Tuesday, December 4, 2012

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை வாபஸ் பெறவேண்டும் – எஸ்.டி.பி.ஐ!

இ.அபூபக்கர்
புதுடெல்லி:சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில்(UAPA) திருத்தங்களை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும் என்று சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
ரகசிய விசாரணையும், ரகசிய சாட்சிகளும் அடங்கிய சிறப்பு நீதிமன்றம், விசாரணையில்லாமல் தேடவும், கைது செய்வதற்குமான அதிகாரம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே 180 தினங்கள் காவலில் வைக்கவும், 30 தினங்கள் போலீஸ் காவலில் வைக்கவும் அதிகாரம் ஆகிய சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) பிரிவுகள் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை மீறுவதாகும். எந்த இயக்கத்தையும் விருப்பப்படி தடைச்செய்ய இச்சட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அனுமதி வழங்குகிறது. இது அமைப்பு ரீதியாக இயங்க அனுமதிக்கும் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்.

UAPAவில் கடுமையான பிரிவுகளை வாபஸ் பெறாமல் நிரபராதிகள் காலவரையற்று விசாரணை கைதிகளாக தொடரும் நிலையை முடிவுக்கு கொண்டு வர முடியாது. தடைச் செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி வெகுஜன இயக்கங்களையும், தன்னார்வ தொண்டு இயக்கங்களையும் வேட்டையாட இச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய முடியும். இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு எம்.பிக்களும், சி.பி.எம்., சி.பி.ஐ, ஆர்.ஜெ.டி, எல்.ஜே.பி ஆகிய கட்சிகளும் களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் அனைத்து கடுமையான பிரிவுகளையும் ரத்துச்செய்வதற்கு தேவையான மசோதா தாக்கல் செய்யவேண்டும். வகுப்புவாத கலவரத்தை தடுக்கும் மசோதாவை உடனடியாக நிறைவேற்றவேண்டும். ஆனால்,வகுப்புவாத கலவர தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு முன்னால் அரசு அடிபணிந்துவிடக் கூடாது. இம்மசோதா நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்துவிடக்கூடாது. மேலும் இச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவில்லை என்பதை உறுதிச்செய்ய வேண்டும்.
தன்னார்வ தொண்டு இயக்கங்களுக்கு அரசின் எக்ஸ்க்யூடிவ் அதிகாரத்தை வழங்கிவிடக்கூடாது. ஆயுதப் படையினர் வகுப்புவாத கலவரங்களில் பங்கேற்கிறார்கள் என்ற அனுபவத்தின் அடிப்படையில் அவர்களையும் இச்சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza