Monday, February 4, 2013

மதச்சார்பின்மையென்ற பெயரில் ‘விஸ்வரூபம்‘ எடுக்கும் படைப்புச் சுதந்திரம்

கமலின் ரசிகர்கள் ‘ஆப்கான் தீவிரவாதிகள் பற்றி கதையெடுத்தால் இங்குள்ள முஸ்லீம்கள் ஏன் கொதிக்கிறார்கள்‘ என்று ஒரு அறிவுப் பூர்வமான கேள்வியை எழுப்புகிறார்கள்.  விஸ்வரூபத்தில் ஆப்கான் தீவிரவாதிகளை அவர்களுடைய நாட்டோடு மட்டும் இணைத்து கதையெடுக்கப் பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்தத் தீவிரவாதி தமிழ்நாட்டிலுள்ள மதுரைக்கும், கோவைக்கும் வந்து தங்கியிருந்தபோது தமிழ் கற்றுக் கொண்டதாக கூறும் காட்சி உள்ளதாம்.
இந்த வசனம், காட்சி இங்குள்ள இஸ்லாமியர்களையும் ஆப்கான் தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்புடையவர்களாகப் பார்க்கும் எண்ணத்தை திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தாதா? ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த் வகையறாக்களின் தேசபக்திக்கு இஸ்லாமியர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். துப்பாக்கி படத்தில் சாதாரண இஸ்லாமியரைக்கூட ஸ்லீப்பர் செல் என்று சந்தேகிக்க வைத்துவிடும் அபாயம் இருந்ததைப் போலவே இதிலும அபாயம் உள்ளது. டெல்லி, மும்பை என்று கூறப்பட்டிருந்தால் கூட அதன் தன்மை வேறானதாக இருந்திருக்கும். ஆனாலும் அதையும் கூட நாம ஏற்றுக் கொள்ள முடியாது.

இது கட்டாயம் இங்குள்ள இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற மனநிலையை ஏற்படுத்தும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. கமல் ஒருவேளை தீவிரவாத எதிர்ப்பு என அமெரிக்கா கூறிக் கொண்டிருக்கும், 'இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதி' என்கிற கருத்துக்குப் பலியாகி, அதை சொந்த மண்ணுக்குரிய அடையாளத்தோடு எடுக்க முயற்சித்ததில் இந்தத் தவறு நிகழ்ந்திருக்கலாம்.
பல நேரங்களில் பொதுப் போக்கிலிருந்து மாறி புது விசயங்களை, தொழில் நுட்பங்களை கையிலெடுக்க நினைக்கும் கமல், இஸ்லாமியர் குறித்த, தீவிரவாதம் குறித்த அமெரிக்க கருத்துக்கு பலியாகி விட்டது வருத்தத்திற்குரியதுதான்..
ஏதோ ஒரு உள்ளுணர்வில் தான் கமல் இஸ்லாமிய அமைப்பினருக்கு படத்தை ரிலீஸாகும் முன்பே திரையிட்டுக் காட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கு மரியாதை அளித்த கமல், அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து, அவர்களோடு ஆலோசித்து நீக்க வேண்டியவற்றை முதலிலேயே நீக்கியிருக்கலாம். கமல் ஒரு படைப்பாளி என்கிற அளவிலேதான் இதை அவரிடம் எதிர்பார்க்கிறோம். ஆனால் சில அறிவுஜீவிகளின் ’கருத்துச் சுதந்திரம்’  என்று வழிநடத்தலுக்கு பலியாகிப் போனார் கமல்.
கமல் 'அன்பே சிவம்' என்ற படம் எடுத்ததால் அவரது மற்ற குறைகளை தோழமை உணர்வு கொண்ட இடதுசாரிகள் விமர்சிக்க மாட்டார்கள். பெரியாரிஸ்டுகள் கமல் தன்னைப் பகுத்தறிவுவாதி என்று சொன்னதால் விமர்சிக்க மாட்டார்கள். மகளிர் மட்டும் படத்தில் ‘கறவை மாடு...’ என்ற பாடல் வைத்திருந்தார். பெண்ணை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகளுக்காக இவர்கள் யாருமே கமலை விமர்சித்ததில்லை. கமலே 'எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறது; ஒரு தந்தையாக இனிமேல் சில மாதிரி நடிக்க மாட்டேன்' என்று தானாகவே தான் தன்னை மாற்றிக் கொண்டார். 'ஹேராம்' படத்திலும, 'உன்னைப் போல் ஒருவன்' படத்திலும் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்திருந்ததை யாரும் பெரிதாக விமர்சிக்கவில்லை. ஏன் பம்பாய் படத்தில் கூட இஸ்லாமியர்கள் ஊர்வலம் வரும் போது மட்டும் கலவர பீதியை ஏற்படுத்தும் விதமாக காட்சி அமைக்கப் பட்டிருக்கும். ஆனால் இந்துக்கள் ஊர்வலம் போகும்போது அமைதியாக பாதுகாப்பு உணர்வு இருப்பது போன்று காட்சி அமைக்கப் பட்டிருக்கும். அந்தப் படத்தை பாராட்டித் தள்ளினார்கள். இஸ்லாமியர்கள் பற்றிய தவறான சித்தரிப்புகள் வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் மட்டுமே போராடியுள்ளனர். அதை விமர்சித்த அறிவுஜீவிகள், சமூக மாற்ற சிந்தனையாளர்கள் மிக மிக சிறுபான்மையினரே.
ஒரு கலைஞனை நல்ல விசயங்களுக்குப் பாராட்டி, தோளோடு தோள் நிற்பதைப் போலவே சமூக நலனுக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் போது தோழமை உணர்வோடு விமர்சிக்கவும் தயாராக இருக்க வேண்டும. எந்த ஒரு படைப்பாளியும் கலைஞனும் தன் படைப்பு குறித்து வரும் எதிர் விமர்சனங்களுக்காக மனம் உடைய மாட்டார். சிலர் எதிர் விமர்சனங்களைக் கண்டு, முதலில் எரிச்சலோ சோர்வோ அடைந்தாலும் கூட சிறிது காலம் கழித்து தன்னை சுய விமர்சனம் செய்து அதை மாற்றிக் கொள்வார். இது சிறந்த படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்குமே உரிய இயல்பு. ஆனால் என்ன இசம் பேசினாலும் தனி நபர் துதிபாடலுக்கு பழகிப் போன நமது விமர்சகர்கள் கமலை போற்றிப் பாடியே, மிகச் சிறந்த போர்க்குணமிக்க படைப்பாளியாக, மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கும் கலைஞனாக இப்பொழுது இருப்பதை விட இன்னும் சிறப்பாக பரிணமித்திருக்க வேண்டியதைத்  தடுத்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
அதனால்தான் இப்பொழுது அ.மார்க்ஸ் சொன்னது போல இவர்கள் 'கருத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம்’ என்று ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.
கருத்துச் சுதந்திரம் என்று குரலெழுப்பும் படைப்பாளிகள் எல்லோரும் இந்திய திரைப்படத் தணிக்கை குழுவின் விதிகளுக்கு உட்பட்டுத்தானே படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்று இந்திய திரைப்படத் தணிக்கை குழு வேண்டாம் என்று சொல்வார்களா? மதச்சார்பற்ற நாடு என்று கூறிக் கொள்ளும் இந்த நாட்டில் தான் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து படங்கள் வெளிவருகிறது. அதை தணிக்கை குழு தானே அனுமதிக்கிறது?
இந்தத் தணிக்கை குழு மட்டும் முழுக்க முழுக்க படைப்பாளிகளின் படைப்புச் சுதந்திரத்தை அங்கீகரிக்கிறதா என்ன? 'காற்றுக்கென்ன வேலி' படத்துக்கு நடந்தது என்ன என்று தெரியாதா?
இந்தத் தணிக்கை குழுதானே பள்ளி மாணவ, மாணவிகள் காதலித்து முத்தம் கொடுக்கும் காட்சியையும், ஐட்டம் பாட்டிற்கும். தொப்புளைக் காட்டி ஆடுவதற்கும், பெண்களை, தலித்துகளை, இஸ்லாமியர்களை கேவலமாகச் சித்தரிப்பதற்கும் அனுமதிக்கிறது.  இது தான் கருத்து சுதந்திரத்தின் லட்சணம்.
நான் மதமற்றவன் என்று கூறி கமல் தன்னை ஒரு பிரபஞ்சக் கலைஞனாக கூறிக் கொள்வது சமூகத்தில் நிலவும் மத, சாதி, இன வேறுபாடுகளைக் கடந்த மனிதனாக, மனிதாபிமானம் மிக்க, பகுத்தறிவு மிக்க கலைஞனாக  தன்னை காட்டிக் கொள்வதற்காக இருக்க வேண்டும்.  அதை விடுத்து அமெரிக்காவால் இட்டுக் கட்டப்பட்ட பொய்யான, ‘தீவிரவாத எதிர்ப்பு‘ என்ற போலியான, உலக சமூகங்கள் அனைத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய கருத்தை படமாக எடுத்து, உலக அளவில் படத்தை விற்பதற்கு மட்டும் 'மதமற்ற கலைஞன்' என்ற அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது.
டிடிஎச்சில் படத்தை வெளியிடும் போது வந்த எதிர்ப்புகள் வால்மார்ட்டிற்கு வந்த எதிர்ப்பைப் போன்றது தான்.  அதை வெறுமனே புதுமையான அணுகுமுறை என்று மட்டுமே அறிவுஜீவிகள் கூறித் திரிந்தனர்.  அதனை புதுமை என்று மட்டுமே பார்க்க முடியாது.  டிடிஎச் வியாபார முறை புதிதானது எனில் அந்த முறையின் மூலம் தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய வன்முறைகளை இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு நடக்கும் காவி தீவிரவாதத்தை படமாக எடுத்து மார்க்கெட் செய்ய போராடலாம். நம் நாட்டிற்கு, இனத்திற்கு பெருமை சேர்க்கும் விசயங்களை படமாக எடுத்து உலக அரங்கிற்கு காண்பிக்கலாம்.
அதை விட்டு டிடிஎச் சில் வெளியிடுவதற்காக, சர்வதேச தன்மை வாய்ந்த்தாக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக கற்பித்து (இது அமெரிக்காவின் கருத்து, உலக மக்களின் கருத்தல்ல) படம் எடுத்து உலக சந்தைக்கு கொண்டு போக வேண்டுமா?  சில்ரன் ஆஃப் ஹெவன் போன்ற படங்கள் எல்லாம் உலக அளவில் பிரசித்தி பெற்ற படங்கள் தான்.
அமெரிக்க ஹாலிவுட் படங்களைப் போல் படமெடுப்பதுதான் ஒரு கலைஞனின் லட்சியமா?  அதுதான் ஒரு சிறந்த கலைக்கான அளவீடா?  சர்வதேச தரம் என்பது நன்றாய் விற்று கல்லாக் கட்டுவது இல்லை.  அப்படிப் பார்த்தால், உலகத்தில் போதைப் பொருள் கடத்தல் தான் அதிக லாபம் தரக்கூடியது.  மனிதர்களை மத போதையில் வைத்து அவர்களுக்குள் போரை உருவாக்குவதற்காக, அதற்கு ஒரு கருத்தியலை ’ஆஃப்கான் தீவிரவாதம்’ என்று உருவாக்கி வைத்துள்ளது அமெரிக்கா.
அந்த கருத்தியல் தான் இன்று நன்றாக விற்பனையாகும் பண்டம்.  அதற்கு ஒரு தேசபக்தி போர்வை வேறு.  தேசபக்தி என்றாலே அண்டை நாட்டுடன் சண்டை போட்டு சாவதிலும், தீவிரவாதிகளை ஒழிப்பதிலும் மட்டும் தான் உள்ளதா? நாட்டின் அனைத்து வளங்களையும், மனிதர்களையும்,   மனித விழுமியங்களையும், பண்பாட்டையும், அறத்தையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் தேசபக்திதான்.
தீவிரவாத ஒழிப்பு என்ற அந்த பண்டத்தை ஒரு கலைஞனாக படைப்பாக்கம் செய்து கமல் விற்பனை செய்யப் பார்க்கிறார்.  இது என்னுடைய பொருள், அதை எங்கு, எப்படி விற்பனை செய்ய வேண்டும் என்கிற உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்கிற கமலின் குரல் நியாயமானது. ஆனால் இது போல் தமிழ்நாட்டில் ஒரு விவசாயி பேச முடியுமா? இவர்களின் வலியை, படைப்பாளியாக, கலைஞனாக கமலால் புரிந்து கொள்ள முடியாதா? புரிந்து கொள்ளத் தான் வேண்டும்.  அது தான் ஒரு படைப்பாளிக்கு, கலைஞனுக்கு அழகு.
நடைமுறையில் இருக்கும் பிற்போக்கு கருத்துக்கள் மீது கேள்வி எழுப்பவனாக, விமர்சிப்பவனாக இருப்பவன் ஒரு சிறந்த கலைஞனாக, படைப்பாளியாக அடையாளம் காணப்படுவான்.  கமல் இந்த வகை என்றுதான் கமல் ரசிகர்களும் நம்புகிறார்கள். அதனால்தான் அமெரிக்காவின் பொய்க்கதையான இஸ்லாமிய தீவிரவாதத்தை படமாக எடுக்கவும் நம் தலைவர் ஏதோ புதுக் கருத்தை சொல்வதாக நம்புகிறார்கள்.
ஆனால் கமல் சொல்வது ஹாலிவுட் சொல்லி புளித்துப் போன கட்டுக்கதையான இஸ்லாமிய தீவிரவாதம் தான்.  அமெரிக்காவின் இந்த கருத்துக்குப் பின்னே எண்ணெய் வளங்களைச் சூறையாடும் அவர்களின் கேவலமான ஆதிக்க அரசியல் இருக்கிறது என நோம் சோம்ஸ்கி போன்ற அரசியல் பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த அரசியலுக்கு கமலும் பலியாகியுள்ளார் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. அதனால் அவரது போர் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான உலக மனிதாபிமான கருத்தும் பலியாகி விட்டது.
தமிழ் நாட்டில் இடது சாரிகள், அறிவுஜீவிகள், பகுத்தறிவாளர்கள், அமெரிக்காவின் இந்த கருத்தையும்,  இதன் பின்னணியில் தங்கள் வாழ்வாதாரத்தை, சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இஸ்லாமிய நாடுகளில் உருவான ஆயுதத் தாக்குதலையும் எவ்வாறு அணுகுவது என்பது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.  இவர்களும் இஸ்லாமிய தீவிரவாதம், ஆப்கானிய தீவிரவாதம் என்ற அதே அமெரிக்க பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  இஸ்லாமியர்கள் மட்டுமே இதை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதன் வெளிப்பாடுதான் இன்று இஸ்லாமியர்கள் இந்தப் படத்தை எதிர்க்கும் போது 'கருத்து சுதந்திரம்' என்று இவர்களைக் கூப்பாடு போட வைக்கிறது.
இவர்களே இந்தத் தவறு செய்யும்போது ஒரு வெகுஜனக் கலைஞன், தன் தொழிலில் முழு உத்வேகத்தோடு இயங்கும் கமல் போன்ற கலைஞன் இந்தத் தவறை செய்வதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
தவறு செய்வது கலைஞனது இயல்புதான். ஆனால் அது தவறென உணர்ந்தால், படைப்பாளிகள் எவ்வித ஈகோவுமின்றி திருத்தத் தயாராயிருப்பதுதான், சிறந்த மாற்றுக் கருத்துக்களை அங்கீகரிக்கும், புதுமைகளை வரவேற்கும் படைப்பாளிக்கு அழகு.
திரைப்படம் தடை செய்யப்பட்டவுடன் தமிழ்நாட்டை விட்டுப் போவேன் என்று கோபமாகவோ வருத்தமாகவோ கூற முடிகிறது. காரணம் அதற்கான வாய்ப்பு, வசதிகள் இருக்கிறது. ஒரு வேளை வெளியேறுவது என்பதை நினைத்தே பார்க்க முடியாத நிலைமை கமலுக்கு இருந்திருந்தால் கடைசி வரை இங்கிருந்து தானே போராடியிருப்பார்.
அது போலத்தான் தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக, சுதந்திரத்திற்காக வேறு வழியின்றி அவர்கள் ஆயுதமேந்தியுள்ளனர். தங்கள் சொந்த மண்ணை மீட்க, தங்கள் சந்ததிகளாவது சுதந்திரமாய் வாழட்டும் என்று உயிரை விடுகிறார்கள். இதன் உண்மையான வலியை உணர்ந்து, ஏராளமான ஈரான் படங்கள் வந்துள்ளன. போராடுபவர்களைப் பாராட்டாவிட்டால் போகிறது. என்னவோ பொழுது போக்காக குண்டு வைத்து அப்பாவி மக்களின் உயிரை குடிப்பவர்கள், அதற்காக தங்கள் உயிரைக் கூட மாய்த்துக் கொள்பவர்கள் என்கிற ரீதியில் சித்தரிக்கப்படுகிறார்கள் அமெரிக்கர்களால். இந்தக் கருத்தியலுக்குப் பலியான நாமும் அதை வழி மொழிகிறோம். இன்றும் சரியான காரணமின்றி இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக சிறையிலடைபட்டுக் கிடக்கும் இஸ்லாமியச் சகோதரர்கள் நம் நாட்டில் பலர் இருக்கிறார்கள்.
அதனால், எனக்கு மதம் இல்லை, சாதி இல்லை என்று கூறுகிற கமல் இஸ்லாமியர்களையும், நபிகள் நாயகத்தையும் தரக்குறைவாகப் பேசும் தன் ரசிகர்களைக் கண்டிக்க வேண்டும்; சரியாக வழிநடத்த வேண்டும. இஸ்லாமியர்கள் எனது சகோதரர்கள் எனக்கூறும் கமல், இஸ்லாமிய அமைப்பினரின் நிலைப்பாட்டிற்கு எதிராக நின்று, விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்துத்துவக் கட்சிகளை "இதில் தலையிட வேண்டாம். இது எனக்கும், எனது சகோதரர்களுக்குமான பிரச்சினை, இதை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்கிறோம்" என்று சொல்லியிருக்க வேண்டும்.
உண்மையிலேயே தீவிரவாதத்தை எதிர்த்துப் படமெடுக்க நினைத்தால், அடுத்த படமாக மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து மதத் தீவிரவாதிகளின் கைவரிசையை அடிப்படையாகக் கொண்ட படம் எடுக்க வேண்டும். (இதற்கும் எல்லா ஆவணங்களும் இருக்கின்றன.) அப்பொழுது மட்டுமே கமல், பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததும், தான் ஒரு பெரியாரிஸ்டு என்று கூறியதும், நான் மதமற்றவன் என்று கூறிக் கொண்டதற்கும் ஓர் அர்த்தம் கிடைக்கும்.
ஒரு நல்ல  கலைஞன் சராசரிகளை விட சக மனிதர்களின் உணர்வுக்கு அதிக மதிப்பளிப்பவனாக இருப்பான். இதைத்தான் இப்பொழுது பேச்சுவார்த்தைக்குத் தயாராகியிருக்கும் கமல் நிரூபித்திருக்கிறார்.
இந்த கட்டுரையை எழுதி முடிக்கும் தறுவாயில், ஒரு கலைஞன் என்ற முறையில் இஸ்லாமியரின் உணர்வுக்கு மதிப்பளித்து சில காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்ட படைப்பாளி கமலுக்கு மதச்சார்பற்றவர்களின் சார்பாகவும், இஸ்லாமியச் சகோதரர்களின் சார்பாகவும் நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
-இந்திரா காந்தி அலங்காரம்
(keetru)

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza