Monday, December 3, 2012

69% இடஒதுக்கீடு அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா?

இடஒதுக்கீடு
இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு தமிழகத்தில் மட்டுமே 50 சதவீதத்தை தாண்டி 69 சதவீதம் அமுலில் உள்ளது. 1993ம் ஆண்டு மண்டல் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பினை தொடர்ந்து தமிழகத்தில் அமுலில் இருந்த 69 சதவீதத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் 88 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் இருக்கும் காரணத்தால் 50 சதவீத இடஒதுக்கீடு போதாது என்று வாதாடப்பட்டது.பின்னர் இவ்வழக்கில் 2010ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் அமுலில் இருந்து வரும் 69 சதவீத இடஒதுக்கீடு மேலும் ஒரு வருடத்திற்கு மட்டும் தொடரலாம் என்றும் மாநில அரசு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான புள்ளி விபரங்களை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 69 சதவீத இடஒதுக்கீடு தேவை தான் என்று கண்டறியும் பட்சத்தில் மாநில அரசு 50 சதவீதத்திற்கு தடை பற்றிய மண்டல் வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிர்பந்த சூழ்நிலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வரையறையை தளர்த்திக் கொள்ள அனுமதித்துள்ள விதிவிலக்கினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது.


ஆக இங்கே நமக்கு தெரிவது என்னவென்றால் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று தீர்ப்பு கூறியிருந்தாலும் ஒரு விதிவிலக்கையும் சேர்த்துத் தான் கூறியுள்ளது. இந்த விதிவிலக்கை பயன்படுத்தி தமிழகம் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது.


ஜூலை 13ம் தேதி 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும். மாநில அரசு இதற்காக நீதியரசர் எம்.எஸ். ஜனார்தனன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது. அக்கமிஷனும் 2011ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அன்று தமிழக அரசிடம் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையின் அடிப்படையில் ஜூலை 13ம் தேதி அன்று கூடிய மாநில அமைச்சரவை 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்வது என்றும் கிரிமி லேயர் என்ற ஒன்று தமிழகத்திற்கு பொருந்தாது என்றும் மாநில அரசு தீர்மானம் எடுத்தது.


இந்நிலையில் ஜூலை 14, 2012 அன்று 12 மாணவ மாணவியர்கள் சேர்ந்து 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பிறகும் 69 சதவீத இடஒதுக்கீட்டினால் தங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 50 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் பட்சத்தில் தங்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்றும் முறையிட்டனர். மேலும் 2010 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாநில அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கை நகலை வெளியிடுமாறும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. மாநில அரசு 12 வாரத்திற்குள் அறிக்கையை வெளியிடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


ஆக இதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் மீண்டும் 69 சதவீதத்திற்கெதிராக வழக்கு தொடரப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்பட்டாலும் இதற்கெதிராக தொடர்ச்சியாக ஏன் வழக்கு தொடரப்படுகிறது என்றால் தமிழகம் மட்டும் தான் 50 சதவீத இடஒதுக்கீட்டை தாண்டியுள்ளது. மேலும் இடஒதுக்கீடு என்பது நிர்பந்த சூழ்நிலைகளில் 50 சதவீதத்தை தாண்ட முடியும்.


இப்படி இருக்கையில் தகுந்த புள்ளி விபரங்கள் இருக்கும் பட்சத்தில் பல மாநிலங்கள் 50 சதவீத இடஒதுக்கீட்டை தாண்ட முடியும். எனவே தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீட்டை தாண்ட அனுமதிப்பது நாட்டில் ஒரு சிறு கூட்டத்தாரான உயர் சாதியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதனை கருத்தில் கொண்டே தமிழகத்தில் எப்படியாவது 69 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்று விடா முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தோற்றுப் போனால் கூட குறைந்த பட்சம் பல வருடங்கள் பிற மாநிலங்கள் 50 சதவீத இடஒதுக்கீட்டை தாண்ட யோசிக்காது என்பதாலும் உச்சநீதிமன்றத்தில் விடா முயற்சிகள் நடந்து வருகிறது.


தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் மற்றொரு விஷயம் 9 ஆவது ஷெட்யூல். ஏதேனும் ஒரு சட்டம் 9 வது ஷெட்டியூலில் சேர்க்கப்பட்டால் அதில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை. 1993ம் ஆண்டு இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற தீர்ப்பின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது என்று நாம் மேலே குறிப்பிட்டோம். சென்னை உயர்நீதிமன்றமும் 199495ம் ஆண்டில் 50 சதவீதம் வரையறையை அமுல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றமும் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று தீர்ப்பளித்தது. எனினும் தமிழக அரசு 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி சட்டசபையில் மாநிலத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர அரசியல் சாசன சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் இயற்றியது. பின்னர் இதே தீர்மானம் அனைத்து கட்சி கூட்டத்திலும் நவம்பர் 26ம் தேதி எடுக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சட்டசபையில் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் பழங்குடியினர் சட்டம் 1993 என்ற ஒரு சட்டத்தை இயற்றியது. அரசியல் சாசன சட்டம் 31 இ யினை பயன்படுத்தி இச்சட்டத்தை அங்கீகரிக்குமாறு தமிழக அரசு குடியரசு தலைவருக்கு அனுப்பியது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் 1994ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தில் இச்சட்டம் பற்றி விவாதித்ததில் சட்டத்தினை அங்கீகரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு இதனடிப்படையில் ஜூலை 19ம் தேதி குடியரசு தலைவரும் இச்சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தார்.


மேலும், இச்சட்டத்தினை 9வது அட்டவணையில் சேர்க்க தமிழக அரசு ஜூலை 22ம் தேதி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. மேற்கூறிய சட்டம் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளுக்குட்பட்டு (டைரக்டிவ் பிரின்சிபில்ஸ் ஆஃப் ஸ்டேட் பாலிசி) இருப்பதால் 1994ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அரசியல் சாசன சட்டத்தில் 76 ஆவது திருத்தம் மூலம் 9 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இந்த 69 சதவீத இடஒதுக்கீடு 9 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டதால் இதில் தலையிடும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்த 9 வது அட்டவணையில் சேர்க்கப்படாததால் கர்நாடகாவால் 50 சதவீத இடஒதுக்கீட்டை தாண்ட முடியவில்லை. ராஜஸ்தானில் குஜ்ஜார்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு 9 ஷெட்யூலால் தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனினும் 2007ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில் இந்த 9 ஆவது ஷெட்யூலில் பாதுகாக்கப்பட்ட சட்டங்களும் அடிப்படை மனித உரிமையை மீறும் பட்சத்தில் மீளாய்வுக்கு உட்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் 15.2% உயர் சாதியினரின் நலனுக்காக இடஒதுக்கீட்டிற்கு எதிராக பாயும் நீதிமன்றங்கள் பாக்கி 84.8% மக்களின் நலனை சிந்திக்க வேண்டும்.


இத்தகைய பெரும் முயற்சிக்கு பின் அரசியல் சாசன சட்டத்திற்குட்பட்டு பெற்ற சலுகையை பாதுகாக்க தமிழக அரசு தொடர்ந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


மேற்குறிப்பிட்ட விஷயங்களின்படி 69 சதவீதத்தை தமிழக அரசு பெற்றது அரசியல் சாசன சட்டத்தில் செல்லுபடியாகும் என்ற நிலையிருந்தாலும் வழக்கை எதிர்கொள்ளும் போது மிகவும் கூர்மையாக நின்று செல்பட வேண்டும். 2010ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் அமுலில் இருந்துவரும் 69 சதவீத இடஒதுக்கீடு மேலும் ஒரு வருடத்திற்கு தொடரலாம் என்று தீர்ப்பு வழங்கி 2 வருடத்திற்கு மேலாகுவதால் மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர யாரேனும் வழக்கு தொடருவார்கள். அவ்வாறு வழக்கு தொடரப்படும் பட்சத்தில் துரிதமாக தமிழக அரசு செயல்பட வேண்டும். இந்த 69% இடஒதுக்கீட்டிற்கு ஏதேனும் ஆபத்து வரும் பட்சத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் பழங்குடியினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே உச்சநீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு தொடரும் பட்சத்தில் மேற்கூறிய அனைத்து சமூகமும் இணைந்து ஒரு கவன ஈர்ப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, தமிழக அரசு தொடர்ந்து சட்ட களத்தில் போராடி 69 சதவீத இடஒதுக்கீட்டை தக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.


மேலும் 2011 ம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர தேவையான ஒப்புதல்களை பெற வேண்டியது மிகவும் முக்கியம். ஏனென்றால் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்க முடியும். இந்த சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் சிறுபான்மையினர் எண்ணிக்கைக்கேற்ப 69 சதவீத இடஒதுக்கீடும் போதுமானது இல்லை எனும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய விதிவிலக்கினை பயன்படுத்தி 69% சதவீதத்தையும் தாண்டுவது பற்றி அரசு சிந்திக்க வேண்டும் என்பதையும் நாம் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.


அவ்வாறு தாண்டு;டு பட்சத்தில் அந்த சட்டத்தையும் 9 வது ஷெடியுலில் சேர்க்க வேண்டும். இடஒதுக்கீட்டிற்கெதிராக இருக்கும் பெரும் தடையான 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மீளாய்வு செய்யவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாம் கேட்பது அரசியல் சாசன சட்டத்தில் வாக்களிக்கப்பட்டது தானே தவிர வேறு எந்த சிறப்பு சலுகைகளையும் கேட்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


நன்றி:
விடியல் வெள்ளி மாத இதழ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza