அஹ்மதாபாத்/சிம்லா:குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க வெற்றிப் பெற்றுள்ளது. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை மோடியின் தலைமையில் தொடர்ச்சியாக 3-வது முறையாக பா.ஜ.க அரசு ஆட்சி கட்டிலில் அமருகிறது. கடுமையான போட்டி நிலவிய இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது காங்கிரஸ் கட்சி.
குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வென்றதை விட இது இரண்டு இடங்கள் குறைவு. அதே நேரம் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளைக் கூடுதலாகப் பெற்று 61 இடங்களை கைப்பற்றியுள்ளது.
மணி நகர் தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வர் நரேந்திர மோடி 86,373 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேதா பட்டை வென்றார். மோடியால் பழிவாங்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவிதான் சுவேதா. மணிநகரில் தனது தோல்வி சத்தியத்தின் தோல்வியாக இருக்கும் என்று சுவேதா ஏற்கனவே கூறியிருந்தார். அதுவே நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அர்ஜும் மோத்வாடியா தோல்வியடைந்துள்ளார். பாஜக விலும் சில பிரபலங்கள் தோல்வியடைந்துள்ளனர்.
மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய கேஷுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. இமாச்சல் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த பிரேம் குமார் டுமல் வெற்றி பெற்றாலும் தமது கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் யார் முதல்வராக தேர்தெடுக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.
மாநில சட்டசபையில் உள்ள 68 இடங்களில், காங்கிரஸ் கட்சி 36 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து சுயேட்சைகளும், லோக் தந்திரிக் பார்டியின் வேட்பாளரும் வெற்றிப் பெற்றுள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு 41 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் தலைவர் வீர பத்ரசிங்கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு பா.ஜ.கவுக்கு பலனை பெற்றுத் தரவில்லை. வீரபத்ரசிங் சிம்லா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க முதல்வரான பி.கே.துமல் ஹாமிர்பூர் தொகுதியில் வெற்றிப்பெற்றாலும், அவரது அமைச்சரவை சகாக்கள் 4 பேர் தோல்வியடைந்துள்ளன
0 கருத்துரைகள்:
Post a Comment