தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வியை ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு ஜெயலலிதா கேட்டுக்கொண்டிருந்தார். இப்போது அவர் ஆட்சியில் அதே கேள்வியை தமிழக மக்கள் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றாடம் நடைபெறும் கொலை,கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் இந்த கேள்வியை எழுப்ப வைக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சுப.முத்துக்குமார், கூலிப்படையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கின் போது நீதிபதி கிருபாகரன், தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், கடந்த 10 ஆண்டுகளில் மாவட்ட வாரியாக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை, தண்டனை விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
ஜெயலலிதாவின் கண்டுபிடிப்பு
இதையடுத்து தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜம் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியல் மூலம் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் மாநிலம் முழுவதும் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் அதிக அளவில் சென்னையில் 3175 ரவுடிகளும், அடுத்ததாக நெல்லை நகரில் 334 ரவுடிகளும், புறநகரில் 1214 ரவுடிகளும், மூன்றாவதாக மதுரை நகரில் 888 ரவுடிகளும், புறநகரில் 484 பேரும் இருப்பதாக புள்ளி விபரக்கணக்குகள் கூறப்பட்டன. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 17 ஆயிரத்து 32 கொலைகள் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சியை அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, ஒழுங்காக இல்லை என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியதற்கு முதல்வர் ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? “தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, 2001ல் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 422 ஆக இருந்தது. 2011ல் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது. தேசிய குற்ற ஆவணங்கள் கூடம் தயாரித்துள்ள விவரங்களைப் பார்த்தாலும், அகில இந்திய அளவில் குற்றங்கள் கூடி வருவது தெரியவரும்". ஆகவே, குற்ற எண்ணிக்கை விண்ணைத்தொட்டு வருவதற்கு காரணம் கண்டுபிடித்தாகி விட்டது!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பி.டெக் மாணவி ஒருவரின் மீது ஆசிட் வீசப்பட்டதில் அவரது இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இது போல அன்றாடம் பெண்களுக்கு எதிராக கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்பதை புள்ளிவிபரங்களைப் பார்த்தால் புரியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பொருத்தமட்டில் கற்பழிப்பு, மானப்பங்கம், கடத்தல், பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு 1242 மானபங்க வழக்குகளும், 2010 ஆம் ஆண்டு 1405 வழக்குகளும், 2011 ஆம் ஆண்டு 1467 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடத்தல் என்பது 2009 ஆம் ஆண்டு 1113 கடத்தல் வழக்குகளும், 2010 ஆம் ஆண்டு 1464 வழக்குகளும், 2011 ஆம் ஆண்டு 1743 கடத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தல் வழக்குகள் அனைத்தும் பெண் கடத்தல் வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு எதிராக கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், வரதட்சணை மரணம், கணவன் கொடுமை, பெண் குழந்தைகள் இறக்குமதி, வரதட்சணை தடுப்பு சட்டம், பாலியல் கொடுமை என மூன்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 300 வழக்குகளாகும். ஆண்டு தோறும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களில், கடந்த ஆண்டு இறுதி வரை 5012 புகார்கள் மீதான வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
காவல்நிலைய மரணங்கள்
விசாரணை மன்றங்களான காவல் நிலையங்கள் நீதிமன்றங்களாகி வருவது அதிமுக ஆட்சியில் புதிதான விஷயமல்ல.
தமிழகத்தில் கடந்த 17 மாதங்களில் 41 காவல்நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளன. காவல்நிலையங்களில் மட்டும் 28 மரணங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச்சூட்டில் 7 பேர், போலி மோதல் சாவு மூலம் 6 பேர் இறந்துள்ளனர். இந்த மரணங்கள் குறித்து மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தாமல், தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விட்டு அமைதி காக்கிறது. 41 மரணங்களில் காவல்துறையினர் மீது ஒரு வழக்குகூட ப்பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தமிழக அரசு மீது உள்ளது.
வன்கொடுமை வழக்குகள்
தமிழக காவல்நிலைங்களில் பல ஆண்டுகளாக 2 ஆயிரத்து 92 வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த 336 வன்கொடுமை சம்பவங்களில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 18 பெண்கள் உள்ளிட்ட 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் நீதிமன்றங்களில் 3 ஆயிரத்து 568 வன்கொடுமை வழக்குகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் காவல்நிலையங்களில் 2 ஆயிரத்து 92 வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் ஆயிரத்து 20 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2007ம் ஆண்டு 80 கொலைகள், 2008ல் 89 கொலைகள், 2009ல் 95 கொலைகள், 2010ம் ஆண்டு 83 கொலைகள் நடந்தன. 2011ம் ஆண்டு 97 கொலைகள் நடந்துள்ளன. இதில் 4 கொலைகள் நகை, பணத்துக்காக நடந்துள்ளன. 2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஓராண்டு ஆட்சியின் நூறாண்டு சாதனை என இந்த கொலை சம்பவங்களைச் சொல்லலாம்.
கூலிப்படை அதிகரிப்பு
தமிழகத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கூலிப்படைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2010 ஆகஸ்ட் முதல் 2011 ஆகஸ்ட் 31 வரை 16 கொலைகள் நடந்துள்ளன. 2011 ஆகஸ்ட் முதல், 2012 ஆகஸ்ட் 31 வரை ஒன்பது கொலைகள் நடைபெற்றுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 6 மாதத்தில் 31 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் 28 கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2011 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 20 கொலைகள் நடைபெற்றுள்ளன. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை, நாகை மாவட்டம் நாகூர் விடுதலைச் சிறுத்தைகள் நகர செயலாளர் ரெங்கையன் கொலை, விழுப்புரம் மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட துணை செயலாளர் மேகவர்ணன், மதுரையில் அதிமுகவின் 88வது வார்டு செயலாளர் மனோகரன், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் முக்காணி அதிமுக செயலாளர் கண்ணன், தரமணி அதிமுக மகளிர் அணி செயலாளர் பானு,
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ல தோப்புவளசை என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக்கொலை, பரமக்குடியில் 3 பேர் கொலை, பரமக்குடியில் சார்பு ஆய்வாளர் ஆல்வின் கொலை, திண்டுக்கல் சிறைச்சாலை வாசலில் கொல்லப்பட்ட ஜாகீர் உசேன், மதுரையில் பெட்ரோல் குண்டுவீசி 7 பேர் கொலை, பாமக இளைஞரணி செயலாளர் இளஞ்செழியன் படுகொலை, கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் பழனி படுகொலை, திருச்சி ராமஜெயம் கொலை, சிவகங்கையில் அதிமுக மாணவரணி செயலாளர் கதிரேன் உள்ளிட்ட மூன்று பேர் வெட்டிக்கொலை, காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வல்லம் ஊராட்சியை சார்ந்த தேமுதிக மாவட்டப் பிரதிநிதி கண்ணதாசன் ,இவருடைய நண்பரும், தேமுதிக கிளைச் செயலாளருமான சந்துரு, செங்கல்பட்டு நகர தேமுதிக செயலாளர் சுரேஷ், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த தொண்டரணி துணை செயலாளர் பாலாஜி ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளியைச் சேர்ந்த கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் தங்கவேல், விருதுநகரில் அதிமுக நகராட்சி கவுன்சிலர் தங்கப்பாண்டியம்மாள், அவரது கணவர் நாகராஜன் ஆகியோர் படுகொலை என தொடரும் அரசியல் படுகொலைகள் எண்ணிக்கை அதிமுக ஆட்சியில் தான் கூடியுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் தோறும் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களைக் குறிவைக்கும் சமூக விரோதக் கும்பல் அவர்களை கூலிப்படையாக பயன்படுத்துகிறது. நட்புக்கு துவங்கும் கொலைப்படலம் பல லட்ச ரூபாய்களை சம்பாதிக்க வைக்கும் வகையில் மாற்றம் தருவதால் பலர் தொடர்ந்து கூலிப்படையாக செயல்படுகின்றனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு,தமிழ்நாடு சிறப்புப் படை, பொதுமக்கள் பாதுகாப்பு, பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை, கடலோர காவல் துறை, குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை, பொருளாதார சிறப்புப் பிரிவு, தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி, இரயில்வே காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு,குற்றப் பிரிவு (நுண்ணறிவு), போக்குவரத்துக் காவல் பிரிவு, மதுவிலக்கு அமல் பிரிவு, குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு, பயிற்சிப் பிரிவு என 16 பிரிவுகள் தமிழக காவல்துறையில் உள்ளன. “அறுக்க மாட்டாதவனுக்கு இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாளாம்“ என்ற கிராமசொலவடை போல, இத்தனை பிரிவுகள் இருந்தும் தமிழகத்தில் நடக்கும் சமூகக் குற்றங்கள் குறையவில்லை.
பதில் சொல்வாரா முதல்வர்?
காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆல்வின் சுதனை கொலைக்கரங்களில் இருந்து காக்கத் தவறிய காவல்துறை, பொதுமக்களை எப்படி பாதுகாக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுகிறது. அவரைக் கொலை செய்தவர்கள் இருவரை என்கவுன்டர் மூலம் கொலை செய்துள்ளதன் மூலம் காவல்துறை செயல்படுவதைப் போல காட்டிக் கொள்ளப் பார்க்கிறது. நீதித்துறையின் அதிகாரத்தை காவல்துறை பலமுறை தனது கையில் எடுத்துக்கொண்ட போது குட்டு வாங்கியுள்ளது.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்தவுடன் பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டைத் துவக்கி வைத்தது அவரின் காவல்துறை. ஆறுபேரின் உயிரைப் பறித்த அச்சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற தென்மாவட்ட கலவரங்களும், தேவர் ஜெயந்தியையொட்டி மதுரையில் பெட்ரோல் குண்டுவீச்சில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவங்களும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை தொடர்ந்து மக்களைக் கேட்க வைத்துள்ளது. பதில் சொல்வரா தமிழக முதல்வர்?
- ப.கவிதா குமார்
source: keetru
0 கருத்துரைகள்:
Post a Comment