நாடுகளின் 
பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத் தடுப்பு பற்றி ஆராயும் பிரிவில் மூத்த 
சட்ட வல்லுநராகப் பணியாற்றுகிறார்.

பின்விளைவுகளை எதிர்நோக்கும் துணிவுடன் அமெரிக்காவின் 
அருவருப்பான மறுபக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கும் திருமதி. 
அம்ரித்  சிங் தான் உண்மையான சமூக நீதி காக்கும் வீராங்கனை.
-Puthiyathalaimurai

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza