Sunday, December 30, 2012

பாலியல் பலாத்கார பெண் மரணம்:குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்-பாப்புலர் ஃப்ரண்ட்

KM Shareef
இந்தியாவின் தலைநகரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: இளம்பெண்ணின் மரணம் இந்திய பெண்களின் பாதுகாப்பைக் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. 
 கொடூரமான இச்சம்பவத்தில் அரசுதான் முக்கிய பொறுப்பாளி. எல்லை மாநிலங்களிலும், பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை காண்பதற்கு இச்சம்பவம் அதிகாரிகளுக்கு தூண்டுகோலாக அமையவேண்டும். அங்கேயெல்லாம் குற்றம் புரிவது போலீசும், ராணுவமும் என்பதால் நிலைமை கடுமையானது. இந்திய மக்கள் நீதி கேட்டு வீதிகளில் இறங்கி போராடுவது நல்ல அறிகுறியாகும். 

நீதிக்கான இந்த முழக்கம் உயர் ஜாதியினருக்கான விவகாரத்தில் மட்டுமாக ஒதுங்கிவிடக் கூடாது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை அளிப்பதற்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உணர்ச்சியின் பிரதிபலிப்பாகும். இது கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும். சட்டத்தின் குறைபாடு இல்லை. மாறாக, அதிகாரிகளின் பொறுப்புணர்வில் ஏற்பட்ட வீழ்ச்சியே இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற காரணமாகும். சட்டம் கடுமையாக்கும் பொழுது அவை துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. 

அனைத்து குற்றவாளிகளுக்கு பாடமாகும் விதமாக குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து பிரிவினருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் பாரபட்சமற்ற முறையில் செயல்படவேண்டும் என்று கே.எம்.ஷெரீஃப் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza