இந்தியன் ஆயில் நிறுவனம் இலங்கையில் விற்பனை செய்வதற்காக அனுப்பி வைத்த 5,000 டன் டீசல் தரமற்றது என கூறி இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கைக்கு, இந்தியாவுடன் சமீபகாலமாக ஏற்படும் சிறிய முரண்பாடுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு, இதுவரை இந்தியன் ஆயில் சப்ளை செய்யும் டீசல் தரமற்றது என நிராகரித்ததே இல்லை. முதல் தடவையாக தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்பிய 5,000 டன் டீசலை சிலோன் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு டெலிவரி பெற்றுக் கொள்ள மறுத்து விட்டது.
இலங்கை அதிகாரிகள், “எமது தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தாங்கள் எதிர்பார்த்த தரம் இல்லாததால் டீசலை திருப்பி அனுப்பி விட்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி சுபோத் டக்வாவே, “இலங்கையால் நிராகரிக்கப்பட்ட டீசல் சிங்கப்பூரில் இருந்து தருவிக்கப்பட்டது” என்றார்.
இந்தியா – இலங்கை முரண்பாடுகளில் மற்றொரு விவகாரமாக, இந்தியாவின் தேசிய மின்சார சபைக்கும், இலங்கை மின்சார சபைக்கும் இடையில் தீவிர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கை திருகோணமலை சம்பூரில் இந்தியா அமைத்துவரும் 500 மெகாவாட்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய மின்சார மையத்தின் பணிகள் மேலும் தாமதமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே செய்துக்கொண்ட உடன்படிக்கையில் மாற்றங்களை கொண்டு வர இலங்கை மின்சார சபை முயற்சிப்பதை அடுத்தே முறுகல் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய மின்சார சபை குற்றம் சுமத்தியுள்ளது.
சீனா, இந்த திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியே அனுப்பிவிட்டு, திட்டத்தை தாம் நிறைவேற்றிக் கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்திருப்பதாக ஒரு பேச்சு உள்ளது. இலங்கை திருகோணமலை பகுதியில் சீனாவின் பல்வேறு ப்ராஜெக்ட்டுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
0 கருத்துரைகள்:
Post a Comment