குவஹாத்தி:அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கொக்ராஜர், சிராங் மாவட்டங்களில் மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் குழுவினர் பார்வையிட்டனர்.
என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய செயலாளர் ரெனி ஐலின், செயற்குழு உறுப்பினர்களான பேராசிரியர் அ.மார்க்ஸ், ஜி.சுகுமாரன், அஸ்ஸாம் மாநில கமிட்டி உறுப்பினர் அன்ஸாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் கொக்ராஜர், சிராங் மாவட்டங்களில் உள்ள கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 14 அகதிகள் முகாம்களுக்கு சென்றனர்.
கோசைகான் சாப் டிவிசனல் அதிகாரி வினோத் சேசன் ஐ.ஏ.எஸ், பிஜ்னி போலீஸ் நிலைய தலைவர் ஆதித்யா தேவரி, கோல்பரா எம்.எல்.ஏ முனவ்வர் ஹுஸைன் ஆகியோரையும் மனித உரிமை ஆர்வலர்களையும் என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழுவினர் சந்தித்தனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
பள்ளிக்கூட கட்டிடங்களிலும், ஆற்றின் ஓரங்களிலும், ஓடைகளுக்கு அருகிலும் அமைந்துள்ள அகதிகள் முகாம்கள் எங்களை வரவேற்றன. சிகிட்சையோ, மருத்துவ உதவியோ கிடைக்காமல் நோய்கள் மூலமாக ஏராளமானோர் மரணமடைகின்றனர். அரசியல் சாசனம் உறுதி அளித்துள்ள வாழ்வதற்கான உரிமை மதம் மற்றும் சாதியின் அடிப்படையிலான பாரபட்சத்தினால் மறுக்கப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்த 25 சதவீத மக்கள் மட்டுமே மறுவாழ்வு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதர நபர்களின் வாழ்வு எவ்வாறு உள்ளது என்பது யாருக்கும் தெரியாது.
கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை கலவரத்தை துவக்கி வைத்தவர்களுக்கே சென்றடையவே அரசு அனுமதிக்கிறது. இது மனிதநேய விழுமியங்களுக்கும், நீதியின் தத்துவங்களுக்கும் எதிரானது.
பங்களாதேஷ் குடிமக்களிடமிருந்து யாரும் எதனையும் வாங்க கூடாது என்றும், அவர்களுக்கு வேலை வழங்க கூடாது என்றும் கோரிக்கை விடுக்கும் பிரசுரங்கள் பொது இடங்களில் காணப்படுகின்றன. இது முஸ்லிம்களுக்கு எதிரான பொருளாதார தடையாகும். ஏழ்மையில் வாடும் முஸ்லிம்களை இது கொடிய பட்டினிக்கு அழைத்துச் செல்லும். மக்களின் பாதுகாப்பை உறுதிச்செய்யும் கடமை அரசுக்கு உண்டு. கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதும், மறுவாழ்வு அளிப்பதும் மட்டுமல்ல, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியதும் அரசின் கடமையாகும்.
இரு பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது அத்தியாவசியமாகும். ஆனால்,துரதிர்ஷ்டவசமாக அமைதிக் குழுவில் இடம் பெற போடோ பிரதிநிதிகள் மறுக்கின்றனர். இவ்வாறு என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment