Saturday, December 1, 2012

ஆண் பாவம்.............!


"ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு”
 ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” 
"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு" [எதுக்கு?? ஒரு அடிமை சிக்கிட்டான்ன்னா]
”அடடே ஆண்குழந்தையா போயிட்டுபோகுது ஆத்தா 2 பொட்டப்புள்ள இருக்குன்னு நெனச்சேன் இதாவது ஆணா பொறந்துச்சே"

நீங்க ஹைடெக் சிட்டில இருக்குறவரா இருந்தா இந்த வாசகம்லாம் உங்கள் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.... ஆனால் இன்றும் அதிகப்படியாக ஒலிக்கும் வசனங்கள் தான் இவையெல்ல்லாம்... ஒரு குழந்தை பிறந்தா அது பெண்ணாக இருக்க கூடாது என்பது இவர்களின் முதன்மை எண்ணம்... பொட்டப்புள்ளையா பொறந்தா எம்பூட்டு நல்லதுன்னு இவுகளுக்கென்ன தெரியும். அண்ணாவோடது தம்பியோடது அப்பாவோடது என எல்லா சொத்துக்களிலும் பங்கு வந்துருமுல்ல? பல அம்மாக்கள் சுரண்டியாவது கொடுத்திடமாட்டாங்க :-)
 
எங்க,எப்ப  புள்ள பொறந்தாலும் முதல் கேள்வி ஆணா? ஏன் எல்லா எடத்திலேயும் ஆணா? ஆணா?ன்னு கேட்கிறார்கள்????? அதன் ரகசியம் அறிந்தால் கண்ணா ஆணா பொறக்க ஆசையா இல்லையாங்குறது தெரியும்...எதுவா பிறக்கனும் என்பது நம்மிடத்தில்லை நல்லவேளை..

காதிர் இப்னு உபைத் அறிவிக்கிறார்கள்: ஆயிஷா ரலி அவர்கள் யாருக்காவது குழந்தை பிறந்தால் அது ஆணா, பெண்ணா என்று கேட்க மாட்டார்கள். மாறாக, அக்குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்றே விசாரிப்பார்கள். ஆம் என்று யாரும் பதில் சொன்னால், அல்ஹம்துலில்லாஹி ரப்பி ஆலமீன் என்று கூறுவார்கள் (சஹீ புகாரி: நற்பண்புகள் நூல் 1261)
 
விசயத்திற்க்கு வருவோம். ஆனானப்பட்டவர்கள் அனைவருமே முதலில் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள் [ஒரு சிலர்களைத்தவிர எங்களைபோல்] ஆண்மகனாக பிறப்பது அடுத்தவர்களுக்கு வேண்டுமெனில் ஆனந்தமாக இருக்கலாம் ஆனால்  பல ஆண்மகன்களுக்குள் இருக்கும் மனநிலை ஏண்டா ஆணாய் பிறந்தோம்மென்று  [சிலருக்குள் இல்லாமலிருக்கும்] ..
 
ஆண்கள் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பு மரியாதை....[சிலரைத்தவிர] ஏனென்றால்? 

ஆண் என்பவன் அதிகராம் செய்பவன்,ஆதிக்கம் செலுத்துபவன் ஆணவம் கொண்டவன் என்றெல்லாம் சொல்லி சொல்லி ஆண்கள் எல்லாம் பெண்களை அடக்ககூடியவர்களாக  ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது நம் சமூகம்!  இருக்கலாம், இருந்துவிட்டு போகட்டும். அதைமீறிய செயல்கள் அவர்களிடத்தில் இருக்கிறது. தந்தையாக! கணவனாக! மகனாக! ஒரு ஆண் எத்தனை பொறுப்புகள் வகிக்கவேண்டியிருக்கிறது? எத்தனை சிரமங்கள்,கஷ்டங்கள் சங்கடங்கள் துயரங்களென்று படவேண்டியிருகிறது?  உரலுக்கு ஒருபக்கம்தான் இடி ஆனால் மத்தளத்திற்க்கு? அதுபோல்தான் ஆண்களின் நிலை... 
 
ஆண்குழந்தை வேண்டுமென்று ஆசைப்படுவதும் ஆண்குழந்தை வேண்டும் ஆண்குழந்தை வேண்டும் என்று வேண்டி உருகுவது எதற்க்கு? அவர்களை தனி கவனம் செலுத்தி வளர்ப்பதெதற்க்கு?  தங்கள் மகனை சீரும் சிறப்புமாய் கேட்பதெல்லாம் கொடுத்து வளர்த்து தங்கள் கிட்ட இல்லாட்டியும் கடன்வாங்கி மகனை நல்லபடியா படிக்கவச்சு, வெளிநாட்டில் வேலைக்கு போக உதவியும் செய்து ஆளாக்கிவிடுறாங்களே...  அது எதுக்கு? அவன் எதுவேணுமுன்னா செய்யட்டும்  எல்லாம் பெரியவனானதும் சரியாகிவிடும்..அது இதுன்னும் அளவுகடந்த செல்லமா வளப்பாங்களே....அதெதுக்கு?  ஆட்ட ஆசை ஆசையா எதுக்கு புல்லு புண்ணாக்கு (ஓ அது மாட்டுக்குதானே சரி சரி] இலை,தழை பால் பலகாரமுன்னு கொடுத்து வளர்ப்பாங்க.. இத நான் சொல்லிதான் தெரியனுமாக்கும்..]   பின்னால் அவர்களை வலுவிலக்கச் செய்வதற்கா?அவர்களை சுயமாக சிந்திக்கவிடாமல் தடுப்பதற்கா? இல்லை அவன் உடல் பொருள் அனைத்தும் இழந்து பித்துபிடித்து அலைவதற்கா?

தவறில்லை தான்! பெற்ற மகன், அனைத்திற்கும் தங்களை சார்ந்து இருக்கவேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை! அதேசமயம் அவனுக்கென்று ஒருமனம் இருப்பதை ஏன் அறிய தவறுகிறார்கள்? அதில் ஆசைகள் தனிப்பட்ட சில விசயங்கள் இருப்பதை ஏன் உணர மறுக்கின்றார்கள்?  

தான்பெற்ற குழந்தைகளிடம் தங்களுக்கில்லாத உரிமையா என்றெல்லாம் கேட்க்கக்கூடாது! இருக்கிறது... எல்லாம் ஒரு எல்லைக்குள்!!!! நீங்கள் பெற்றதாகவே இருக்கட்டும்! அதற்காக அவர்களின் விருப்பங்கள் எண்ணங்கள் எல்லாம் என்னாவது? திருமணம் ஆகும்வரை ஒரு ஆண் தன்மகனாக இருக்கிறான். ஆனபின்பு அவனும் அவனுடைய கடமை இன்னும் கூடுகிறது, இன்னொரு பெண்ணுக்கும், அவள் மூலம் பிறக்கும் தன் பிள்ளைகளுக்கும் அவன் பொறுப்பாளி ஆகின்றான்.

மகனாக இருக்கும்போது அவன் செய்யும் சேட்டை, தவறு, குற்றம், அனைத்தும் செல்லமாய் தெரியும் குடும்பத்திற்க்கு, அவன் திருமணம் ஆனதும் யதார்த்தமாய் வாய் தவறி ஒரு சொல்லை சொல்லிவிட்டாலும் கொலைகுற்றம் செய்ததுபோல் தண்டிக்கப்படுகிறான்! பல குடும்பங்களில் தன் மனைவியிடம் சிறந்த கணவனுக்கான பெரும்மதிப்பு மிக்க நற்சான்றிதழ் வாங்க முடியாததற்கு இந்த சூழ்நிலையே முக்கிய காரணம்! மனைவியை சமாளித்து சமாதானப்படுத்திவிடலாம் என்று தெரியும் ஆணுக்கு நன்றாகவே தெரியும் தன் அம்மா, சகோதரிகளின் வசையிலிருந்து தப்ப முடியாது என்று! மனைவி மட்டும் கொடுக்கும் நற்சான்றிதழா அது???? நபி (ஸல்) அவர்கள் 'உங்களில் சிறந்தவர் மனைவியிடத்தில் சிறந்தவரே' என்று ஆணுக்கு சொன்ன தகுதியல்லவா அது??? 

வாரி வாரி கொடுத்தபோதும் வசைபாடப்படுகிறான். வருடமுழுவதும் அயராமல் அனுப்பியவன் ஒரு மாதம் அனுப்பத்தவறினாலும் அல்லோல்படுத்தபடுகிறான். இதைவிடக்கொடுமை, இருமகன்களாய் பிறக்கும் வீடுகளில் நடப்பது! ஒருகண்ணில் பால், மறுகண்ணில் சுண்ணாம்பு என்பதைபோல் கொடுக்கும் மகன் நடுவீட்டில்,கொஞ்சம் கொடுக்க இயலாத மகன் நடுத்தெருவில்! ஒருமகனை தாங்கோ தாங்கென்று தாங்கும் தாய் இன்னொரு மகனை ஏறேடுத்தும் பார்க்க மறுக்கிறது! அப்படியே பார்த்தாலும் அது ஊருக்காக! யாரும் எதுவும் சொல்லிவிடுவார்களோ என்று அதுவும் என் குழந்தைதான் என்கிறார்கள்.. யார் எது சொன்னபோதும்  தாங்கிக்கொள்ளும் ஒரு மகனால் தன் தாயே தன்னை மட்டம்தட்டும்போது கூனிக்குறுகிறான். சில பெற்றோர்கள் வசதியான மகனின் வீட்டில் தங்குவதை தான் விரும்புறாங்க...  இன்னொரு மகன் வசதியில்லாத காரணத்தால்!  ஏன் மீண்டும் சுமையை கொடுப்பானேன் என்ற உண்மையான நோக்கம் எனில் அல்லாஹ் நற்கூலி கொடுக்கட்டும்! ஆனால் தன் வசதி ஒன்றை மட்டுமே குறிகோளாய் கொண்டு வசதியற்றவனை ஒதுக்கும் போது வசதியற்றவனுக்கு வெறுப்பு தன் சகோதரன் மேல் தான் உண்டாகும்! அந்த வெறுப்பு பொறாமையை உண்டாக்கி உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தி வைக்கும்! 
 நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்கள் குழந்தைகள் உங்களை கவுரவப்படுத்த வேண்டும் என்பது உங்களின் உரிமையாக இருப்பது போல, தாங்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பது உங்கள் குழந்தைகளின் உரிமையாகும்" (அபூதாவுத்)
சிலவீட்டில் இன்னும் மோசம். எவ்வளவு கொடுத்தாலும் இல்லையென்றே தூற்றுவார்கள்! என்னத்தை செய்தான்? ஏதோ கொஞ்சம் தந்தான் என குறைபடுபவர்கள் அநேகர்! மகனுக்கு மணமுடித்து மருமகள் வந்தபின்பு  தன்மகளுக்கு [கட்டிக்கொடுத்துவிட்டாலும் ]தன்மகனிடமிருந்து வரும் பணம் மற்றும் பொருள்களில் முக்கால்பங்கு தன்மகளுக்கென்று ஒதுக்கிவிட்டு கால்பங்கில் குடும்பத்திற்க்கே பங்கிடுகிறார்கள்.. இதனாலேயே பலகுடும்பங்கள் பகையாளியாகி உள்ளுக்குள் புகைந்துகொண்டு வெளியில் சமாளித்த வாழ்க்கை வாழ்க்கிறார்கள்.

திருமணம் முடிந்து வெளிநாடுபோய் மாசப்பணம் அனுப்பும்போது முதல் மாசம் ஓகே... அடுத்தடுத்த மாதங்களில்  "சரி இப்படியே போனா எப்படி? எங்களுக்கும் தனியா அனுப்புங்க" என்று சிணுங்கிய குரல் ஆரம்பிக்கும். அங்கேயிருந்து ஆரம்பிச்சிடுமுங்கோ இந்த மத்தளத்துக்கு ரெண்டுபக்க இடி அதுபோல்... பாவம் மனைவிக்கு அனுப்பலன்னா மனைவிக்கிட்ட திட்டு! மனைவிக்கு அனுப்பினா "போனதடவ துபை போயிருந்தப்ப நல்லாதான் இருந்தான் ஆனா இந்த தடவ ஏனோ இப்படியிருக்கான்! மாத்திபுட்டாம்மா மாத்திபுட்டா....அவன மயக்கி முந்தானையில் முடிஞ்சிட்டா... அவதான் முடிஞ்சான்னா இவனுக்கெங்கே போச்சி புத்தி.. ஆக சுத்தி சுத்தி ஆணுக்கு வந்து விழும் தலையில் சுத்தி [டங்குன்னு சத்தம் கேட்குதா :)

ஆண்குழந்தை பெற்றெடுத்து அதனை தங்களோடவே வைத்துக்கொண்டு அவனின் சம்பாத்தியம்.மற்றும் அவனின் தேவைகள் அனைத்தும் தங்களோடே இருக்க விரும்பும் பெற்றோர்களுக்கு! . வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கி வெளிநாடோ அல்லது உள்நாடோ சம்பாதிக்க வழியும் தேடிகொடுத்துவிடும் நீங்கள். அவனுக்கு திருமணம் என்ற ஒன்றைமட்டும் செய்யாதீர்கள்[அஸ்தஃபிருல்லாஹ்...அப்புறம் வழி தவறிபோய்விட்டான் என்றெல்லாம் குற்றம் சொல்லி ஒப்பாரிவைக்கூடாது சொல்லிப்புட்டேன்]. ஏனெனில் அது உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் இடைவெளியை ஏற்படுத்துகிறது என்ற நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று அதற்காக சொல்கிறேன் திருமணம் செய்யாதீர்கள் என்று]

ஒரு குழந்தையை பெற்றால் மட்டும் போதாது அதற்குண்டான தேவைகளை நிறைவேற்றத்தான் இறைவன் தாயாக தந்தையாக படைத்துள்ளான். நாம் செய்த செய்யும் அத்தனைக்கும் கைமாறு எதிர்பார்த்தால் எப்படி? நாம் வளர்க்கும் நம்குழந்தைகள் நமக்கு நல்லது செய்யநினைக்கும் ஆனால் நம்முடைய சில செய்கைகள் அதனை தடுக்கவும் வழிவகுக்கும் என்பதை மறக்காதீர்கள்!
இறுதித்தூதர் மேலும் கூறினார்கள், "உங்கள் குழந்தைகளிடம் நீதியை கடைபிடியுங்கள்", இதனை மூன்று முறை திரும்ப சொன்னார்கள் (முஸ்லிம்)
ஆண் அவன் குடும்பத்தை தாங்கும் அரண். அவனை ஆட்டம் காணவைத்துவிட்டு குடும்பமே பூகம்பம் வந்துவிட்டதுபோல் ஆ[ட்]டிவிடாதீர்கள்.. பெண்களே உங்களைத்தான்! நீங்கள் தாயாக மனைவியாக மகளாக எதுவாக இருக்கும்பட்சத்தில் ஆண் என்ற அன்புக்கு அடைக்கலம் கொடுக்காவிட்டாலும் அணுசரனையாகவாவது நடந்துக்கொள்ளுங்கள்..[என்னது அடைக்கலம்கூட இல்லையா ஏண்டா இந்த பொறப்பு பொலம்புவது கேட்குது ஹா ஹா]... நாமெல்லாம் ஆறுதலாக இருக்க கூடியவர்கள் தானே... அவ்வாறு தானே இறைவனும் மனைவிக்கான கடமையாக குர்-ஆன்னில் கூறியுள்ளான்? 
நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; (அல்குர்ஆன் 30:21) 
சம்பாதிப்பதும் அதனை தன் குடும்பத்திற்காக செலவு செய்வதும் ஆணின் கட்டாயக்கடமை! அதிலிருந்து ஆண் தவறிவிடுவானேயால் நாளை இறைவனிடத்தில் குற்றம் அவனைச்சார்ந்ததே! வசதியாக இருக்கும் தன்மகனை ஒரு மாதிரியாகவும் வசதியற்றவனை ஒரு மாதிரியாகவும் பார்ப்பது பெற்றோர்களுக்கு ஆகுமான செயல் அல்ல இறைவனிடத்தில் கட்டாயம் பதில்சொல்லவேண்டிவரும். அதேபோல் பாகுபாடுபார்த்து குடும்பசொத்துகளிலும் ஏமாற்றுவது பெரும்பாலான இடங்களில் நடைபெறுகிறது. உண்மையான அன்போடு அக்கரையோடு பெற்று வளர்த்திருப்பார்களேயால் அப்படி செய்யமாட்டார்கள். தான்பெற்ற பிள்ளைகளுக்கே துரோகம் இழைக்கமாட்டார்கள்.
நுமான் இப்னு பஷீர் அறிவிக்கின்றார்கள், "என் தந்தை, அவருடைய செல்வத்திலிருந்து எனக்கு பரிசு பொருட்களை அளித்தார். ஆனால் என் தாயார் அம்ரா பின்த் ரவாஹாவோ 'நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு சாட்சியாக இருக்கும்வரை இதனை நான் அங்கீகரிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டார். ஆகையால், என் தந்தை நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அந்த பரிசுப்பொருளுக்கு சாட்சியாக இருக்கும்படி கேட்டார். அப்போது இறைத்தூதர் அவர்கள் 'இது போலவே உங்களின் அனைத்து குழந்தைகளுக்கும் செய்தீரா?' என்று கேட்டார்கள். 'இல்லை' என்று என் தந்தை பதிலளித்தார். 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம் நீதியை பேணுங்கள்' என்று இறுதித்தூதர் கூற, என் தந்தை திரும்பி வந்து எனக்கு அளித்த பரிசுப் பொருட்களை திரும்ப பெற்றுக்கொண்டார்கள்" (புஹாரி, முஸ்லிம்)
அன்புள்ள குடும்பமே உங்கள் பிள்ளைதான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் உங்களைப்போன்ற ஒரு ஜீவனுக்கும் அவன் உறவான பின் நீங்கள் எப்படி உன் பிள்ளையிடத்தில் எதிர்பார்ப்பீர்களோ அப்படியே அவளும் உங்கள் பிள்ளையிடத்தில்  எதிர்பார்ப்பாள் என்பதை உணர்ந்தீர்கள் என்றால் ஆண் ஆணாக அன்பானவனாக இருப்பான். இல்லையென்றால்..... அத நான் வேறு சொல்லனுமா. அந்தர்பெல்டி அடிப்பான். பொய்வேசம் போடுவான். குரங்காட்டியிடம் மாட்டிய குரங்குபோல் ஆவான். செடுசெடு சிடுமூஞ்சியாவன்  சின்ன சின்ன பிரச்சனைக்கும் சிக்கிமுக்கியாகுவான். ஆகமொத்ததில் ஆண் பாவமாவான்..
ஆண்பாவம் பொல்லாததுங்கோ இது நாசொல்லல பின்னாடியிருந்து சொல்ல சொல்லுறாவோ.. ஹா ஹா 

ஆணுக்கும் மனமுண்டு
அதில்
ஆத்மார்த்தங்கள் அடங்கிடப்பதுண்டு
----------------
அன்புடன் மலிக்கா
முத்துப்பேட்.

source:http://www.islamiyapenmani.com/2012/11/blog-post.html

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza