Friday, December 21, 2012

துப்பாக்கி பட விவகாரம்: மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


“துப்பாக்கி திரைப்படத்துக்கு தணிக்கைத் துறையினர் வழங்கிய சான்றிதழை வாபஸ் பெற்று, திரைப்படத்தின் சுருள்களைக் கைப்பற்றும்படி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் டி. அப்துல் ரஹீம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். “இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தத் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் அளித்த சான்றிதழை வாபஸ் பெறும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று அவரது மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) விசாரணை நடத்தினர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கர சுப்பு, “துப்பாக்கி திரைப்படம் காரணமாக பெரும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், இந்தத் திரைப்படத்தின் சுருள்களைக் கைப்பற்றும்படி மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் ஐ.எஸ். இன்பதுரை, “இந்தப் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு ஏற்கெனவே முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்” என்று தெரிவித்தார். ஆனால், காட்சிகள் நீக்கப்பட்டன என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதையும் அவர் தாக்கல் செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், “அதற்குள் மத்திய, மாநில அரசுகள் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza