Thursday, December 13, 2012

மரணப்படுக்கையில் இருக்கும் அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் NWF நடத்திய மாபெரும் தர்ணா போராட்டம்


சென்னை : கோவை சிறைச்சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக சென்னையில் 12.12.12 அன்று மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ. ஃபாத்திமா ஆலிமா தலைமை தாங்கினார்.

கோவை மத்திய சிறையில் 15 ஆண்டுகாலமாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் அபுதாஹிர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக‌ எஸ்.எல்.இ என்னும் அறியவகை நோயால் தாக்கப்பட்டுள்ளார். இதன் கொடூர தன்மை என்னவெனில் இந்த நோய் இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய நோயாகும். இந்த நோய் தாக்கியவரின் ஒவ்வொரு உள் உறுப்புகளும் செயல் இழக்கச் செய்து மரணத்தை உண்டாக்கும் கொடிய வகை நோயாகும். இதன் பாதிப்பால் சிறையில் போதிய மருத்துவ வசதியின்றி பல சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றார். இவருக்கு போதிய மருத்துவத்திற்காக இதுவரை கடந்த ஆட்சியில் அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி 90 நாட்கள் சிறப்பு அனுமதி பெற்று பரோலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இத்தனை ஆண்டு காலமாக நோயின் கடுமையை தாக்குப்பிடித்தார்.


இதற்கிடையே சிறை விதி நடைமுறை தொகுதி 2 விதி எண் 632 மற்றும் 633ன் படி மரணப்படுக்கையில் இருக்கும் இந்த நோயாளியை அரசு மற்றும் சிறை நிர்வாகம் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அனுமதியளிக்கிறது. அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவகுழு நோயின் வீரியத்தை பரிசோதனை செய்து அதனை உறுதி செய்தது. இருந்த போதிலும் அவரை பரோலில் விடுதலை செய்ய தமிழ அரசு மறுத்தது. இதனை தொடர்ந்து அபுதாஹிரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த பின்பு அவரை பரோலில் விட தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது (W.P.NO 93310 OF 2012). நீதிமன்றத்தின் உத்தரவினை அமுல்படுத்தாமல் இவ்வரசு அவ்வுத்தரவிற்கு மேல் முறையீடு செய்து அவருடைய பரோலை முடக்க முயற்ச்சித்து வருகிறது. ஆனால் உயர் நீதிமன்றம் தமிழக அரசின் இம்மனுவை தள்ளுபடி செய்த பின்பும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய செயல் தமிழக அரசின் முஸ்லிம் விரோத போக்கையே எடுத்துக்காட்டுகிறது.

மரணத்தின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இச்சிறைவாசியின் மீது அரசிற்கு ஏன் இந்த பாரபட்சம்?

இதனை கண்டித்து நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் நஃபீஸா பானு, மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலியா, பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி.செய்யது இபுராஹீம்  உஸ்மானி , என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் மாநில துணைத்தலைவர் நிஜாமுதீன், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைத்தலைவர் முஹம்மது முனீர்,  திராவிட விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், சமூக சமத்துவ படையின் தலைவர் சிவகாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தனிச் செயலாளர் இளஞ்சேகுவாரா, முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் ஏ.கே. முஹமது ஹனீஃபா,  ஊடகவியளாலர் டி.எஸ்.எஸ். மணி, தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமது, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்கின் தலைவர் உமர் ஃபாரூக், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தின் பொதுச்செயாளார் தர்வேஸ் ரஷாதி, ஐக்கிய சமாதானப் பேரவையின் சென்னை மாவட்ட தலைவர் ஷாஜஹான் ஃபாஸி உட்பட சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza